The Kerala Story: OTT-யில் வாங்க ஆள் இல்லை... சதி செய்கிறார்கள்... தி கேரளா ஸ்டோரி இயக்குநர் கதறல்
சென்னை: இந்தியில் உருவான தி கேரளா ஸ்டோரி திரைப்படம் மே 5ம் தேதி திரையரங்குகளில் வெளியானது.
சுதிப்தோ சென் இயக்கிய இந்தப் படத்தில் ஆதா ஷர்மா, சித்தி இத்னானி உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
இந்தப் படத்துக்கு தமிழ்நாடு, மேற்குவங்கம் மாநிலங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியதால் திரையரங்குகளில் திரையிடப்படவில்லை.
இந்நிலையில், தற்போது ஓடிடி தளங்களிலும் தி கேரளா ஸ்டோரி படம் புறக்கணிக்கப்படுவதாக இயக்குநர் சுதிப்தோ சென் குற்றம்சாட்டியுள்ளார்.
தி கேரளா ஸ்டோரி படத்தை புறக்கணிக்கும் ஓடிடி தளங்கள்:சுதிப்தோ சென் இயக்கிய தி கேரளா ஸ்டோரி திரைப்படம் கடந்த மாதம் 5ம் தேதி திரையரங்குகளில் வெளியானது. இந்தியில் உருவான இந்தப் படம் பல மொழிகளிலும் வெளியாகியிருந்தது. ஆதா ஷர்மா, சித்தி இத்னானி உள்ளிட்ட பலர் நடித்த இந்தப் படம், வெளியாகும் முன்பே பல சர்ச்சைகளை சந்தித்தன.

இந்நிலையில், தி கேரளா ஸ்டோரி படத்துக்கு திரையரங்குகளைத் தொடர்ந்து ஓடிடியிலும் பிரச்சினை ஏற்பட்டுள்ளது. திரையரங்குகளில் 300 கோடி வரை வசூலித்த தி கேரளா ஸ்டோரி படத்தை ஓடிடி தளங்கள் வாங்க மறுப்பதாக இயக்குநர் சுதிப்தோ சென் குற்றம்சாட்டியுள்ளார். "தங்கள் படத்துக்கு எதிராக சதி செய்யப்படுவதாகவும், எங்களை தண்டிப்பதற்காக தி கேரளா ஸ்டோரி படத்தை ஓடிடி நிறுவனங்கள் புறக்கணிப்பதாகவும்" கூறியுள்ளார்.
மேலும், ஓடிடியில் வெளியிட விருப்பம் தெரிவித்தும் இதுவரை எந்த நிறுவனங்களும் வாங்க முன்வரவில்லை என வேதனை தெரிவித்துள்ளார். தி கேரளா ஸ்டோரி படத்தின் வெற்றியை ஏற்றுக்கொள்ள முடியாதவர்கள் தான் தற்போது ஓடிடி ரைட்ஸ் கிடைக்கக் கூடாது என சதி செய்கின்றனர் என காட்டமாக ரியாக்ட் செய்துள்ளார். ஆனால், இதற்கெல்லாம் காரணம் தி கேரளா ஸ்டோரி திரைப்படம் திட்டமிட்டு மத வெறுப்பை பரப்பியது தான் சினிமா விமர்சகர்கள் பதிலடி கொடுத்து வருகின்றனர்.
அதாவது கேரளாவில் உள்ள 32000 இந்து பெண்கள் முஸ்லிமாக மதமாற்றம் செய்யப்பட்டுள்ளனர் என சித்தரிக்கப்பட்டிருந்தது. மேலும், அவர்கள் சிரியா நாட்டிற்கு கடத்தப்பட்டு தீவிரவாத செயல்களில் ஈடுபடுத்தப்படுவதாகவும், அதற்கு மறுப்பவர்கள் பாலியல் அடிமைகளாக மாற்றப்படுகின்றனர் எனவும் காட்டப்பட்டிருந்தது. இதனால், தி கேரளா ஸ்டோரி திரைப்படம் மத வெறுப்பை ஏற்படுத்தி மக்களை பிளவுப்படுத்துகிறது என விமர்சனங்கள் எழுந்தன.
லவ் ஜிகாத் என கற்பனைக்கும் எட்டாத பல சம்பவங்கள் இப்படத்தில் இடம்பெற்றிருந்தன. இதனையடுத்து இந்தப் படத்துக்கு தடை கேட்டு கேரளா உயர்நீதிமன்றம், உச்ச நீதிமன்றங்களில் வழக்குகளும் தொடரப்பட்டன. ஆனால், படத்துக்கு தடைவிதிக்க நீதிமன்றங்கள் மறுப்புத் தெரிவித்துவிட்ட நிலையில், தி கேரளா ஸ்டோரி கதை முழுக்க முழுக்க கற்பனையானது என இயக்குநர் சுதிப்தோ சென் கூறியிருந்தார்.
இதனையடுத்து 32000 பெண்கள் மதமாற்றம் செய்யப்பட்டனர் போன்ற வசனங்கள் தி கேரளா ஸ்டோரி படத்தில் இருந்து நீக்கப்பட்டன. ஆனால், தமிழ்நாடு, மேற்குவங்கம் மாநிலங்களிலும் கேரளாவின் சில பகுதிகளிலும் தி கேரளா ஸ்டோரி திரையிடப்படவில்லை. அதேநேரம் பாஜக ஆளும் ஒருசில மாநிலங்களில் வரி விலக்கு அளிக்கப்பட்டு திரையிடப்பட்டது. முன்னதாக இந்தப் படத்துக்கு எதிராக கமல்ஹாசன், நவாசுதீன் சித்திக், இயக்குநர் அனுராக் காஷ்யப், ஏஆர் ரஹ்மான் ஆகியோர் கருத்துத் தெரிவித்து இருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











