விஜய்சேதுபதி சொன்னதற்காக வேலையை ராஜினாமா செய்த மனிதன்...என்ன செய்றார் தெரியுமா ?
சென்னை: தற்செயல்களால்,நற்செயல்களால் ஆனது நம் இம்மானுட வாழ்வு. அப்படிப்பட்ட தற்செயல்களில், நற்செயல்களால் நம் மனதுக்குப் பிடித்த ஏதாவது ஒன்றை பொற்செயலாய் மாற்றும் இயல்பு கொண்ட மனிதர்கள் சிலர் மட்டும் தான் .
சமூகத்துக்கு நல்ல காரியங்கள் செய்பவர்களில் பெரும்பாலானோர் விளம்பரத்தை விரும்பாதவர்களாகவே இருக்கிறார்கள். ஆனால் அவர்களது தன்னடக்கத்தை புறம்தள்ளி, அச்செயலை வெளிக்கொண்டு வந்தால்தால்தான், அதை முன்னுதாரணமாகக் கொண்டு இன்னும் சிலர் வயலில் இறங்குவார்கள் என்பதற்காகவே இந்த பதிவு என்கிறார் வீரராஹவன்
'மேற்குத் தொடர்ச்சி மலை','கடைசி விவசாயி'என்கிற இரட்டை காவியப் படங்களைத் தயாரித்த விஜய் சேதுபதி கடந்த மூன்று ஆண்டுகளாக, சத்தமில்லாமல் செய்து வரும் சாதனை ஒன்றைப் பற்றிக் கேள்விப்பட்டப்போது சிலிர்ப்பாக இருந்தது.

3 வாட்ஸப் குழுக்கள்
கடந்த மூன்று ஆண்டுகளில் தமிழ் சமூகத்தைச் சேர்ந்த ஒரு லட்சத்துக்கும் மேற்பட்டோர் வேலை வாய்ப்புப் பெற உந்து சக்தியாக இருந்திருக்கிறார் ஒரு சாமான்ய மனிதன். அவர் தான் வீரராஹவன் அவர் செய்த அச்செயல் இன்னும் பல்கிப்பெருகி இன்னும் பல லட்சம் பேர் பயனடையக் காத்திருக்கிற ஆச்சர்யமும் நிகழ்ந்துகொண்டேயிருக்கிறது.பெயர் இ.பா.வீரராஹவன். பாண்டிச்சேரியைச் சேர்ந்த சமூக ஆர்வலர். 2016ம் ஆண்டு துவங்கி 3 வாட்ஸப் குழுக்கள் மூலம் தனது சக்திக்கேற்ற வகையில் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கித்தருகிறார். 2019 வரை அப்படி அவரால் வேலை வாய்ப்புப் பெற்றவர்களின் எண்ணிக்கை 3,345ஐ தொடுகிறது. சாதனை சின்னது என்றாலும் மிகவும் பாராட்ட தக்கது.

வாழ்வில் நடந்த அற்புதம்
இத்தகவலை அறிந்த சன் டி.வி சமூக செயல்பாட்டாளர்களை ஊக்குவிக்கும் விதமாக 'நம்ம ஊரு ஹீரோ' நிகழ்ச்சியில் அவரை சிறப்பித்து கவுரவிக்கிறது. அந்நிகழ்ச்சியின் தொகுப்பாளர் விஜய் சேதுபதி இந்த மனிதரை வியந்து பார்க்கிறார். வீரராஹவன் இந்த நிகழ்வை பற்றி கூறும் பொழுது ...''நம்ம ஊரு ஹீரோ நிகழ்ச்சியில் விஜய் சேதுபதி சாரை தற்செயலாக சந்தித்தது என் வாழ்வில் நடந்த அற்புதம் என்றே சொல்வேன். பொருளாதார ரீதியாக வலுவாக இல்லாத நான், அப்போது மத்திய அரசு ஆசிரியர் பணியில் இருந்துகொண்டு பகுதிநேர சமூக சேவையாகவே அதைச் செய்து வந்தேன்.

மிகவும் அழுத்தமாகச் சொன்னார்
அந்நிகழ்ச்சியின்போதும் அது முடிந்தபிறகும் என்னிடம் மிகவும் அக்கறையாகப் பேசிய விஜய் சேதுபதி ," நீங்க செய்ற இந்த சேவையை முழு நேரமாகத் தொடர என்னால முடிஞ்ச எல்லா உதவிகளையும் செய்றேன்' என்று மிகவும் அழுத்தமாகச் சொன்னார். அன்னைக்கு அவர் சொன்ன அந்த வார்த்தைகள் எனக்கு மந்திரச் சொற்கள் மாதிரியே பட்டது. அவர் வார்த்தைகளை நம்பி, உடனே என் வேலையை ராஜினாமா செஞ்சேன்.

