கடைசி வரை விஷால் கழுத்தில் தொங்கிக் கொண்டிருந்த கத்தி.. மார்க் ஆண்டனி திட்டமிட்டபடி வெளியாகுமா?
சென்னை: மார்க் ஆண்டனி படத்தை வெளியிட விதிக்கப்பட்ட தடையை சென்னை உயர்நீதிமன்றம் நீக்கி உத்தரவிட்டுள்ளது.
வாங்கிய கடனை திரும்ப செலுத்தாததால் விஷால் நடித்த திரைப்படத்தை வெளியிட தடை விதிக்க வேண்டும் என்று லைகா நிறுவனம் சென்னை உயர்நீதிமன்றத்தில் புகார் அளித்தது.

நடிகர் விஷால், தனது விஷால் பிலிம் பேக்டரி நிறுவனத்திற்காக சினிமா பைனான்சியர் அன்புச்செழியனின் கோபுரம் பிலிம்ஸ் நிறுவனத்திடம் பெற்ற 21 கோடியே 29 லட்சம் ரூபாய் கடனை, லைகா நிறுவனம் ஏற்றுக் கொண்டு, செலுத்தியது.
உயர்நீதிமன்றத்தில் வழக்கு: ஆனால் அந்த தொகையை விஷால் திருப்பி தராததால் லைகா நிறுவனம் நீதிமன்றத்தில் முறையிட்டது. வழக்கை விசாரித்த தனி நீதிபதி, 15 கோடி ரூபாயை டெபாசிட் செய்ய உத்தரவிட்டிருந்தார். இந்த வழக்கு கடந்த வாரம் விசாரணைக்கு வந்தபோது, உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின்படி 15 கோடி ரூபாயை நீதிமன்றத்தில் செலுத்தாமல் இருந்தது, சொத்து விவரங்களை தாக்கல் செய்யாதது குறித்து நேரில் ஆஜராகி விளக்கமளிக்க விஷாலுக்கு உத்தரவிட்ட உயர் நீதிமன்றம், அவர் நடித்துள்ள மார்க் ஆண்டனி படத்தை வெளியிட தடை விதித்து உத்தரவிட்டது.
நீதிபதி அடுக்கடுக்கான கேள்வி: இந்த வழக்கு இன்று நீதிபதி பிடி ஆஷா முன் விசாரணைக்கு வந்தது, அப்போது விஷால் இதுவரை 15 கோடி ரூபாயை உயர் நீதிமன்றத்துக்கு செலுத்தவில்லை, தன்னிடம் பணம் இல்லை என கூறினார். அதே நாளில் ஒரு கோடி ரூபாயை மினி ஸ்டூடியோவிடம் பெற்றுள்ளார் என நடிகர் விஷாலின் செயல்பாடு குறித்து நீதிபதி அடுக்கடுக்கான கேள்விகளை முன்வைத்தார்.

விஷால் பதில்: இதற்கு பதிலளித்த விஷால் தரப்பு வழக்கறிஞர், தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து மேல் முறையீடு செய்யப்பட்டதால் சொத்து விவரங்களை தாக்கல் செய்யவில்லை என்றும், நிதி ஆதாரம் இல்லை எனக் கூறிய நாளில் விஷாலின் வங்கிக் கணக்கில் 91 ஆயிரம் ரூபாய் மட்டுமே இருந்தது என்றும் தெரிவித்தார்.
தடையில்லை: இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், மினி ஸ்டூடியோ தரப்பில், 60 கோடி செலவு செய்து மார்க் ஆண்டனி படத்தை தயாரித்து, 1400 ஸ்கிரீனில் வெளியாக உள்ளது. படத்துக்கு விதிக்கப்பட்ட தடையை நீக்க வேண்டும் என கேட்டுக் கொள்ளப்பட்டது. இதனை ஏற்ற நீதிபதி, மார்க் ஆண்டனி படத்தின் தயாரிப்பில் விஷாலுக்கு தொடர்பு இல்லை என்பதால் படத்தை வெளியிட அனுமதி அளித்து உத்தரவிட்டார்.


Click it and Unblock the Notifications











