twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    ஜெமினி சினிமா வெளியிட்ட சிறப்பிதழ்கள் - ஆவணமாகிய விளம்பரங்கள்

    By Ka Magideswaran
    |

    - கவிஞர் மகுடேசுவரன்

    நாயகன் திரைப்படம் எண்பத்தேழாம் ஆண்டின் தீபாவளிக்கு வெளியானது என்று நினைக்கிறேன். அப்போது நான் எட்டாம் வகுப்பு படித்துக்கொண்டிருந்தேன். திருப்பூரிலிருந்து பல்லடம் செல்லும் சாலையிலிருக்கும் ஒரு முடிதிருத்தகத்தில் பத்துக்கும் மேற்பட்ட இதழ்களை வாங்கிப் போடப்பட்டிருக்கும். ஏறத்தாழ சிறு நூலகம்போல் செயல்பட்ட முடிதிருத்தகம் அது. என் இதழ்ப்படிப்பின் பெரும்பகுதி அக்கடையிலிருந்தே தொடங்குகிறது. சனியோ ஞாயிறோ அக்கடையில் சென்றமர்ந்தால் முழுப்பகலையும் அங்கேயே படித்துக் கழிப்பேன். இன்று அந்த முடிதிருத்துநர் என்னாயினார் என்று தெரியவில்லை. அக்கடையின் தோற்றமும் மாறிவிட்டது. அச்சாலைவழியே சென்றால் அக்கடையிருந்த பகுதியை ஏக்கத்தோடு பார்த்துச் செல்கிறேன்.

    அந்த முடிதிருத்தகத்தில் வாங்கிப் போடப்பட்டவற்றில் 'ஜெமினி சினிமா’ என்னும் திரைப்பட இதழும் அடக்கம். வழக்கமாக வெளியாகும் அவ்விதழ் அவ்வப்போது திரைப்படச் சிறப்பிதழாயும் மலர்வதுண்டு. எனக்குத் தெரிந்து ஜெமினி சினிமா வெளியிட்ட மூன்று திரைப்படச் சிறப்பிதழ்கள் நன்றாக இருந்தன. படத்தொடக்க நாளிலிருந்து படம் வெளியாகும் நாள்வரைக்கும் அவ்விதழின் பணியாளர் ஒருவர் உடனிருந்திருப்பார் என்று கணிக்கிறேன். சிறப்பிதழில் “படப்பிடிப்பின்போது” எடுக்கப்பட்ட நூற்றுக்கணக்கான படங்கள் இடம்பெறும். நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் ஆகியோரின் நேர்காணல்கள் பலவும் இருக்கும். ஒரு திரைப்படத்தைப் பற்றிய ஆவணமாக அச்சிறப்பிதழ்கள் உருவாக்கப்பட்டிருந்தன. ஜெமினி சினிமா அவ்வாறு வெளியிட்ட மூன்று சிறப்பிதழ்கள் எனக்கு நன்றாக நினைவிருக்கின்றன. நாயகன், நெத்தியடி, ஆத்தா உன் கோவிலிலே ஆகியவை அம்மூன்று படங்கள். ஜெமினி சினிமா, சினிமா எக்ஸ்பிரஸ், முத்தாரம், வண்ணத்திரை, பிலிமாலயா போன்ற திரைப்பட இதழ்கள் புத்தகக்கடைகளின் நூல்கயிற்றில் படுக்கைவாக்கில் தொங்கிக்கொண்டிருக்கும். அவை நன்றாகவும் விற்பனை ஆயின.

