5 வருட ரகசிய காதல்.. வாழ்க்கையை மாற்றிய மனைவி.. ஜெயராமின் காதல் கதை!
சென்னை: என்ன கதாபாத்திரம் கொடுத்தாலும், அந்த கதாபாத்திரத்திற்கு உயிரூட்டி விடுவார் நடிகர் ஜெயராம். இவர் நடித்த ozler, காந்தாரா சாப்டர் 1, மிராய் என இந்த காலத்து ரசிகர்களும் கொண்டாடும் நடிகராக இருக்கிறார். இந்த செய்தியில் இவரின் ரகசிய காதல் கதையை பார்க்கலாம்.
தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி மற்றும் சமஸ்கிருதம் என பல மொழிகளில் சுமார் 200க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்துள்ளார் ஜெயராம். மலையாளத்தில் 160க்கும் மேற்பட்ட படங்களிலும் தமிழில் 38க்கும் மேற்பட்ட படங்களிலும் நடித்துள்ளார். ஜெயராம் மலையாள நடிகராக இருந்தாலும், மலையாளத்திற்கு அடுத்தபடியாக தமிழில் தான் அனைத்து முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்துள்ளார்.

நடிகர் ஜெயராம்: பத்ம ஸ்ரீ விருது, கேரள அரசின் விருது, தமிழக அரசின் விருது என எண்ணிக்கையில் அடங்காத பல விருதுகளை பெற்று இருக்கும் ஜெயராம், முதன் முதலில் மலையாளத்தில் 'pottan' என்கிற திரைப்படத்தில் நடித்தார். க்ரைம் த்ரில்லர் கதைக்களத்தை கொண்ட இந்த படம் அவருக்கு நல்ல பெயரை பெற்றுத்தந்தது. அந்த படத்தை தொடர்ந்து பல திரைப்படங்களில் நடித்து வந்த ஜெயராம், அர்ஜூன், பானுப்பிரியா நடித்த கோகுலம் படத்தில் நடித்து தமிழில் என்ட்ரி கொடுத்தார். ஆனால், இவருக்கு பெயர் சொல்லும் திரைப்படங்களாக அமைந்தது தெனாலி, பஞ்சதந்திரம், துப்பாக்கி, உத்தமவில்லன் மற்றும் பொன்னியின் செல்வன்.
முதல் படம்: அண்மையில் ஜெயராம், யூடியூப் சேனல் ஒன்றில் தனது காதல் கதை பற்றி வெளிப்படையாக பேசி இருந்தார். அதில், நான் சினிமாவில் பிரபலமாவதற்கு முன்பே என் மனைவி பார்வதி பல வெற்றிப்படத்தை கொடுத்த ஸ்டார் நடிகை. நான் அப்போது தான் சினிமாவில் நுழைந்து சின்ன சின்ன ரோல்களில் நடித்து வருகிறேன். முதன் முதலில் நானும் பார்வதியும் 'அபரன்' படத்தில்தான் சேர்ந்து நடித்தோம். அந்த படத்தில் பார்வதி எனக்கு சகோதரியாக நடித்திருந்தார்.
5 வருட ரகசிய காதல்: அதே ஆண்டே இருவரும் ஜோடி போட்டு 'விட்னஸ்' படத்தில் நடித்தோம். அப்போது தான் அவருடன் பேசி பழக அதிக வாய்ப்பு கிடைத்தது. ஒருவருக்கு ஒருவர் பிடித்துப்போனதால், தைரியமாக என் காதலை அவரிடம் சொன்னேன். அவருக்கும் என் மீது நல்ல மரியாதையும், அன்பும் இருந்ததால் சம்மதம் என்றார். ஒருவரை ஒருவர் காதலித்த போதும், அந்த விஷயம் வேறு யாருக்கும் தெரியாதபடி இருவரும் ரகசியமாக 5 ஆண்டுகள் காதலித்தோம். இருவரும் சேர்ந்து கிட்டத்தட்ட 12 படங்களில் ஜோடியாக நடித்து இருக்கிறோம். ஒரு சில இயக்குநர்களுக்கு எங்களின் காதல் விஷயம் தெரியும். அவர்கள் எங்களுக்கு உதவி செய்தார்கள். இந்த காலத்தில் இருப்பது போல, ஃபோன் இல்லாததால், கேசட் மூலமாக இருவரும் பேசுவோம்.

குடும்பத்தில் எதிர்ப்பு: அதன் பின் இருவரும் திருமணம் செய்துகொள்ள முடிவு செய்தோம். வழக்கமாக காதலுக்கு வரும் எதிர்ப்பு போலவே எங்கள் திருமணத்திலும் எதிர்ப்பு இருந்தது. ஆனால், இருவரும் பிடிவாதமாக இருந்ததால்,1992 ஆம் ஆண்டு திருமணம் நடந்தது. திருமணத்திற்கு பிறகு என்னையும், என் மகள், மகனை கவனித்து வருகிறாள். நானும், என் குடும்பமும் மகிழ்ச்சியாக இருப்பதற்கு காரணம் பார்வதி தான் என்று அந்த பேட்டியில் பேசி உள்ளார். ஜெயராம் - பார்வதி தம்பதியின் மகன் காளிதாஸ் 'மீன் குழம்பும் மண் பானையும்' என்கிற படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகம் ஆனார். கடந்த ஆண்டு தனுஷூடன் இணைந்து ராயன் படத்தில் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருந்தார். ஜெயராமின் மகள் மாளவிகாவுக்கும் சமீபத்தில் தான் திருமணம் நடந்தது. அனைவரும் பார்த்து மெச்சும் தம்பதிகளாக ஜெயராம், பார்வதி தம்பதியினர் உள்ளனர்.


Click it and Unblock the Notifications











