மாமன்னன் படத்துக்கு இடைக்கால தடை விதிக்க உயர் நீதிமன்றம் மறுப்பு!
சென்னை: மாமன்னன் படத்துக்கு தடை விதிக்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
பரியேறும் பெருமாள், கர்ணன் போன்ற பிளாக் பஸ்டர் ஹிட்டடித்த படத்தை இயக்கிய மாரி செல்வராஜ் இயக்கிய மாமன்னன் படம் நாளை திரையரங்கில் வெளியாக உள்ளது.
இதில் உதயநிதி ஸ்டாலின், கீர்த்தி சுரேஷ்,வடிவேலு,பகத் பாசில் ஆகியோர் நடித்துள்ளனர். இப்படத்தின் டிரைலர் மக்களிடையே மிகப்பெரிய அளவில் வைரலானது.
உயர்நீதிமன்றத்தில் மனு: ஓ.எஸ்.டி. பிலிம்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் ராமசரவணன் மாமன்னன் படத்திற்கு தடைவிதிக்கக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், உதயநிதியை நாயகனாக நடிக்க, நாயகிகளாக நடிகைகள் ஆனந்தி, பாயல் ராஜ்புத் மற்றும் யோகிபாபு நடிக்க, இயக்குனர் கே.எஸ்.அதியமான் இயக்கத்தில், ஏஞ்சல் என்ற படத்தை தயாரிக்க முடிவு எடுக்கப்பட்டு, 2018ம் ஆண்டு படப்பிடிப்பு தொடங்கியதாகவும், 80 சதவீத படப்பிடிப்பு நிறைவடைந்து விட்டதாக கூறியுள்ளார்.

ஏஞ்சல் படத்தில்: இருபது சதவீத படப்பிடிப்பு நடத்த வேண்டியுள்ள சூழலில், ஏஞ்சல் படத்தை நிறைவு செய்யாமல், மாமன்னன் படத்தில் நடித்துள்ள உதயநிதி, அந்த படமே தனது கடைசி படம் என கூறியுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும்,ஏஞ்சல் படத்திற்காக இதுவரை 13 கோடி ரூபாய் செலவிட்டுள்ள நிலையில், ஏஞ்சல் படத்தை முடிக்காமல் மாமன்னன் படத்தை வெளியிட்டால் தமக்கு மிகப்பெரிய இழப்பு ஏற்படும் என மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
25 கோடி இழப்பீடு: ஒப்பந்தப்படி, இன்னும் எட்டு நாட்கள் கால்ஷீட் தராமல் உதயநிதி புறக்கணித்து வருவதால், ஏஞ்சல் படத்தின் எஞ்சிய படப்பிடிப்பை நிறைவு செய்து தர வேண்டுமெனவும், 25 கோடி ரூபாய் இழப்பீடாக வழங்க வேண்டுமெனவும் கோரிக்கை விடுத்துள்ளார். அதுவரை மாமன்னன் படத்தை வெளியிட இடைக்கால தடை விதிக்க வேண்டுமென கேட்டிருந்தார்.
இருதரப்பு வாதம்: இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, ரெட்ஜெயினட் மூவிஸ் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, ரெட் ஜெயின்ட் மூவிஸ் லிமிட்டெட் கூட்டு நிறுவனம் மூலம் மாமன்னன் திரைப்படம் தயாரிக்கப்பட்டதாகவும், ஏஞ்சல் திரைப்படத்திற்கு வாய்மொழி ஒப்பந்தம் மட்டும்தான், அதுவும் ரெட் ஜெயின்ட் மூவிஸ் நிறுவனத்திடம்தான் என்றும் வாதிட்டார்.
தடைவிதிக்க முடியாது: மேலும்,ரெட் ஜெயிண்ட் மூவிஸ் நிறுவனத்தில் உதயநிதி ஸ்டாலின் பார்ட்னர் இல்லை என்றும் தெரிவித்தார். இருதரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி மாமன்னன் திரைப்படத்துக்கு இடைக்கால தடை விதிக்க முடியாது என உத்தரவிட்டார். விரிவான உத்தரவு மாலை இணையதளத்தில் வெளியிடப்படும் என நீதிபதி தெரிவித்திருந்தார்.


Click it and Unblock the Notifications











