சந்தானம்.. யோகிபாபு நடிக்கும் .. டகால்டி திட்டமிட்டபடி 31தேதி ரிலீஸ் !
சென்னை : டகால்டி திரைப்படம் திட்டமிட்டபடி 31ந் தேதி உலகமெங்கும் வெளியாக உள்ளது.
18 ரீல்ஸ் நிறுவனம் சார்பில் திருப்பூரை சேர்ந்த பிரபல விநியோகஸ்தர் எஸ்.பி.செளத்ரி தயாரிப்பில் சந்தானம் நாயகனாக நடித்துள்ள படம்" டகால்டி ". சந்தானம், யோகி பாபு , பெங்காலி திரை உலகின் முன்னணி நடிகை ரித்திகா சென், தெலுங்கு பட உலகின் பிரம்மானந்தம், இந்திப் பட உலகின் தருண் அரோரா, மற்றும் ராதாரவி, ரேகா, மனோபாலா என தமிழ், தெலுங்கு, பெங்காலி, இந்தி என நான்கு மொழி நட்சத்திரங்களும் இப்படத்தில் நடித்துள்ளனர்.

தமிழ்நாடு, ஆந்திரா, மராட்டியம், ராஜஸ்தான் என நான்கு மாநிலங்களில் ஏராளமான பொருட் செலவில் தயாரித்துள்ளார் எஸ்.பி.செளத்ரி. கார்கி பாடல்களையும், பிரபல பாடகர் விஜயநாராயணன் இசையையும், தீபக்குமார் பாரதி ஒளிப்பதிவையும், டி.எஸ்.சுரேஷ் படத்தொகுப்பையும், ஸ்டண்ட் சில்வா சண்டை பயிற்சியையும், ஜாக்கி கலையையும், ஷோபி நடன பயிற்சியையும், சுவாமிநாதன் தயாரிப்பு மேற்பார்வையையும், ரமேஷ்குமார் இணைத்தயாரிப்பையும், கவனித்துள்ளனர்.

கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்குனராக அறிமுகமாகிறார் விஜய் ஆனந்த். இவர் இயக்குனர் ஷங்கரிடம் உதவியாளராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. இப்படம் திட்டமிட்டபடி வரும் 31தேதி உலகமெங்கும் வெளியாக உள்ளது.

சந்தானமும் யோகி பாபுவும் முதல் முறையாக இணைந்து நடித்துள்ளதால் ரசிகர்களிடம் இப்படம் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சந்தானம் படங்களில் உள்ள நகைச்சுவைக்கு மக்களிடம் எப்பொழுதும் எதிர்பார்ப்பு இருக்கும். அதை இந்த படத்திலும் பூர்த்தி செய்துள்ளதாக இயக்குனர் தெரிவித்துள்ளார்.



Click it and Unblock the Notifications











