பண்ணையாரை பழிவாங்கிய குடும்ப பகை… சூழ்ச்சியில் வீழ்ந்த பாண்டி: பேட்டைக்காளி 3 எபிசோட்கள் விமர்சனம்
சென்னை: வெற்றிமாறன் தயாரித்துள்ள பேட்டைக்காளி வெப் சீரிஸ், ஆஹா ஓடிடியில் வெள்ளிக்கிழமைதோறும் ஒவ்வொரு எபிசோடாக வெளியாகிறது.
பேட்டைக்காளி வெப் சீரிஸின் முதல் இரண்டு எபிசோட்கள் கடந்த வாரங்களில் வெளியான நிலையில், தற்போது மூன்றாவது எபிசோட் வெளியாகியுள்ளது.
முதல் இரண்டு எபிசோட்களை போலவே மூன்றாவது எபிசோடிலும் பல திருப்பங்கள் நடந்துள்ளது கதையை சூடு பிடிக்க வைத்துள்ளது.

பேட்டைக்காளி வெப் சீரிஸ்
வெற்றிமாறன் தனது 'கிராஸ் ரூட் ஃபிலிம் கம்பெனி' மூலம் 'பேட்டைக்காளி' வெப் சீரிஸ்ஸை தயாரித்துள்ளார். ராஜ்குமார் இயக்கியுள்ள இந்த பேட்டைக்காளி வெப் சீரிஸ், ஜல்லிக்கட்டை பின்னனியாகக் கொண்டு உருவாகியுள்ளது. வெள்ளிக்கிழமை தோறும் ஒவ்வொரு எபிசோடாக வெளியாகும் பேட்டைக்காளி வெப் சீரிஸ், ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில், பேட்டைக்காளி மூன்றாவது எபிசோட் இந்த வாரம் வெளியாகியுள்ளது.

முதல் இரண்டு எபிசோட்கள் கதை சுருக்கம்
சிவகங்கை அருகேயுள்ள தாமரைக்குளம் - முல்லையூர் கிராமங்களை பின்னணியாகக் கொண்டு ஜல்லிக்கட்டுப் போட்டிக்குள் காணப்படும் ஆதிக்க அரசியலை பேசுகிறது பேட்டைக்காளி வெப் சீரிஸ். தாமரை குளத்தைச் சேர்ந்த பண்ணையார் செல்வசேகரனான வேல ராமமூர்த்திக்கு, ஜல்லிக்கட்டில் பிடிபடாத தனது காளை தான் முதல் கெளரவம். ஆனால், அவரது மாட்டைபிடித்து பண்ணையாரை அவமானப்படுத்துகிறார் முல்லையூரைச் சேர்ந்த பாண்டியாக வரும் கலையரசன். அதோடு பிடிபட்ட காளையும் இறந்துவிட கலையரசனை கொலை செய்ய வேண்டும் என தனது மகன் வீரசேகரனை தூண்டி விடுகிறார் பண்ணையார்.

பாண்டியை கொலை செய்த வீரசேகரன்
பண்ணையாரின் திட்டப்படி பாண்டி கொலை செய்யப்படுகிறார். மருமகன் பாண்டியை பண்ணையார் தான் கொலை செய்திருக்க வேண்டும் என அவரை பழிவாங்க துடிக்கிறார் முத்தையாவாக வரும் கிஷோர். ஊரைவிட்டு வெளியேறி கிடை மாடு போட்டு பிழைப்பு நடத்தி வரும் முத்தையா, பண்ணையார் வேல ராமமூர்த்தியை கொலை செய்ய வரும் இடத்தில், பண்ணையாரின் டிரைவர் மாயாண்டி பலியாகிறார். ஆனால், அப்போது நடக்கும் விபத்தில் பண்ணையாரின் பார்வை பறிபோகிறது. இது பண்ணையாரின் அதிகாரத்தை கைப்பற்ற துடித்த அவரது மகன் வீர சேகரனுக்கு சாதகமாகிப் போகிறது.

