பகையை வெட்டி முறிக்க வரும் பேட்டைக்காளி… யார் இந்த பாண்டி, தேன்மொழி, முத்தையா, செல்வசேகரன்?
சென்னை: விடுதலை படத்தை இயக்கி வரும் வெற்றிமாறன், 'பேட்டைக்காளி' என்ற இணையத் தொடரை தயாரித்துள்ளார்.
வரும் 21ம் தேதி ஆஹா ஓடிடியில் வெளியாகவுள்ள 'பேட்டைக்காளி' வெப் சீரிஸ்ஸை ராஜ்குமார் இயக்கியுள்ளார்.
கலையரசன், கிஷோர், ஷீலா, வேல ராமமூர்த்தி உள்ளிட்ட பலர் இந்த வெப் சீரிஸில் நடித்துள்ளனர்.

வெற்றிமாறனின் பேட்டைக்காளி
விஜய் சேதுபதி, சூரி நடிப்பில் விடுதலை திரைப்படத்தை இயக்கி வருகிறார் வெற்றிமாறன். 2 பாகங்களாக உருவாகி வரும் இந்தப் படத்தின் முதல் பாகம், இந்தாண்டு இறுதிக்குள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், 'கிராஸ் ரூட் ஃபிலிம் கம்பெனி' என்ற தனது நிறுவனத்தின் மூலம் ஆண்ட்ரியா நடிக்கும் 'அனல் மேலே பனித்துளி' படத்தை தயாரித்து வருகிறார். அதேபோல், ராஜ்குமார் இயக்கத்தில் 'பேட்டைக்காளி' என்ற இணையத் தொடரையும் தயாரித்துள்ளார். முதன்முறையாக வெற்றிமாறன் தயாரித்துள்ள வெப் சீரிஸ் இது என்பது குறிப்பிடத்தக்கது.

முதன்முறையாக ஜல்லிக்கட்டு
தமிழர்களின் பாரம்பரியமான ஜல்லிக்கட்டை அடிப்படையாகக் கொண்டு பேட்டைக்காளி வெப் சீரிஸ் உருவாகியுள்ளது. ராஜ்குமார் இயக்கியுள்ள இந்த வெப் சீரிஸுக்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்து குறிப்பிடத்தக்கது. கலையரசன், ஷீலா, கிஷோர், வேல ராமமூர்த்தி உள்ளிட்ட பலர் நடித்துள்ள பேட்டைக்காளி வெப் சீரிஸ், ஜல்லிக்கட்டுப் பின்னணியில் உருவாகியுள்ளது. ஜல்லிக்கட்டுப் போட்டி, அதனுள்ளே இருக்கும் வீரம், வன்மம், காதல் போன்ற உணர்வுகளை பேசும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த வெப் சீரிஸ்ஸின் ட்ரெய்லர் கடந்த வாரம் வெளியாகி ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றது.

கலையரசன், ஷீலா
அதிகம் எதிர்பார்ப்பில் உள்ள பேட்டைக்காளி வெப் சீரிஸ் நாளை மறுநாள் (அக் 21) ஆஹா ஓடிடியில் வெளியாகிறது. இந்நிலையில், பேட்டைக்காளி வெப் சீரிஸில் நடித்துள்ள நடிகர்களின் கேரக்டர்களை படக்குழு அறிவித்துள்ளது. ஹீரோவாக கலையரசனும், நாயகியாக ஷீலாவும் நடித்துள்ளனர். இதில், கலையரசனின் கேரக்டர் பெயர் பாண்டி எனவும், ஷீலாவின் கேரக்டர் பெயர் தேன்மொழி என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. வித்தியாசமான லுக்கில் மிரட்டலாக இருக்கும் கலையரசனுக்கு, இந்த வெப் சீரிஸ் பெரியளவில் வரவேற்பை பெற்றுத் தரும் என சினிமா விமர்சகர்கள் கூறி வருகின்றனர்.

கிஷோர், வேல ராமமூர்த்தி
பேட்டைக்காளி வெப் சீரிஸில், கிஷோர், எழுத்தாளர் வேல ராமமூர்த்தி இருவரும் முக்கியமான கேரக்டர்களில் நடித்துள்ளனர். கிஷோர், வேல ராமமூர்த்தி இருவருமே வில்லத்தனமான கேரக்டர்களில் சூப்பராக நடிப்பார்கள் என்பது அனைவரும் அறிந்தது. 'கிடாரி', 'மத யானைக் கூட்டம்' ஆகிய படங்களில் வேல ராமமூர்த்தியின் நடிப்புக்கு கிடைத்த வரவேற்பு, பேட்டைக்காளி வெப் சீரிஸிலும் தொடரும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேபோல், கிஷோரின் நடிப்பை பற்றியும் கேட்கவே வேண்டாம். இந்நிலையில், கிஷோர் முத்தையா என்ற கேரக்டரிலும், வேல ராமமூர்த்தி செல்வசேகரன் என்ற பாத்திரத்திலும் நடிப்பதாக படக்குழு அறிவித்துள்ளது. கலையரசன், ஷீலா, கிஷோர், வேல ராம மூர்த்தி ஆகியோரின் பாத்திரங்களுடன், அவர்களின் போஸ்டரையும் பேட்டைக்காளி குழு வெளியிட்டுள்ளது.


Click it and Unblock the Notifications











