Maaveeran - என்னது மாவீரன் திருட்டு கதையா?.. யோகிபாபுவுக்கும் தொடர்பு இருக்கா?.. கிளம்பியது புது சர்ச்சை
சென்னை: Maaveeran Story (மாவீரன் கதை) மாவீரன் படத்தின் கதை திருடப்பட்டது என்ற தகவல் வெளியாகி திரையுலகில் சர்ச்சையை ஏற்படுத்தியிருக்கிறது.
மண்டேலா படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் மடோன் அஸ்வின். முதல் படத்திலேயே சிறப்பான கதையை அமைத்து அதன் மூலம் தேசிய விருதையும் வென்றார். யோகிபாபு உள்ளிட்டோர் அந்தப் படத்தில் நடித்திருந்தனர். இதனையடுத்து சிவகார்த்திகேயனை வைத்து மாவீரன் படத்தை இயக்கியிருக்கிறார் மடோன் அஸ்வின். படம் கடந்த 14ஆம் தேதி வெளியானது.

சூப்பர் வரவேற்பு: மிகப்பெரிய எதிர்பார்ப்போடு ரசிகர்கள் படம் பார்க்க திரையரங்குகளுக்கு சென்றனர். அவர்களது எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் விதமாகத்தான் படத்தின் காட்சிகளும், மேக்கிங்கும் அமைந்தது. இதன் காரணமாக படத்துக்கு ரசிகர்கள் சிறந்த வரவேற்பை கொடுத்திருக்கின்றனர். மேலும் மடோன் அஸ்வினின் கரியரில் மாவீரன் படமும் ஹிட் படமாக இணைந்துவிட்டது.
சிவகார்த்திகேயனின் நடிப்பு: படத்தின் கதைக்களம், மேக்கிங் மட்டுமில்லாமல் சிவகார்த்திகேயனின் நடிப்பும் பெரிய அளவில் பேசப்பட்டது. பயந்த சுபாவம் உள்ளவராக கலக்கியவர் ஆக்ஷன் காட்சிகளிலும் பட்டையை கிளப்பியிருந்தார். டாக்டர் படத்துக்கு பிறகு சிவகார்த்திகேயன் நடிப்பில் வித்தியாசம் மாவீரனில் நன்றாகவே தெரிந்தது என்று ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கூறிவருகின்றனர். அதேபோல் வசூலும் நல்ல விதமாகவே இருக்கிறது. இதுவரை 40 கோடி ரூபாய்வரை படம் வசூலித்திருக்கும் என கூறப்படுகிறது.
சர்ச்சை: இப்படி வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் படத்துக்கு வரவேற்பு கிடைத்தாலும் தற்போது புதிய சர்ச்சை ஒன்று எழுந்திருக்கிறது. அதாவது மாவீரன் படத்தின் கதை திருட்டு கதை என்ற தகவல் வெளியாகியிருக்கிறது. அந்தத் தகவலின்படி, பினு சுப்பிரமணியன் என்பவர் வேலாயுதம் படத்தில் இணை இயக்குநராக பணியாற்றியிருக்கிறார். அதுமட்டுமின்றி ப்ரியதர்ஷனிடமும் உதவி இயக்குநராக இருந்திருக்கிறார்.
அப்பார்ட்மெண்ட்: அவர் நான்கு வருடங்களுக்கு முன்னர் அப்பார்ட்மெண்ட் என்ற கதையை எழுதியிருக்கிறார். கதைப்படி ஹீரோ ஒரு எலக்ட்ரீசியன். புளியந்தோப்பு அடுக்குமாடி குடியிருப்பு விவகாரத்தை மையமாக வைத்தும், ஹவுசிங் போர்டில் வீடு வாங்குவதற்காக ஒரு அரசியல்வாதியிடம் பணம் கொடுத்து பினு அலைந்ததை அடிப்படையாக வைத்தும் அந்தக் கதையை எழுதியிருக்கிறார்.
யோகிபாபுதான் ஹீரோ: அந்தக் கதைக்கு யோகிபாபுவை ஹீரோவாக நடிக்க வைத்தால் சரியாக இருக்கும் என நினைத்து மண்டேலா படத்தின் ஒளிப்பதிவாளர் மூலம் யோகிபாபுவை தொடர்புகொண்டு கதையை சொல்லியிருக்கிறார் பினு சுப்பிரமணியன். இதனை கேள்விப்பட்ட வடமாநிலத்தின் ஒரு பைனான்ஸ் நிறுவனம் பினுவை அழைத்து கதையை கேட்டு சத்யஜோதி பிலிம்ஸ் மேற்பார்வையில் அந்தக் கதையை தயாரிக்க ஒத்துக்கொண்டு ஆர்.ஜே.பாலாஜி அல்லது சூரியை வைத்து இந்தக் கதையை எடுக்கலாம் என திட்டமிட்டிருக்கிறது. மேலும் இந்தக் கதையை பினு பதிவு செய்து வைத்திருப்பதாகவும் கூறப்படுகிறது.

அப்பார்ட்மெண்ட்தான் மாவீரனா?: ஆனால் இதற்கிடையே மாவீரன் படம் ரிலீஸாகவிட்டது. மாவீரன் படத்தை பார்த்த பினு சுப்பிரமணியனோ தன்னுடைய கதையை கொஞ்சமே கொஞ்சம் பட்டி டிங்கரிங் பார்த்து எடுத்து வைத்திருக்கிறார்களே என இடிந்துபோய்விட்டதாக கூறப்படுகிறது. மேலும் படத்தின் ஓடிடி விற்பனையிலாவது தனக்குரிய அங்கீகாரத்தை படக்குழு வழங்குமா என்ற எதிர்பார்ப்பிலும் அவர் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
யோகிபாபு மூலம்தான் எல்லாம் நடந்ததா?: இதற்கிடையே மண்டேலா படத்தின் கேமராமேன் மற்றும் யோகிபாபு மூலம்தான் இந்தக் கதை மடோன் அஸ்வின் கவனத்துக்கு சென்றிருக்கலாம். ஏனெனில் படத்தில்கூட யோகிபாபு பேட்ச் ஒர்க் என்ற பெயரில் எலக்ட்ரீசியன், ப்ளம்பிங் என பல வேலைகளை செய்யும்படிதான் வருகிறார். எனில் தற்போது வெளியாகியிருக்கும் தகவலுக்கும், யோகிபாபுவுக்கும் சம்பந்தம் இருக்குமோ என கேள்வி எழுப்பும் ரசிகர்கள் இதுகுறித்து அவரே விளக்கமளித்தால்தான் இந்தப் பிரச்னைக்கு முற்றுப்புள்ளி வரும் எனவும் கூறிவருகின்றனர்.


Click it and Unblock the Notifications











