மரியாதை குறைவாக நடப்பதுதான் பிராங்கா?: யூடியூபர்களில் இவரு தனி ரகமோ!
சென்னை: உலக மக்கள் அனைவரின் தவிர்க்க முடியாத பொழுதுப்போக்குத் தளமான யூடியூப் கடந்த சில வருடங்களில் அசுர வளர்ச்சிக் கண்டுள்ளது.
மக்களுக்குத் தேவையான அனைத்து தகவல்களும் வீடியோ வடிவில் கிடைக்கும் களஞ்சியமாக யூடியூப் பார்க்கப்படுகிறது.
ஆனால், வருமானம் ஈட்ட வேண்டும் என்ற எண்ணங்களுடன் சில யூடியூபர்கள் செய்யும் வேடிக்கையான அசட்டுத்தனங்கள் முகம் சுளிக்க வைக்கின்றன.

அசுர வளர்ச்சி
கடந்த 20 ஆண்டுகளில் ஏற்பட்ட தொழில்நுட்ப புரட்சி உலகையே தலைகீழாகப் புரட்டிவிட்டது. பெரும் பணக்காரர்களின் கைகளில் மட்டும் தவழ்ந்து வந்த கம்ப்யூட்டர்கள், இன்று அனைவருக்கும் சாத்தியமாகிவிட்டது. அதன் நீட்சியாக செல்போன்கள் உட்பட மேலும் பல கேட்ஜட்கள் மனிதர்களோடு மனிதர்களாக உண்டு உறவாடத் துவங்கிவிட்டன.

யூடியூப் என்ற மாய உலகம்
தயிர் சாதம் சமைப்பது முதல் சகலத்தையும் அறிந்துகொள்ளும் வசதிகள் யூடியூப்களில் கொட்டிக் கிடக்கின்றன. இதனால், யூடியூப் வீடியோக்களுக்கு பலரும் அடிமையாகிவிட்டதாக, மனநல மருத்துவர்கள் சில தரவுகளை முன்வைக்கின்றனர். இதில் எந்தளவில் ஆரோக்கியமான விஷயங்கள் உள்ளனவோ, அதேயளவு தீமைகளுக்கும் வழிவகுக்கின்றன. இன்னும் சிலரோ, யூடியூப்களை அரசு தனது கண்காணிப்பின் கீழ் கொண்டுவர வேண்டும், சரியான வழிமுறைகளை வகுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.

இது தனி ரூட்டு
யூடியூப் மூலம் இன்னும் பல பயன்களை பெறுவதற்கு வாய்ப்புகள் உள்ளன. ஆனால், சில அசட்டு கோமாளிகள் தங்களை எண்டர்டெய்னர்களாக நினைத்துக்கொண்டு, ப்ராங்க் ஷோ செய்துவருகின்றனர். மக்களை மகிழ்விக்க எவ்வளவோ வழிகள் இருக்க, இப்படி அவர் ப்ராங்க் செய்து கடுப்பேத்துவது ஏன் என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்புகின்றனர்.

இவரு புது ரகம்
யூடியூப்பிற்காக இப்படி ப்ராங்க் ஷோக்கள் செய்பவர்களின் எண்ணிக்கை ஆயிரத்துக்கும் மேல். ஆனால், ராகுல் என்பவர் செய்துவரும் ப்ராங்க் ஷோக்கள், கொஞ்சம் எல்லை மீறிப் போவதாக சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். வாடகை வீடு பார்க்க சென்று, வீட்டு உரிமையாளரை வம்புக்கு இழுப்பது. சலூன் கடைகளுக்கு செல்லும் வாடிக்கையாளர்களிடம் மரியாதைக் குறைவாக நடந்துகொள்வது என பலவிதங்களில் ராகுலும் அவரது குழுவினரும் ப்ராங்க் ஷோக்கள் செய்துவருகின்றனர்.

எல்லாம் சிரிப்புக்காக
ப்ராங்க் ஷோக்கள் குறித்து விமர்சங்கள் எழும்போதெல்லாம், யூடுயூபர்கள் தரப்பில் இருந்து வரும் விளக்கம், "இதெல்லாம் ஒரு காமெடிக்காக தானே, Just for Fun. இதனை அவ்வளவு சீரியஸாக எடுத்துக்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை" என எளிதாக கடந்து செல்கின்றனர். ஆனால், இந்தமாதிரியான ப்ராங்க ஷோக்களால் மனதளவில் பாதிக்கப்பட்டவர்கள் அல்லது கிண்டல் செய்யப்பட்டவர்கள் குறித்து, யூடியூபர்கள் யோசித்தது உண்டா? என்றால், அதற்கு யாரிடமும் பதில்கள் இல்லை.

எப்பவும் ஒரேமாதிரியாக இருக்காது
வேடிக்கைக்காக செய்யப்படும் பிராங்க் ஷோக்கள், எப்போதும் ஒரேமாதிரியாக இருக்காது என்பதே யதார்த்தம். சில நேரங்களில் சில மனிதர்களின் மனநிலையை பொறுத்து, இதில் விபரீதங்கள் நடக்க வாய்ப்புகள் உள்ளதாக, உளவியல் நிபுணர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர். ஆனாலும், இதுகுறித்து சரியான புரிதல்கள் யூடியூபர்களிடம் இல்லை என்பதையும், அவர்கள் வேதனையுடன் தெரிவிக்கின்றனர். இதற்கான சரியான தீர்வுகள் யாரிடம் தான் உள்ளன?, இதுவே தற்போதைய பெரும் கேள்வியாகியுள்ளது.


Click it and Unblock the Notifications











