தமிழில் நடிக்காததற்கு ‘புலி‘ படம் தான் காரணம்..ஆதங்கப்பட்ட கிச்சா சுதீப்!
சென்னை : கன்னட திரை உலகில் சூப்பர் ஸ்டாராக வலம் வரும் நடிகர் கிச்சா சுதீப், தமிழில் நடிக்காததற்கு புலி படம் தான் காரணம் என்று கூறியுள்ளார்.
நடிகர் கிச்சா சுதீப் நடிப்பில் ஃபேண்டஸி ஆக்ஷன் அட்வெஞ்சர் ஜானரில் உருவாகி உள்ள திரைப்படம் 'விக்ராந்த் ரோணா'. இப்படத்தை நடிகர் கிச்சா சுதீப் தனது சொந்த தயாரிப்பு நிறுவனத்தின் மூலம் தயாரித்து, நடித்துள்ளார்.
இப்படத்தில் நிரூப் பண்டாரி, நீத்தா அசோக், ஜாக்குலின் ஃபெர்னாண்டஸ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.

நடிகர் கிச்சா சுதீப்
கன்னட சினிமா ரசிகர்களின் ஃபேவரைட் ஹீரோவாகவும் முன்னணி நட்சத்திர நாயகராகவும் திகழும் நடிகர் கிச்சா சுதீப், தமிழ் ரசிகர்களுக்கு பரீச்சியமானது 'நான் ஈ' படத்தில் தான். இந்த படத்தை பிரம்மாண்ட இயக்குநர் எஸ்.எஸ்.ராஜமளலி இயக்கி இருந்தார். இதையடுத்து, பாகுபலி உள்ளிட்ட திரைப்படங்களில் வித்தியாசமான கதாப்பாத்திரங்களில் நடித்து தமிழ் சினிமா ரசிகர்கள் உட்பட பிறமொழி ரசிகர்களின் மனதிலும் இடம் பிடித்தார்.

விக்ராந்த் ரோணா
கதாநாயகனாக மட்டுமல்லாமல் வில்லனாகவும் முக்கிய கதாபாத்திரங்களிலும் பல மொழி திரைப்படங்களில் தொடர்ந்து நடித்து வரும் கிச்சா சுதீப் நடிப்பில் அடுத்ததாக வெளிவர உள்ள திரைப்படம் விக்ராந்த் ரோணா. கிச்சா கிரியேஷன்ஸ், ஷாலினி ஆர்ட்ஸ் மற்றும் இன்வெனியோ பிலிம்ஸ் இந்தியா ஆகிய நிறுவனங்கள் இணைந்து விக்ராந்த் ரோணா படத்தை தயாரித்துள்ளன.

ஜூலை 28ந் தேதி ரிலீஸ்
பான் இந்திய திரைப்படமாக ஆங்கிலம், தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு என ஐந்து மொழிகளில் ஜூலை 28ந் தேதி உலகமெங்கும் திரையரங்குகளில் ரிலீஸ் ஆக உள்ளது. இத்திரைப்படத்தின் செய்தியாளர்கள் சந்திப்பு சென்னையில் நடைபெற்றது. இதில் அழகான தமிழில் பேசிய கிச்சா, சினிமா என்பது ஒரு கலை, அதை அனைத்து இடத்திற்கும் எடுத்துச்செல்ல வேண்டும் என்று நினைத்துத்தான் இந்த படத்தை எடுத்துள்ளேன். இந்த படம் நிச்சயம் அனைவருக்கும் பிடிக்கும் என்றார்.

குழப்பத்தில் இயக்குநர்கள்
மேலும், பலரும் தமிழில் ஏன் நடிக்க வில்லை என்று பலர் கேள்வி கேட்கிறார்கள், ராஜமவுலி இயக்கிய நான் ஈ படத்தில் வில்லனாக நடித்திருந்தேன். இந்த படத்திற்கு பிறகு பல இயக்குநர்களிடமிருந்து எனக்கு அழைப்பு வந்தது. ஆனால், என்னை ஹீரோவாக நடிக்க வைப்பதா இல்லை வில்லனாக நடிக்க வைப்பதா என்ற குழப்பம் இயக்குநர்களுக்கு இருந்தது.

அந்த படம் தான் காரணம்
நான் ஈ படத்திற்கு பிறகு தமிழில் படவாய்ப்பும் பெரிதாக இல்லை. அதன் பிறகு புலி படத்தில் மிரட்டலான வில்லனாக நடித்தேன். ஆனால், புலி படத்தை பார்த்துவிட்டு அதோடு என்னை நீங்கள் வீட்டுக்கு அனுப்பிவீட்டீர்களே என சிரித்துக்கொண்டே கூறினார். ஆனால், கர்நாடகாவில் பட வாய்ப்பு இருந்தது, நல்ல படங்களில் நடித்து மகிழ்ச்சியாக இருக்கிறது என்றார்.


Click it and Unblock the Notifications











