நடிகர் ரஜினிகாந்த் கட்டிட வழக்கு .. தீர்ப்பாயம் அதிரடி உத்தரவு!
சென்னை: ஓட்டலுக்கு வாடகைக்கு விடப்பட்ட கட்டடத்துக்கு வரி செலுத்தும்படி நடிகர் ரஜினிக்கு சேவை வரித்துறை பிறப்பித்த உத்தரவை ரத்து செய்து சேவை வரிகள் மேல்முறையீட்டு தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை கோடம்பாக்கம் சாலையில் தனக்குச் சொந்தமான கட்டடத்தை வசந்தபவன் ஹோட்டலுக்கு நடிகர் ரஜினிகாந்த் குத்தகைக்கு கொடுத்திருந்தார். ஹோட்டலுக்கு வாடகைக்கு விட்ட கட்டடத்துக்கு 2007 ஆம் ஆண்டு முதல் 2012 ஆம் ஆண்டு வரையிலான 5 ஆண்டு காலத்திற்கு 46 லட்சத்து 86 ஆயிரத்து 870 ரூபாயும், பின்னர் 10 லட்சத்து 2 ஆயிரத்து 705 ரூபாய் என மொத்தமாக 56 லட்சத்து 89 ஆயிரம் ரூபாய் சேவை வரி செலுத்தம்படி, நடிகர் ரஜினிகாந்த்திற்கு சேவை வரித் துறை உத்தரவு பிறப்பித்திருந்தது.

ரஜினி மேல்முறையீடு: இந்த உத்தரவை எதிர்த்து நடிகர் ரஜினிகாந்த் தரப்பில் சென்னை நந்தனத்தில் உள்ள சேவை வரிகள் மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் கடந்த 2016 ஆம் ஆண்டு மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மேல்முறையீட்டை தொழில்நுட்பப் பிரிவு உறுப்பினர் எம். அஜித்குமார் மற்றும் நீதித்துறை உறுப்பினர் டி.வி. அஜயன் அடங்கிய அமர்வு விசாரித்தது. இதில், 1994 பிரிவு 65 (105) (zzzz) கீழ் ஹோட்டலுக்காக வாடகைக்கு விடப்படும் கட்டடங்களுக்கு சேவை வரி செலுத்துவதிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளதால், சேவை வரித்துறை பிறப்பித்த உத்தரவை ரத்து செய்ய வேண்டுமென நடிகர் ரஜினிகாந்த் தரப்பு வழக்கறிஞர் டி.டி.ரவிச்சந்திரன் வாதிட்டார்.
உத்தரவு: இந்த வாதத்தை மறுத்த சேவை வரித்துறை, ஹோட்டலுக்குள் உணவகம், கருத்தரங்க கூடம், கிளப், பார் ஆகியவை இயங்கி வந்ததால், சேவை வரி விலக்கு பெற முடியாது என வழக்கறிஞர் ஓ.எம். ரீனா வாதிட்டார். இருதரப்பு வாதங்களையும் கேட்ட தீர்ப்பாயம், தங்கும் விருந்தினர்களின் வசதிக்காக நடத்தப்படும் உணவகம் உள்ளிட்ட வசதிகள் ஹோட்டலின் அங்கமாக மட்டுமே கருத முடியும் என்றும், அவற்றை தனிக் கட்டடமாக கருத முடியாது என்பதால் வரி விலக்கு பெற நடிகர் ரஜினிகாந்துக்கு உரிமை உள்ளது என கூறி, 56 லட்சம் ரூபாய் சேவை வரி செலுத்த வேண்டும் என பிறப்பிக்கப்பட்ட உத்தரவை ரத்து செய்து உத்தரவிட்டார். இதனால், 10 ஆண்டுகளாக நடந்து வந்த இந்த வழக்கு முடிவுக்கு வந்துள்ளது.


Click it and Unblock the Notifications