    the special issues of gemini cinema

    ஜெமினி சினிமா வெளியிட்ட நாயகன் சிறப்பிதழில் படத்தின் பாடல்வரிகள் வெளியிடப்பட்டிருந்தன. அப்பாடல்களை எப்படி ஏன் எதற்காக எழுதினேன் என்பதையும் பாடலாசிரியர் புலமைப்பித்தன் விளக்கியிருந்தார். அவர்க்கு எப்படிச் சூழ்நிலைகள் சொல்லப்பட்டன என்பதையும் அதற்கேற்ப எழுதப்பட்ட வரிகள் என்ன பொருளில் வரும் என்பதையும் கூறினார். அந்த விளக்கத்தில் ஒரு திரைப்பாடல் உருவாவதில் உள்ள முன்னுரையாடல்கள் பிடிபட்டன. “கடலும் அலையும் எப்பொழுது தூங்கியது ? அலை கரையைக் கடந்து எப்பொழுது ஏறியது ?” என்று பாடல் வரி வரும். “பொருட்பெண்டிராக வாழும் தங்களுக்கு கடலும் அலையும்போல ஓய்வொழித்தலே இல்லா வாழ்க்கை. தாம் நேர்ந்துகொண்ட வாழ்க்கையிலிருந்து இனி வெளியேறுவதும் இயலாது” என்று அப்பெண்கள் துயரத்தை உள்வைத்துப் பாடுகிறார்களாம். “தென்பாண்டிச் சீமையிலே தேரோடும் வீதியிலே மான்போல வந்தவனே யாரடிச்சாரோ…” என்ற பாடல் வரியில் மான் என்ற உவமைதான் அந்தச் சிறுவனின் நிலையைக் குறிப்பது. சிறுவனின் மருட்பார்வையும் மானின் மருட்பார்வையும் ஒன்று. அதற்கு எதிர்க்கத் தெரியாது. மான்கன்றுக்கு ஓடியொளியவும் தெரியாது.

    “நீயொரு காதல் சங்கீதம் வாய்மொழி சொன்னால் தெய்வீகம்” என்பது ஒரு பாட்டின் தொடக்க வரிகளைப்போல் தெரியும். அடுத்த வரியை அங்கே காண முடியாது. பாடலின் பல்லவி அனுபல்லவி எல்லாமே அவ்வளவுதான். அடுத்த வரிகளுக்குச் சரணத்தைத்தான் நாட வேண்டும். பாடல் விளக்கங்கள் இவ்வாறு இடம்பெற்றிருந்தன. பாட்டுக்கு ஆடவந்த பபிதா என்ற நடிகை கூறியதும் நினைவிலிருக்கிறது. பெரும் நிறுவனம் என்பதால் அரங்கமைப்பில் பொருட்செலவு காட்டியிருப்பார்கள் என்று தாம் வந்ததாகவும் இங்கே வந்து பார்த்தால் பழைய கட்டடம் போன்று அரங்கமைத்திருக்கிறார்கள் என்றும் அது தமக்குப் பெருத்த ஏமாற்றமே என்று கூறியிருந்தார். ஆடல்கலைஞர்க்குப் பேரரங்கில் ஆடவேண்டும் என்பதுதான் கனவு.

    நாயகன் திரைப்படச் சிறப்பிதழ் இதழ்த்துறையில் பரபரப்பாகப் பேசப்பட்டிருக்க வேண்டும். ஒரு திரைப்படத்திற்கான விளம்பரத்தை இப்படி மேற்கொள்ளலாம் என்று தெளிவாகியிருக்கும். பிற இதழ்கள் இத்தகைய சிறப்பிதழ் முயற்சிக்கு ஒப்புக்கொள்ளாத நிலையில் ஜெமினி சினிமா மட்டும் உடன்பட்டிருக்க வேண்டும். இன்றைய தொலைக்காட்சி விளம்பர அக்கப்போர்களுக்கு அப்பன் அன்றைய ஜெமினி சினிமா விளம்பரமுறை.

    நாயகன் திரைப்படம் வெளியான அதே திங்களில்தான் சிறப்பிதழும் வெளியாகியிருந்தது. ஒரு திரைப்படத்திற்கு விளம்பரத்தின்பொருட்டுத்தான் சிறப்பிதழ் வெளியிடப்படுகிறது என்பதை அன்று பலரும் உணர்ந்திருக்க மாட்டார்கள். அன்றைய சிறுவனாகிய எனக்கும் அது தெரியாது. சிறப்பிதழ் வெளியிடுமளவுக்கு அத்திரைப்படம் சிறப்பான படமாக இருக்கும்போலும் என்பதே மக்களின் எண்ணம். அச்சில் காண்பவை எல்லாமே மாறாப்பேருண்மைகள் என்றே பன்னூற்றாண்டுகளாக நமக்குச் சொல்லப்பட்டது. அதனால்தான் அச்சில் ஓர் அவப்பொருளைக் கண்டால் நெஞ்சு கொதிக்கிறது. அச்சுக்கென்று ஓர் அறம் இருக்கிறது. அதில் பிறழக்கூடாது. அத்தகைய சிறப்பிதழ்கள் அப்பட முதலாளிகளின் விளம்பரப் பொருட்செலவின்படியே வெளியிடப்பட்டன என்றாலும் காலப்போக்கின் பிறகு அதனை ஓர் ஆவணப்பதிவாக ஏற்கலாம் என்றே தோன்றுகிறது.

