விஜய் முதலமைச்சரா?.. பஞ்சாயத்தை பற்ற வைத்த படக்குழு.. என்ன நடந்தது தெரியுமா?
சென்னை: நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் கட்சியை தொடங்கியிருக்கிறார். 2026ஆம் ஆண்டு நடக்கவிருக்கும் சட்டப்பேரவை தேர்தலில் அக்கட்சி போட்டியிடவிருக்கிறது. கண்டிப்பாக அரசியலில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்திவிடுவோம் என்ற நம்பிக்கையில் விஜய்யும் அவரது கட்சியினரும் முழுமூச்சாக நம்பிக்கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் யாதும் அறியான் பட டீசர் புதிய பஞ்சாயத்தை பற்ற வைத்திருக்கிறது.
இந்திய சினிமாவின் பெரிய கமர்ஷியல் ஹீரோக்களில் ஒருவர் விஜய். அவரது படங்கள் விமர்சன ரீதியாக அடி வாங்கினாலும் வசூலில் பின்னியெடுப்பதாக பாக்ஸ் ஆஃபிஸ் வட்டாரங்கள் கூறுகின்றன. அதேசமயம் விஜய்யின் படங்கள் பெரிதாக எந்த கலெக்ஷனும் எடுப்பதில்லை. ஒன்றிரண்டு நாட்கள் ஓடுவதோடு சரி; மற்ற நாட்களில் காற்றுதான் வாங்குகிறது என்ற பேச்சும் ஒருபக்கம் ஓடிக்கொண்டுதான் இருக்கிறது.
தவெக விஜய்: இதற்கிடையே அவர் அரசியலுக்கு வர வேண்டும் என்று பலரும் கோரிக்கை வைத்த வண்ணம் இருந்தார்கள். அதற்கேற்ப சில வருடங்களுக்கு முன்னர் அவர் தமிழக வெற்றிக் கழகம் கட்சியை தொடங்கினார். கட்சி தொடங்கிய கையோடு விக்கிரவாண்டியில் மாநாடும் நடத்தினார். அந்த மாநாட்டில் தங்களது கொள்கை எதிரி திமுகவும் பாஜகவும்தான் என்பதை தெளிவுப்படுத்தி தொடர்ந்து திமுகவை அட்டாக் செய்ய ஆரம்பித்தார். அதற்கு திமுகவினரும் தங்களது ரிப்ளையை கொடுத்தாலும் விஜய் நிறுத்துவதாக இல்லை.

கூட்டணி இல்லை: மேலும் விஜய் இப்போதுதான் திமுகவை எதிர்ப்பார்; தேர்தலில் கண்டிப்பாக அக்கட்சியுடன் கூட்டணி வைப்பார் என்றும் சிலர் பேசினார்கள். ஆனால் சமீபத்தில் நடந்த கட்சி கூட்டத்தில், 'எந்தக் காலத்திலும் திமுக, பாஜகவுடன் கூட்டணி கிடையாது' என்று கூறியிருந்தார். அதற்கு திமுக அமைச்சர் கே.என்.நேருவோ, 'நாங்கள் விஜய்யை கூட்டணிக்கு அழைக்கவே இல்லையே' என்று சொல்லிவிட்டு சென்றார். விஜய் இப்போது கூட்டணி இல்லை என அறிவித்திருப்பது தமிழ்நாடு அரசியல் களத்தில் என்னென்ன தாக்கத்தையும், மாற்றத்தையும் ஏற்படுத்தப்போகிறது என்பது அடுத்த வருடத்தில் தெரிந்துவிடும்.
யாதும் அறியான் டீசர்: இப்படி அரசியல் களத்தில் விஜய்யை சுற்றி சில விஷயங்கள் நடந்துகொண்டிருக்க அப்புக்குட்டி உள்ளிட்டோர் நடித்திருக்கும் யாதும் அறியான் படத்தின் டீசர் நேற்று வெளியானது. அந்த டீசரில் ஒரு காட்சியில், 'தமிழகத்தில் இனி இலவசம் கிடையாது. இளைஞர்கள், பெண்கள், விவசாயிகளுக்கு புதிய திட்டங்கள்.. முதல்வர் விஜய் அதிரடி அறிவிப்பு' என்ற போஸ்டர் இடம்பெற்றிருக்கிறது. இதனைப் பார்த்த நெட்டிசன்களோ, 'அடுத்த தேர்தலில் விஜய்தான் முதலமைச்சர் ஆக வேண்டும் என படக்குழு நினைக்கிறது போல.. இது தேவையில்லாத பஞ்சாயத்தைத்தான் படத்துக்கு பற்ற வைக்கும்' என்று கமெண்ட்ஸ் செய்துவருகிறார்கள். இந்த போஸ்டர் காரணமாக படத்திண்ட் டீசரும் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாக ஆரம்பித்திருக்கிறது.
ஜன நாயகன் விஜய்: விஜய்யின் திரை பயணத்தை பொறுத்தவரை அவர் இப்போது ஹெச்.வினோத் இய்க்கத்தில் ஜன நாயகன் படத்தில் நடித்திருக்கிறார். இதில் அவருடன் பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜு உள்ளிட்டோர் நடித்திருக்கிறார்கள். அடுத்த வருடம் ஜனவரி ஒன்பதாம் தேதி படம் ரிலீஸாகவிருக்கிறது. இதுதான் அவரது கடைசி படம் என்று முதலில் சொல்லப்பட்டது. ஆனால் தேர்தல் முடிவுகளை பொறுத்து திரைத்துறையில் தொடரலாமா வேண்டாமா என விஜய் முடிவெடுக்கவிருக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