மர்ம முடிச்சுகள் அவிழ்ந்தன
கலையரசனை கொலை செய்தது யாரென தெரியாமல் இரண்டாவது எபிசோட் முடிவுக்கு வந்தது. இந்நிலையில், தற்போது வெளியாகியுள்ள மூன்றாவது எபிசோடில் அனைத்து மர்ம முடிச்சுகளும் அவிழ்ந்துவிட்டன. பெண்ணின் மீதான சபலம் தான் பல சாம்ராஜ்யங்களையும் சரித்துவிட்டதை வரலாற்றில் படித்ததுண்டு. அதேபோல், பண்ணையாருக்கு சிறுவயது முதலே அவரது வீட்டில் வளர்ந்த மீனாட்சியின் மீது சபலம் தட்டுகிறது. மீனாட்சியோ பண்ணையாரின் விசுவாசி மாயாண்டியை காதலித்து வருகிறார். ஆனால், பண்ணையார் வலுக்கட்டாயமாக மீனாட்சியை திருமணம் செய்ததும், கதையின் போக்கும் மாறுகிறது.

வீரசேகரனின் திட்டம்
இதனால், தனது அப்பாவை அவமானப்படுத்துவதற்காக நண்பனான கலையரசனை தூண்டிவிடுகிறார் வீரசேகரன். அதன்படியே ஜல்லிக்கட்டில் பண்ணையாரின் காளையை கலையரசன் அடக்கியதும் இந்த எபிசோடில் தெரிய வருகிறது. அதன்பின்னர் ஜல்லிக்கட்டில் தனது குடும்ப கெளரவம் பறிபோய்விட்டது என வீரசேகரனே கலையரசனையும் கொலை செய்கிறார். அதேபோல், மாயாண்டிக்கும் மீனாட்சிக்கும் இடையே உள்ள காதலை தெரிந்துகொண்ட பண்ணையார், மாயாண்டியை கொலை செய்வதற்காக தோப்புக்கு அழைத்து செல்கிறார். போகும் வழியில் முத்தையாவால் மாயாண்டி கொலை செய்யப்பட, பண்ணையாருக்கு கண் பார்வை பறிபோகிறது.

தேன்மொழி அறிமுகம்
பண்ணையாருக்கும் முத்தையாவுக்கும் இடையேயான பழிக்குப் பழி போட்டி 7 நாட்டு பஞ்சாயத்து சபைக்கு செல்கிறது. அங்கே இருவரும் சமாதானமாக சென்றாலும், இனி பண்ணையாரின் மாடு எந்த ஜல்லிக்கட்டுப் போட்டியில் இறங்கினாலும் முல்லையூர் இளைஞர்கள் மாடு பிடிப்பார்கள் என சவால் விடுகிறார். இதனிடையே கொலை செய்யப்பட்ட மாயாண்டியின் தங்கை தேன்மொழியான ஷீலா ராஜ்குமாரின் பாத்திரமும் அறிமுகமாகிறது. ஆற்றில் அடித்துவரப்படும் கன்றை எடுத்து வளர்க்கும் ஷீலா, அதை ஜல்லிக்கட்டுக்காக தயார் செய்கிறார். பண்ணையாரின் பார்வை பறிபோனதை நினைத்து உள்ளுக்குள் மகிழ்ந்துகொண்டிருக்கும் இளம் மனைவி மீனாட்சி, காளையுடன் பண்ணையார் வீட்டில் அடியெடுத்து வைக்கும் தேன்மொழி. இனி இவர்களின் பின்னணியில் கதை பயணிக்கும் என்ற லீடுடன் மூன்றாவது எபிசோட் முடிவுக்கு வருகிறது.

கவனிக்க வைக்கும் வசனங்கள்
ஆதிக்க சாதியினரின் வன்மத்தை அப்படியே பிரதிபலிக்கும் வீர சேகரனுக்கும் கலையரசனுக்கும் இடையே நடக்கும் உரையாடல்கள் அதிகம் கவனிக்க வைக்கின்றன. "இன்னைக்கு வேணா நான் சும்மா இருக்கலாம்... ஆனால், நாளைக்கு நான் தாண்டா பண்ணையார்". "காலம் முழுக்க நீங்க அடிச்சிட்டே இருப்பீங்க... அதுக்கு நாங்க குனிஞ்சு முதுக காட்டிட்டே இருக்கணும்.". "அசிங்கப்பட்டது நாங்க தான, அந்த இடத்துக்கு வந்து பாரு, அப்பத்தான் நாங்க பட்ட அவமானம் என்னன்னு தெரியும்" என வசனங்கள் அனைத்தும் வீர சேகரனின் ஆதிக்க வெறியையும் பாண்டியின் அறசீற்றத்தையும் அப்படியே பிரதிபலிக்கிறது. அடுத்தடுத்த எபிசோட்கள் எப்படி இருக்கிறது என்பதை பொறுத்திருந்து தான் பார்க்க வேண்டும்


Click it and Unblock the Notifications