சரியான தேதியில் சம்பளப்பட்டுவாடா
அந்த நம்ம ஊரு ஹீரோ நிகழ்ச்சி மார்ச் மாதம் 2019 ஒளிபரப்பு செய்யப்பட்ட பிறகு, நாட்டின் பல பகுதியில் இருந்து - வேலை அளிக்கும் நிறுவனங்கள்கிட்ட இருந்து, வேலை தேடுபவர்களிடமிருந்து அழைப்புகள் தொலைபேசி & வாட்ஸப் மூலமாகவும் அதிக அளவில் வந்து சேர்ந்தது. அந்தத் தகவலை விஜய் சேதுபதி சார் கிட்ட சொன்னபிறகு பயங்கர உற்சாகமாகிட்டார். அதற்குத்தானே ஆசைப்பட்டார் விஜய் சேதுபதி? உடனே புதுச்சேரி-தவளக்குப்பத்தில் அலுவலகம் அமைத்து இந்த சேவையை விரிவாக செய்வதற்கான அறங்காவலர் மற்றும் ஊழியர்களை தேர்வு செய்து ஒருங்கிணைத்து அரசின் விதிமுறைகளுக்கு உட்பட்டு தொண்டு நிறுவனமாக செயல்பட உதவினார் . உதவினார் என்று சாதாரணமாகக் கடந்துபோய்விட முடியாது. எனக்கும் என்னைச் சார்ந்த ஊழியர்கள் அத்தனை பேருக்கும் சரியான தேதியில் சம்பளப்பட்டுவாடா செய்துகொண்டே இருந்தார்.

வாட்ஸப் மற்றும் யூட்யூப்
சாரோட ஸ்ட்ராங்கான சப்போர்ட்டால, 14 மார்ச் 2019 ல் புதுச்சேரியில் வள்ளலார் வேலை வாய்ப்பு சேவை இயக்கம் - அலுவலகம் என்னை நிறுவனர் & நிர்வாக அறங்காவலராகக் கொண்டு செயல்படத் துவங்கிச்சு.
அதை தொடர்ந்து தமிழ்நாடு & புதுச்சேரியின் பல்வேறு பகுதியில் இருந்து சிறு,குறு, பெரு மற்றும் பன்னாட்டு நிறுவனங்கள் தங்கள் நிறுவனத்துக்கு தேவையான மனிதவள தேவை விபரங்களை அளித்து அதனை வேலை தேடும் நபர்களிடம் கொண்டு சேர்க்க விரும்பினார். அந்த வேலைவாய்ப்பு தகவல்களை வாட்ஸப் & YOUTUBE மூலம் கொண்டு சேர்த்ததன் பயனாக பல்வேறு பகுதியில் உள்ள நபர்களிடமிருந்து நிறுவனங்களுக்கு அழைப்பும் அதிக அளவின் வர துவங்கியது , அந்த சேவை முற்றிலும் கட்டணமின்றி கிடைக்கப்பெற்றது இரு தரப்பினரும் பயனடைந்தனர்.நீங்களோ உங்கள் நண்பர்களோ, உறவினர்களோ வேலை தேடும் பட்சத்தில் https://www.vvvsi.com இணைய தளத்தில் பதிவு செய்து வாட்ஸப் லிங்க் ஐ பெற்று வேலை வாய்ப்பு தகவல்களை தினமும் பெறலாம் | வேலை கொடுக்கும் நிறுவனமாக இருக்கும் பட்சத்தில் infovvvsi.com மின்னஞ்சல் மூலம் வேலை வாய்ப்பு தகவல்களை தெரிவிக்கலாம்.

முழு உதவி செய்த விஜய்சேதுபதி
தொடர்ந்து மார்ச் 20 - 2022 வரையில் நிறுவனங்களில் இருந்து தினம்தோறும் பெறப்பட்ட தகவல்களின் அடிப்படையில் 1,00,133 படித்த தகுதியான நபர்கள் வேலை பெற்று பயனடைந்து உள்ளனர். தற்போதைய தகவல்களின் அடைப்படையில் வள்ளலார் வேலை வாய்ப்பு சேவை இயக்கத்தை 4 லட்சத்தி 35 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நபர்கள் 1400 க்கும் மேற்பட்ட வாட்ஸப் குழுக்கள் மற்றும் YOUTUBE சேனல் வாயிலாக பின்பற்றி வருகின்றனர் . இந்த சேவை வாயிலாக வேலைதேடும் நபர்கள் மட்டுமின்றி அவர்களின் குடும்பமும் பயனடைய தொடர்ந்து முழு உதவி செய்து வரும் மக்கள் செல்வன் விஜய்சேதுபதி அவர்களுக்கும், நிறுவனங்கள், அரசு அதிகாரிகள், வள்ளலார் வேலை வாய்ப்பு சேவை இயக்கம் தன்னார்வலர்கள், மனிதவள வட்டார அமைப்புகள் அனைவரும் தங்களின் நன்றியை உரித்தாக்குகின்றனர் " என்று உணர்ச்சி ததும்ப முடிக்கிறார் வீரராஹவன்.


Click it and Unblock the Notifications