    பாண்டியராஜன் இயக்கிய நெத்தியடி திரைப்படத்திற்கும் அவ்வாறே ஒரு சிறப்பிதழ் வெளியானது. நாயகன் சிறப்பிதழ் வந்த வெற்றியினாலோ என்னவோ நெத்தியடி இதழுக்கு நன்கு உழைத்திருந்தார்கள். படத்தைப் பற்றி இனியேதும் சொல்வதற்கில்லை என்னும்படியான கட்டுரைகள், நேர்காணல்கள். பாண்டியராஜனுக்கு அது சொந்தப் படம் என்பதால் மும்பைக்குச் சென்று வாங்கிவந்த பன்னிற விளக்குகளைப் பயன்படுத்தி பாடற்காட்சிகள் எடுக்கப்பட்டனவாம். வைஷ்ணவி அறிமுகம். பெரிய சுற்று வருவாராம். அமலா நன்கு ஒத்துழைத்து நடித்தார். ஜனகராஜுக்கு அவர் நடிப்பு வாழ்க்கைக்குப் பொருள்சொல்லும்படியான வேடம். இப்படிப் போயின அந்தச் செய்திகள். அடுத்த திரைப்படம் ஆத்தா உன் கோவிலிலே. ராசா உன் மனசிலே என்ற படத்தின் வெற்றியால் பரபரப்பாகியிருந்த கஸ்தூரிராஜா என்பவரின் இரண்டாம்படம். இனி அடுத்த பாரதிராஜா அவர்தான் என்று அந்தச் சிறப்பிதழில் புகழாரம். அதில் அறிமுகமாகியிருந்த புதுமுகநடிகர் நன்றாக நடனமாடுகிறார், கமல்போல் வருவார் என்றெல்லாம் ஆகாஓகோக்கள்.

    இன்றைக்கு எண்ணிப் பார்த்தால் அவ்விதழ்களில் கூறப்பட்டிருந்தவை பல நடந்தன. பல நடக்கவில்லை. வைஷ்ணவியும் அந்தப் புதுமுக நடிகரும் தம் கலைத்துறை முயற்சிகளில் என்னவானார்களோ அறியேன். ஆனால், அந்தச் சிறப்பிதழ்களைப் படித்துவிட்டு அப்படங்களைப் பார்த்தே ஆகவேண்டும் என்னும் தூண்டுதலைப் பெற்றது உண்மை. விளம்பரத்திற்கு அந்த விளம்பரப் பொருளைத் துய்க்க வேண்டும் என்று தூண்டும் ஆற்றல் உண்டு. சிறப்பிதழ்ப் படங்களான நாயகன் காலத்தை வென்ற படமாகவும், நெத்தியடி ஆத்தா உன் கோவிலிலே இரண்டும் காலத்தில் கரைந்த படங்களாகவும் ஆகின. ஜெமினி சினிமாவும் நின்றுபோனது. பெரும் நிறுவனத்திடமிருந்து வெளியான போதும் சினிமா எக்ஸ்பிரஸ் இதழும் அண்மையில் நிறுத்தப்பட்டது. இன்றைக்குத் திரைப்பட இதழ்கள் சில பெயரளவுக்கு வெளியாகின்றன. அந்தப் பொறுப்பினை முன்னணி இதழ்களே ஏற்றுக்கொண்டுவிட்டன என்றும் கூறலாம்.

    English summary
    Cinema Article about the special issues of gemini cinema
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X