Oscars 2023 : ஆஸ்கர் விருதை வென்ற 'தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ்’ தமிழ் ஆவணப்படம் உருவான கதை!
சென்னை : ஆஸ்கர் விருதை வென்ற 'தி எலிஃபண்ட் விஸ்பரர்ஸ்' தமிழ் ஆவணப்படம் உருவான கதை குறித்து தெரிந்து கொள்ளலாமா?
அகாடமி விருது எனப்படும் 95வது ஆஸ்கர் விருது வழங்கும் விழா அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸில் கோலாகலமாக நடைபெற்றது
இந்த விருது வழங்கும் விழாவில் இந்தியா சார்பில் பலர் கலந்து கொண்டனர்.

தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ்
தாயை பிரிந்து தவித்து வந்த இரண்டு குட்டி யானைகளை தனது குழந்தைபோல வளர்ந்து வந்த நீலகிரியின் முதுமலையை சேர்ந்த பொம்மன், பெள்ளி என்ற தம்பதியினர் பற்றிய ஆவண குறும்படம் தான் 'தி எலிபெண்ட் விஸ்பரர்ஸ்'. இந்த திரைப்படத்தை கார்திகி குன்செல்வெஸ் இயக்க, ஸ்வென் பால்கோனர் இசையில், குனெட் மொன்கோ தயாரித்திருந்தார். தமிழ் ஆவண குறும்படமான இப்படம் நெட்பிளிக்ஸில் கடந்த டிசம்பர் மாதம் வெளியாகி பாராட்டை பெற்றது.

ஆஸ்கர் விருதை வென்றது
இதையடுத்து, 95வது ஆஸ்கர் விருதுக்கான ஆவண குறும்பட பிரிவில் இந்தியா சார்பில் கலந்து கொண்ட தி எலிபெண்ட விஸ்பரர்ஸ் படம் சிறந்த ஆவண குறும்படமாக தேர்ந்தெடுக்கப்பட்டு ஆஸ்கர் விருதை வென்றுள்ளது. ஆவண குறும்படத்தை இயக்கிய கார்திகி குன்செல்வெஸ் மற்றும் தயாரிப்பாளர் குனெட் மொன்கோ ஆகியோர் இணைந்து வந்து ஆஸ்கர் விருதை பெற்றுக்கொண்டனர்.

யானையை வளர்க்கும் தம்பதி
பழங்குடியினத்தைச் சேர்ந்த பொம்மன், பெள்ளி தம்பதியினர் யானை பராமரிப்பாளர்களாகப் பணிபுரிந்து வருகின்றனர். இவர்களிடம் தாயை பிரிந்து காயத்துடன் சுற்றித்திரிந்த ஆண் குட்டி யானை ஒப்படைக்கப்படுகிறது. அந்த யானைக்கு ரகு என பெயர் வைத்து குழந்தை போல வளர்ந்து வருகின்றனர். அதே போல சத்தியமங்கலம் பகுதியில் தாயைப் பிரிந்த மற்றொரு யானைக்கு அம்மு என பெயர் வைத்து வளர்த்து வருகின்றனர்.

முதுமலையின் இயற்கையான அழகு
தமிழ்நாட்டின் முதுமலை தேசிய பூங்காவில் எடுக்கப்பட்ட இந்த ஆவணப்படத்தில், தம்பதியருக்கும் யானைக்கும் இடையே இருக்கும் வலுவான பிணைப்பு, முதுமலை சரணாலயத்தின் இயற்கையான அழகு, இயற்கையோடு இணைந்து வாழும் பழங்குடி மக்களின் வாழ்க்கை முறை ஆகியவை பற்றி அழகாக காட்டப்பட்டுள்ளது.

ஐந்து ஆண்டு போராட்டம்
இந்தத் திரைப்படமானது விலங்குகளுக்கும் மனிதனுக்கும் இடையிலான பிணைப்பை கூறும் இதயத்தைத் தொடும் கதை மட்டுமில்லாமல், இந்திய கலாச்சாரம் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பை பராமரிப்பது குறித்த விழிப்புணர்வு படமாக உள்ளது. இந்த ஆவணப்படத்தை படமாக்க இயக்குநர் கார்த்திகி கோன்சால்வ்ஸ் ஐந்து ஆண்டுகளாக பொம்மன், பெள்ளி தம்பதியினருடன் நேரத்தை செலவழித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











