கொரோனா லாக்டவுன்.8 மாதத்துக்குப் பிறகு தியேட்டர்கள் நாளை திறப்பு. புதிய படங்கள் ரிலீஸில் சிக்கல்!
சென்னை: லாக்டவுனால் மூடப்பட்டிருந்த திரையரங்குகள் நாளை திறக்கப்படுகின்றன. இருந்தாலும் புதிய படங்கள் ரிலீஸ் ஆவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.
கொரோனா லாக்டவுன் காரணமாக மூடப்பட்ட திரையரங்குகளை திறக்க மத்திய அரசு அனுமதி அளித்தது.
இந்நிலையில் தமிழக அரசு, 10 ஆம் தேதி முதல். 50 இருக்கைகளுடன் தியேட்டர்களை திறக்க அனுமதி அளித்தது.

விபிஎப் பிரச்னை
இதையடுத்து 8 மாதத்துக்குப் பிறகு தியேட்டர்கள் திறக்கப்பட இருப்பதால், அதற்கான வேலைகளில் தியேட்டர் அதிபர்கள் இறங்கினர். இந்நிலையில் தயாரிப்பாளர்கள் விபிஎப் பிரச்னையை கையில் எடுத்தனர். விபிஎப் கட்டணத்தை கட்ட முடியாது என்றனர். தியேட்டர்கள், டிஜிட்டலுக்கு மாறியபின், படங்களைத் திரையிடும் புரொஜக்டரும் டிஜிட்டல் மயமானது.

கட்டணத் தொகை
அதற்கான டிஜிட்டல் மாற்றம் உள்ளிட்டவற்றை வழங்குவதை விபிஎப் (Virtual Print Fee) கட்டணம் என அழைக்கிறார்கள். தியேட்டர்களில் அந்த சேவையை வழங்கும் விபிஎப் நிறுவனங்கள், புரொஜக்டர் கருவியை நிறுவியுள்ளன. அந்தக் கருவிக்கான கட்டணத் தொகை உள்ளிட்ட விபிஎப் கட்டணங்களை இதுவரையிலும் தயாரிப்பாளர்கள், தியேட்டர்காரர்களுக்கும், விபிஎப் நிறுவனங்களுக்கும் வழங்கி வந்தார்கள்.

கொடுக்க முடியாது
இதற்கு இப்போது தயாரிப்பாளர்கள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். 12 வருடங்களுக்கு மேலாகக் கட்டி வரும் VPF என்கிற வாராவாரம் கட்டணத்தை, இனிமேல் கொடுக்க முடியாது என்கிறார்கள். இதனால் புதிய படங்கள் ரிலீசில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தியேட்டர்கள் 10 ஆம் தேதி திறக்கப்பட்டாலும் புதிய படங்கள் ரிலீஸ் ஆகாத நிலை ஏற்பட்டுள்ளது.

சமரசம் ஏற்படவில்லை
இது தொடர்பாக தியேட்டர் அதிபர்களுக்கும் தயாரிப்பாளர்களுக்கும் இடையே நடந்த பேச்சுவார்த்தையில் சமரசம் ஏற்படவில்லை. ஆனாலும் தியேட்டர்கள் நாளை திறக்கப்பட இருக்கிறது. 'அரசு உத்தரவுப்படி நாளை தியேட்டர்கள் திறக்கப்படும். தயாரிப்பாளர்கள் புதிய படங்களை கொடுக்காவிட்டால் பழைய படங்களை திரையிடுவோம்' என்று தியேட்டர் உரிமையாளர்கள் சங்க நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

தனுஷின் அசுரன்
அதன்படி, ரஜினிகாந்தின் சிவாஜி, கமல்ஹாசனின் பாபநாசம், விஜய்யின் துப்பாக்கி, பிகில், அஜித்குமாரின் வீரம், விஸ்வாசம், தனுஷின் அசுரன் மற்றும் கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால், பரியேறும் பெருமாள் உள்ளிட்ட படங்களை மீண்டும் திரையிட முடிவு செய்து இருப்பதாக கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications











