காதல் தோல்வி.. 22 வயதில் விபரீத முடிவெடுத்த நடிகை.. சினிமாவையே உலுக்கிய நடிகையின் மரணம்!
சென்னை: அவள் ஒரு தொடர்கதை படத்தில் மார்டன் உடை அணிந்து துடுக்காக வலம் வந்த ஜெயலட்சுமியை அவ்வளவு எளிதில் மறந்து விட முடியாது. அந்த படத்தில் வார்த்தைக்கு வார்த்தை படாபட்... படாபட் என வசனம் பேசி படாபட் ஜெயலட்சுமி என பட்டப்பெயர் எடுத்தார். படத்தில் துணிச்சலாக நடித்த ஜெயலட்சுமிக்கு வாழ்க்கையில் துணிச்சல் இல்லாமல் போனதால் தனது 22 வயதிலேயே வாழ்க்கையை முடித்துக்கொண்டார்.
ஆந்திர மாநிலத்தில் பிறந்த படாபட் ஜெயலட்சுமி 1972ம் ஆண்டு வின்சென்ட் இயக்கத்தில் வெளியான தீர்த்தயாத்ரா மலையாளத் திரைப்படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானார். இந்த படத்தை தொடர்ந்து இது மனுசுயனோ? என்ற மலையாளப் படத்தில் நடித்தார். அதன் பிறகு கே. பாலசந்தர் இயக்கிய அவள் ஒரு தொடர்கதை திரைப்படத்தில் நடித்தார். மலையாளத்தில் சுப்ரியா என அழைக்கப்பட்டு வந்த இவரை, பாலசந்தர் ஜெயலட்சுமி என்ற பெயரில் அறிமுகப்படுத்தினார்.

இந்த படத்தில் ஜெயலட்சுமி அடிக்கடி படாபட் .. படாபட் என்று சொல்லிக் கொண்டே இருந்ததால். பின்னாளில் அதுவே இவரின் அடைமொழியாகிவிட்டது. தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் என கிட்டத்தட்ட 66 படங்களில் நடித்து முக்கிய நடிகைகளின் பட்டியலில் இடம்பிடித்தார். அவள் ஒரு தொடர் கதை படத்தைத் தொடர்ந்து முள்ளும் மலரும், ஆறிலிருந்து அறுபது வரை போன்ற படங்கள் அவரின் சினிமா பயணத்தில் மிக முக்கியமான படங்களாகும். ரஜினி, கமல், என்.டி.ஆர். சிரஞ்சீவி போன்ற சூப்பர் ஸ்டார்களுடன் ஜோடி சேர்த்து ஏராளமான படங்களில் நடித்து மக்கள் மனதில் இடம் பிடித்தார்.

திடீர் தற்கொலை: முள்ளும் மலரும் படத்தில் ரஜினிகாந்தின் மனைவியாக நடித்த இவர், அந்த படத்தில் வரும் நித்தம் நித்தம் நெல்லு சோறு... நெய் மனக்கும் கத்திரிக்காய் என ஒரே பாட்டிலேயே மொத்த எக்பிரஷன்சையும் கொடுத்து ரசிகர்கள் மனதில் இடம் பிடித்தார். தொடர்ந்து அடுத்தடுத்து டாப் நடிகர்களின் படத்தில் நடித்து வந்தார் ஜெயலட்சுமி. புகழின் உச்சியில் இருந்த ஜெயலட்சுமி ஒரு நாள் அளவுக்கு அதிகமான தூக்க மாத்திரை சாப்பிட்டு உயிரிழந்தார். அவரது தற்கொலைக்கு காரணம் காதல் தோல்வி என்று அப்போது பத்திரிக்கையில் செய்திகள் வந்தன.

22 வாழ்க்கை முடிந்தது: எம்ஜிஆரின் அண்ணனான எம்ஜி.சக்கரபாணியின் மகன் எம்.சி.சுகுமாரை ஜெயலட்சுமி உயிருக்கு மேலாக காதலித்து வந்ததாக சொல்லப்படுகிறது. அவர் மீது வைத்த காதலால் சுகுமாருக்கு படாபட் ஜெயலட்சுமி, தான் உழைத்து சம்பாதித்த அனைத்து சொத்துக்களை கொடுத்திருக்கிறார். ஆனால் சுகுமாரோ, ஒரு கட்டத்தில் அவருக்கு துரோகம் செய்துவிட்டார். இதனால் மன வேதனையில் இருந்த ஜெயலட்சுமி தூக்க மாத்திரை சாப்பிட்டு தனது வாழ்க்கையை முடித்துக்கொண்டார். நல்ல திறமையான நடிகை என பலரிடம் பாராட்டை பெற்ற ஜெயலட்சுமி காதல் தோல்வியால் 22வயதில் வாழ்க்கையை முடித்துக்கொண்டது அந்த காலத்தில் சினிமாவையே குலுக்கும் செய்தியாக இருந்தது.


Click it and Unblock the Notifications











