Goundamani - ரொம்பவே சீக்ரெட்.. தனது குடும்பத்தை கவுண்டமணி மறைத்து வைக்க காரணம் தெரியுமா?
சென்னை: கவுண்டமணி தற்போது சினிமாவிலிருந்து ஒதுங்கியிருக்கிறார். அதேசமயம் எந்த காமெடி சேனலை பார்த்தாலும், எந்த மீமை பார்த்தாலும் அதில் கவுண்டமணி இன்னும் சிரிக்க வைத்துக்கொண்டே இருக்கிறார். இதன் காரணமாக கவுண்டமணிக்கு எப்போதும் அழிவில்லை என்று அவரது ரசிகர்கள் கூறுவார்கள். இந்தச் சூழலில் அவர் தனது குடும்பத்தை பொதுவெளியில் காட்டாமல் வைத்திருப்பதற்கான காரணம் குறித்துதான் இப்போது திரைத்துறையில் பேச்சு ஓடிக்கொண்டிருக்கிறது.
கோலிவுட்டில் தவிர்க்க முடியாத நகைச்சுவை நடிகர்களில் ஒருவர் கவுண்டமணி. தனது நகைச்சுவை காட்சிகளில் வெறும் சிரிக்க வைக்கும் வசனங்களை மட்டும் வைக்காமல் முற்போக்கு கருத்துக்களையும், டைமிங் கவுண்ட்டர்களையும் கவுண்டமணி தனது நகைச்சுவை மூலம் பிரதிபலித்தவர். எந்த காமெடி நடிகர் வந்தாலும் அவரது சாயல் இல்லாமல் ஒரு காமெடியும் செய்ய முடியாது என்பதுதான் உண்மை. அந்த அளவுக்கு அவரது தாக்கம் பலரிடத்தில் இருக்கும். உதாரணமாக சந்தானத்தையே கவுண்டமணியின் அப்டேட் வெர்ஷன் என்றுதான் ஒருதரப்பினர் கூறினர்.

விமர்சனத்தை சந்தித்த கவுண்டமணி நகைச்சுவை: கவுண்டமணியின் நகைச்சுவை எந்த அளவுக்கு கொண்டாடப்பட்டதோ அதே அளவு விமர்சனத்தையும் சந்தித்தவை. அவர் எல்லோரையும் உருவ கேலி செய்கிறார்; எட்டி உதைக்கிறேன் என்ற பெயரில் வன்முறையை நிகழ்த்துகிறார் சிலர் அவர் மீது விமர்சனத்தை வைப்பதுண்டு. ஆனால் அப்படி செய்தது தவறு என்றால் அவரது காமெடியை மக்கள் ரசித்திருக்கமாட்டார்கள். மக்களின் மனதில் என்ன இருக்கிறதோ அதைத்தான் அவர் திரையில் கொண்டு வந்தார் என அவரது ரசிகர்கள் கூறுவர்.
எவர்க்ரீன் கூட்டணி: எத்தனை விமர்சனங்களை சந்தித்தாலும் கவுண்டமணி & செந்தில் கூட்டணிதான் தமிழ் சினிமா நகைச்சுவையின் கொண்டாட்டமான காலம். ஒருபக்கம் கவுண்டமணி கவுண்ட்டர்கள் கொடுக்க, மறுபக்கம் செந்தில் வெகுளித்தனமான முகத்தையும், சிரிப்பு வரவைக்கக்கூடிய உடல் மொழி, வாய் மொழியையும் வைத்துக்கொள்ள இருவரையும் ஸ்க்ரீனில் பார்த்தாலே இப்போதும் வயிறு வலிக்க சிரிக்கிறார்கள் ரசிகர்கள்
யாராக இருந்தாலும் கலாய்தான்: கவுண்டமணி திரையில் மட்டுமில்லை நேரிலுமே யார் என்னவென்று பார்க்காமல் தனது கவுண்ட்டர்களால் அதகளம் செய்துவிடுவார். 'ஏன் ப்பா எல்லோரும் நடிக்க வந்துட்டா யார்தான் படம் பார்க்குறது' என்று சந்தானத்திடம் ஒரு முறை கவுண்ட்டர் அடித்திருக்கிறார் கவுண்டமணி. அதேபோல், 'நாய்க்கு என்ன பெயர் வைப்பது அதுக்கு பேர் நாய்தான்', நடிகர் சங்க பெயர் பற்றிய ஒரு கேள்விக்கு 'நடிகர் சங்கம் என்று வையுங்கள்' என்றது என அவரது ஆஃப் கேமரா கவுண்ட்டர்களும் ரகளையாக இருப்பவை.
பிரைவேசி: கவுண்டமணியை அந்தக் காலத்து அஜித் என்பார்கள். அஜித் எப்படி இப்போது மீடியாக்களை சந்திப்பது, பட ப்ரொமோஷனில் கலந்துகொள்ளாதது என இருக்கிறாரோ அதேபோல் கவுண்டமணியும் இருந்தவர். முக்கியமாக தனது குடும்பத்தினரையும் மீடியா வெளிச்சத்தில் படாமல் இத்தனை வருடங்களாக வைத்திருப்பவர். சில வாரங்களுக்கு முன்புகூட கவுண்டமணி மகளின் புகைப்படம் ஒன்று வெளியாகி ட்ரெண்டானது. அதை தவிர்த்து அவரது குடும்பம் பற்றிய எந்தத் தகவலும் பெரிதாக யாருக்கும் தெரியாது.
என்ன காரணம்: அதுகுறித்து பத்திரிகையாளர் ராஜ கம்பீரன் தனியார் யூட்யூப் சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியில், "நடிகர்கள் தங்களது முகம் மக்களிடம் சென்று சேர வேண்டுமென்பதற்காக மட்டுமே நடிக்கிறார்கள். அதற்காக நிறையவே கஷ்டப்படுவார்கள். ஆனால் ஒருகட்டத்தில் அதே முகத்தை மக்களிடமிருந்து ஒளித்துவைத்துக்கொள்ள படாதபாடு படுகிறார்கள். கவுண்டமணியும் அப்படித்தான்.
அவரைப் பொறுத்தவரை திரையில் இருக்கும் கவுண்டமணியை மக்கள் தெரிந்துகொண்டால் போதும். அசல் கவுண்டமணியை தெரிந்துவைத்து மக்கள் என்ன செய்யப்போகிறார்கள் என்ற கொள்கையில் இருப்பவர். முக்கியமாக மக்களின் நேரத்தை வீணடிக்க வேண்டாம் என்றும் நினைப்பவர். அதனால்தான் தனது குடும்பத்தையும் மீடியா வெளிச்சத்தில் படாமலேயே வைத்திருக்கிறார். அப்படி இருப்பதும் ஒருவகையில் நல்லதுதான்" என்றார்.


Click it and Unblock the Notifications











