ஜெய்பீம் மணிகண்டனின் வித்தியாசமான படம்.. இதுகூட மனுசனுக்கு பிரச்சினைத்தானா?.. கமல் ஸ்டைலில் போகிறாரே
சென்னை: நடிகர், திரைக்கதையாசிரியர், இயக்குநர் என பன்முக கலைஞராக தமிழ் சினிமாவிற்கு நம்பிக்கை கொடுத்து வருபவர் மணிகண்டன்.
பீட்சா 2 வில்லா படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமான மணிகண்டன், ஜெய் பீம் படத்தில் தனது அட்டகாசமான நடிப்பால் அனைவரையும் மிரள வைத்தார்.
இந்நிலையில், மணிகண்டன் நடித்துள்ள புதிய படத்தில், அவர் வித்தியாசமான கேரக்டரில் வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

புதிய நம்பிக்கை
தமிழ்த் திரையுலகில் புதிய நம்பிக்கைக்குரிய கலைஞராக வலம் வருகிறார் மணிகண்டன். பீட்சா 2 படத்தில் ஜூனியர் ஆர்டிஸ்ட்டாக வந்து போன மணிகண்டன், விஜய் ஆண்டனி நடித்த இந்தியா பாகிஸ்தான் படத்தில், நடிகராக அறிமுகமானார். தொடர்ந்து விஜய் சேதுபதியுடன் காதலும் கடந்து போகும், 8 தோட்டாக்கள் ஆகிய படங்களில் நடித்த மணிகண்டனுக்கு, விக்ரம் வேதா இன்னொரு புதிய அடையாளத்தைக் கொடுத்தது. விக்ரம் வேதாவில் மணிகண்டன் எழுதிய வசனங்கள் ரசிகர்களிடம் நல்ல வரவேற்பை பெற்றதோடு, படத்தின் வெற்றிக்கும் கை கொடுத்தது.

திரைக்கதையில் மணிகண்டன்
விக்ரம் வேதா கொடுத்த சூப்பர் ஹிட்டால் மணிகண்டனுக்கு திரைக்கதை, வசனம் எழுதும் வாய்ப்புகள் தொடர்ந்து கிடைத்தன. அஜித்தின் விஸ்வாசம், தம்பி ஆகிய படங்களுக்கு ஸ்கிரிப்ட் எழுதிய மணிகண்டன், இன்னொரு பக்கம் காலா, சில்லு கருப்பட்டி, பாவ கதைகள், நெற்றிக்கண் படங்களில் நடிகராகவும் கலக்கினார். முக்கியமான 'ஜெய் பீம்' படத்தில் நெற்றிக்கண் படங்களில் நடிகராகவும் கலக்கினார். முக்கியமாக 'ஜெய் பீம்' படத்தில் மணிகண்டனின் நடிப்பு ராஜா கண்ணுவின் வலியை அப்படியே திரையில் கொண்டு வந்தது. அதன் பிறகு சில நேரங்களில் சில மனிதர்கள் படத்தில் நடித்த மணிகண்டன், 'நரை எழுதும் சுயசரிதம்' படத்தையும் இயக்கினார்.

வித்தியாசமான கேரக்டர்
ஆரம்பத்தில் இருந்தே புதிய முயற்சிகளில் தன்னை ஈடுபடுத்தி வரும் மணிகண்டன், தற்போது ஒரு படத்தில் ஹீரோவாக நடித்துள்ளார். இதுவும் மணிகண்டனின் கேரியரில் முக்கியமான படமாக இருக்கும் எனக் கூறப்படுகிறது. காமெடி ஜானரில் உருவாகியுள்ள இந்தப் படம் குறட்டையால் ஏற்படும் பிரச்சினைகளை பின்னணியாக கொண்டு உருவாகியுள்ளதாம். இன்னும் டைட்டில் வைக்கப்படாத இந்தப் படம் முழுக்க முழுக்க காமெடியாக இருக்கும் சொல்லப்படுகிறது. கமல் போன்று வித்தியாசமான கேரக்டரில் மணிகண்டன் துணிந்து நடித்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

விரைவில் ரிலீஸ்
விநாயக் சந்திரசேகரன் இயக்கியுள்ள இந்தப் படத்திற்கு ஷான் ரோல்டன் இசையமைத்துள்ளாராம். மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ், எம் ஆர் பி என்டர்டெய்ன்மென்ட் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது. மணிகண்டன் உடன் மீதா ரகுநாத், ரமேஷ் திலக், இயக்குநர் பாலாஜி சக்திவேல், பகவதி பெருமாள் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். சென்னையில் ஒரே கட்டமாக படப்பிடிப்பை நடத்தி முடித்துள்ள படக்குழு, விரைவில் டைட்டில், ரிலீஸ் தேதி ஆகியவற்றை அறிவிக்க உள்ளதாம். தூங்கும் போது ஏற்படும் குறட்டை பலருக்கும் தொந்தரவான ஒரு வழக்கம். அதையே பின்னணியாக வைத்து இந்தப் படம் உருவாகியுள்ளதால் காமெடிக்கு பஞ்சமிருக்காது என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











