Ganguly - கங்குலி வாழ்க்கை வரலாறு படம்?.. ஹீரோ யார் தெரியுமா?
சென்னை: Sourav Ganguly Bio Pic (சௌரவ் கங்குலி) இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கங்குலியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகப்போவதாக தகவல் வெளியாகியிருக்கிறது.
பிரபலங்களின் வாழ்க்கை வரலாறை திரைப்படமாக எடுக்கும் பாணி இந்திய சினிமாவில் அண்மைக்காலமாக அதிகரித்திருக்கிறது. அவர்களது வாழ்க்கையில் நடந்ததை திரையில் காட்சிகளாக பார்ப்பது நல்ல அனுபவம் என்பதால் ரசிகர்களும் அப்படிப்பட்ட படங்களுக்கு தங்களது பலத்த வரவேற்பை கொடுத்துவருகின்றனர். குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம், கிரிக்கெட் வீரர் தோனி உள்ளிட்டோரின் வாழ்க்கை வரலாறு படங்கள் வெளியாகியிருக்கின்றன.

தோனி:
வாழ்க்கை வரலாறு படங்களில் முக்கியமான படமாக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் தோனியின் வாழ்க்கை வரலாறு படம்தான் ரசிகர்களால் கருதப்படுகிறது. ஏனெனில் அவருக்கு இருக்கும் ரசிகர்கள் கூட்டம் தோனி படத்தை பார்த்து மெகா ஹிட்டாக்கினர். இன்னும் சொல்லப்போனால் அந்தப் படத்துக்கு பிறகுதான் வாழ்க்கை வரலாறு படங்களின் மீது திரைத்துறையினர் கூடுதல் கவனத்தை செலுத்த ஆரம்பித்தனர்.

1983:
அதேபோல் இந்திய கிரிக்கெட் அணி முதல்முறையாக 1983ஆம் ஆண்டு உலகக்கோப்பையை மேற்கு இந்திய தீவுகள் அணியை வீழ்த்தி பெற்றது. அதனை மையப்படுத்தியும் 1983 என்ற பெயரில் படம் வெளியானது. அதில் கபில் தேவ் கதாபாத்திரத்தில் ரன்வீர் சிங், ஸ்ரீகாந்த் கதாபாத்திரத்தில் ஜீவா உள்ளிட்டோர் நடித்திருந்தனர். படமும் டீசண்ட்டான வரவேற்பைப் பெற்றது குறிப்பிடத்தக்கது.
தமிழில் ஜெயலலிதா வாழ்க்கை வரலாறு:
தமிழை பொறுத்தவரை முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு தலைவி என்ற பெயரில் படமாகவும் (இயக்கம் ஏ.எல்.விஜய்), குயின் என்ற பெயரில் வெப் சீரிஸாகவும் (இயக்கம் கௌதம் மேனன்) வெளியானது. இரண்டுமே சுமாரான வரவேற்பைப் பெற்றது கவனிக்கத்தக்கது. அதன் பிறகு தமிழில் பெரிதாக யாரின் வாழ்க்கை வரலாறும் படமாகவில்லை. அதேசமயம் உண்மை சம்பவங்களை அடிப்படையாக வைத்து படங்கள் உருவாவது அதிகரித்துள்ளது.

கங்குலி வாழ்க்கை வரலாறு:
இந்நிலையில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், பிசிசிஐயின் முன்னாள் தலைவருமான கங்குலியின் வாழ்க்கை வரலாறு திரைப்படமாகப்போவதாக தகவல் வெளியாகியுள்ளது. அதில் கங்குலியாக பிரபல பாலிவுட் நடிகர் ரன்பீர் கபூர் நடிக்கலாம் எனவும், லவ் ரஞ்சன் தயாரிக்கலாம் என்றும் கூறப்படுகிறது. அதற்கான பேச்சுவார்த்தை விரைவில் தொடங்கவிருப்பதாகவும் பாலிவுட்டில் பேச்சு ஒன்று ஓடிக்கொண்டிருக்கிறது.

ஆக்ரோஷ கங்குலி:
கங்குலி எப்போதுமே ஆக்ரோஷமாக விளையாடக்கூடியவர். இந்திய கிரிக்கெட் அணிக்கு அக்ரஸிவ் முகமும் இருக்கிறது என்பதை உலக கிரிக்கெட்டுக்கு கங்குலி வந்த பிறகே தெரிந்தது. குறிப்பாக லார்ட்ஸில் வைத்து தனது டிஷர்ட்டை அவர் கழற்றி சுற்றிய சம்பவம் இன்றுவரை ஃபயர் மெட்டீரியல். எனவே கங்குலியின் வாழ்க்கை வரலாறு படமாகும்பட்சத்தில் அதுதொடர்பான காரணங்களும் தெரியவரும் என்பதால் ரசிகர்கள் இந்தப் படத்துக்கு ஆவலோடு இருப்பதாக கமெண்ட்ஸ் செய்துவருகின்றனர்.


Click it and Unblock the Notifications











