ஆஸ்கர் விருது வென்றது 'ஆர்ஆர்ஆர்' படத்தின் நாட்டு நாட்டு பாடல்... மேடையில் மாஸ் காட்டிய MM கீரவாணி!
ஏஞ்சல்ஸ்: 95வது ஆஸ்கர் விழாவில் ராஜமெளலியின் ஆர்.ஆர்.ஆர் திரைப்படம் விருது வென்று சாதனை படைத்துள்ளது.
கடந்தாண்டு வெளியான ஆர்.ஆர்.ஆர் படத்தில் ராம் சரண், ஜூனியர் என்.டி.ஆர், ஆலியா பட், அஜய்தேவ் கன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர்.
கோல்டன் குளோப் உள்ளிட்ட பல சர்வதேச விருதுகளை வென்றிருந்த நாட்டு நாட்டு பாடல், தற்போது ஆஸ்கரையும் தட்டிச் சென்றது.
நாட்டு நாட்டு பாடல் ஆஸ்கர் விருது வென்றதை இந்தியர்கள் கொண்டாடி வருகின்றனர்.

ஆஸ்கர் விருது வென்ற ஆர்ஆர்ஆர்
2023ம் ஆண்டுக்கான 95வது ஆஸ்கர் விருது விழா அமெரிக்காவில் உள்ள லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடைபெற்றது. டால்பி தியேட்டரில் நடைபெற்ற இதில், ராஜமெளலியின் ஆர்ஆர்ஆர் படத்திற்கு ஆஸ்கர் விருது கிடைத்துள்ளது. சிறந்த ஒரிஜினல் பாடல் பிரிவில் ஆர்ஆர்ஆர் படத்தின் நாட்டு நாட்டு பாடலுக்கு இந்த விருது கிடைத்துள்ளது. ஏற்கனவே கோல்டன் குளோப் உள்ளிட்ட பல சர்வதேச விருதுகளை வென்ற இந்தப் பாடல், தற்போது ஆஸ்கரையும் தட்டித் தூக்கியுள்ளது.

மேடையேறிய MM கீரவாணி
விருது அறிவிக்கப்பட்டதும் மேடையேறிய இசையமைப்பாளர் MM கீரவாணி, ராஜமெளலி, தயாரிப்பாளர் கார்த்திகேயா உள்ளிட்ட ஆர்.ஆர்.ஆர் படக்குழுவினருக்கு தனது நன்றியை தெரிவித்தார். கீரவாணியுடன் பாடலாசிரியர் சந்திரபோஸும் ஆஸ்கர் விருதை பெற்றுக்கொண்டார். தொடர்ந்து பேசிய கீரவாணி, தனது மகிழ்ச்சியை பாடலாக பாடி ஆர்ஆர்ஆர் படத்தில் வேலை செய்த ஒவ்வொரு கலைஞர்களுக்கும் ஆஸ்கர் விருதை சமர்ப்பணம் செய்தார். மேலும், இது இந்தியர்களுக்கு பெருமையான தருணம், அவர்களுக்கும் தனது விருதை அர்ப்பணித்தார்.

கண்கலங்கிய தீபிகா படுகோன்
ஆஸ்கர் விருதை வென்றதும் மேடையில் பேசிய கீரவாணியை பார்த்து அரங்கத்தில் அமர்ந்திருத்த தீபிகா படுகோன் ஆனந்த கண்ணீர் வடித்தார். முன்னதாக ரெட் கார்பெட்டில் கறுப்புச் சிலையாக வலம் வந்த தீபிகா படுகோன், ஆஸ்கர் மேடையேறிய நாட்டு நாட்டு பாடல் குறித்து அறிமுகம் செய்திருந்தார். முக்கியமாக இந்தப் பாடலின் கோரியோகிரஃபி, யூடியூப் வீவ்ஸ், ரீல்ஸ் போன்றவற்றை பெருமையாக கூறினார். அதன்பின்னர் 'நாட்டு நாட்டு' பாடல் ஆஸ்கர் மேடையில் அரங்கேற்றப்பட்டது.

இந்திய ரசிகர்கள் கொண்டாட்டம்
ராகுல் சிப்லிகஞ்ச், கால பைரவா இருவரும் நாட்டு நாட்டு பாடலை லைவ்வாக பாடி அசத்தினர். அதற்கு நடனக் கலைஞர்கள் ஆட்டம் போட்டு அசத்தியது ஒட்டுமொத்த ரசிகர்களையும் உற்சாகத்தில் ஆழ்த்தியது. நாட்டு நாட்டு பாடல் பெர்ஃபாமன்ஸ் முடிந்ததும் ஒட்டுமொத்த பிரபலங்களும் எழுந்து நின்று கைகள் தட்டி ஆர்ப்பரித்தனர். நாட்டு நாட்டு பாடல் விருது வழங்கும் முன்னரும் ஒருமுறை ஆஸ்கர் மேடையில் அரங்கேறியது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், நாட்டு நாட்டு பாடல் ஆஸ்கர் விருது வென்றதை இந்திய ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

ட்விட்டரில் ட்ரெண்டான நாட்டு நாட்டு
இதனையடுத்து ஆஸ்கர் விருது வென்ற மகிழ்ச்சியை ஆர்ஆர்ஆர் படக்குழுவினர் டிவிட்டரில் வெளிப்படுத்தியுள்ளனர். சிறந்த பாடலுக்கான ஆஸ்கர் விருது நாட்டு நாட்டு பாடலுக்கு கிடைத்தது ஆசிர்வதிக்கப்பட்ட தருணம். இந்தத் தருணத்தை விவரிக்க வார்த்தைகளே இல்லை. உலகம் முழுவதும் உள்ள ஆர்.ஆர்.ஆர் ரசிகர்களுக்கு இந்த விருது சமர்ப்பணம் என எமோஷனலாக பதிவிட்டுள்ளனர். இதனையடுத்து நாட்டு நாட்டு, ராஜமெளலி, கீரவாணி போன்ற ஹேஷ்டேக்குகள் ட்ரெண்டாகி வருகின்றன.

நாட்டு நாட்டு பாடல் டீம்
ராஜமெளலி இயக்கிய ஆர்.ஆர்.ஆர் படத்தில் இடம்பெற்ற நாட்டு நாட்டு பாடலின் பெரிய பலமே கோரியோகிராபி தான். MM கீரவாணி இசையமைத்திருந்த இந்தப் பாடலுக்கு ப்ரேம் ராக்ஷித் கோரியோகிராபி செய்திருந்தார். சந்திரபோஸ் பாடல் வரிகளை எழுத, ராம் சரணும் ஜூனியர் என்.டி.ஆரும் தரமாக ஆட்டம் போட்டு அசத்தியிருந்தனர். ராகுல் சிப்லிகஞ்ச், கால பைரவா இருவரும் இந்தப் பாடலை பாடியிருந்தது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











