தீபாவளி ரேஸ்.... ரெண்டு படங்கள்தான்... ரேஸிலிருந்து ஒதுங்குவது யார்?
சென்னை: இந்த தீபாவளிக்கு வரும் தமிழ்ப் படங்களுக்கு மொத்தம் எத்தனை தியேட்டர்கள் கிடைக்கப் போகின்றன என்ற விவரம் தெரிய வந்துள்ளதால், கோடம்பாக்கம் செம டென்ஷனில் உள்ளது.
முக்கியமாக, இரண்டு படங்கள் மட்டுமே வெளியாகும் சூழல். மோஸ்ட் எக்ஸ்பெக்டட் படம் என்ற அந்தஸ்திலிருக்கும் அஜீத்தின் ஆரம்பம் வருமா... இரண்டு வாரங்கள் தள்ளிப் போகுமா என்ற பரபரப்பு பேச்சு கிளம்ப ஆரம்பித்துவிட்டது.
இவ்வளவுக்கும் காரணம், தியேட்டர்கள் பற்றாக்குறைதான்.

750 அரங்குகள்தான்...
1000 ப்ளஸ் அரங்குகள் மட்டுமே உள்ள தமிழகத்தில், புதுப்படங்களை வெளியிடும் அளவுக்கு உள்ளவை 750 அரங்குகள் மட்டுமே. இவற்றில் தரமான அரங்குகள் என்று பார்த்தால் 500 முதல் 550 அரங்குகள் மட்டுமே தேறும்.

இரண்டாம் உலகம் சத்தத்தையே காணோம்...
தீபாவளி ரேஸில் முன்பு நான்கு படங்கள் இருந்தன. இன்னும் 15 நாட்கள்தான் உள்ள நிலையில், அந்த ரேஸிலிருந்து சொல்லாமல் கொள்ளாமல் கழன்று கொண்டது இரண்டாம் உலகம். படத்தின் இசைக் கோர்ப்புப் பணிகளே இன்னும் முடியாமல் ஹங்கேரியில் நடந்து கொண்டிருப்பதால் இந்தப் படம் நிச்சயம் தீபாவளிக்குக் கிடையாது என்று ஆகிவிட்டது.

ஆல் இன் அழகு ராஜா கன்பர்ம்
தீபாவளி ஸ்பெஷல் என கார்த்தியின் ஆல் இன் ஆல் அழகுராஜா அறிவிக்கப்பட்டதிலிருந்து பம்பரமாக ஓடி முதல் தர தியேட்டர்களை ஒப்பந்தம் செய்துவிட்டார் தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா. இதுவரை அவர் 300 அரங்குகளை சத்தமில்லாமல் ஒப்பந்தம் செய்துவிட்டார் ஆல் இன் ஆல் அழகுராஜாவுக்காக. மேலும் 50 அரங்குகளில் வெளியிட முயன்று வருகிறார். அதாவது புதுப்படங்களை வெளியிடத் தயாராக உள்ள 750 அரங்குகளில் கிட்டத்தட்ட பாதியைப் பிடித்துவிட்டார் ஞானவேல் ராஜா.

300ஐ குறிவைக்கும் பாண்டிய நாடு
மறு பக்கம், தயாரிப்பாளராகக் களமிறங்கியுள்ள விஷால், தனது பாண்டிய நாடு படத்துக்காக 300 தியேட்டர்கள் வேண்டும் என்று மல்லுக் கட்டி வருகிறார். தயாரிப்பாளர் சங்கம், திரையரங்கு உரிமையாளர் சங்கம் என அனைத்துத் தரப்பு நிர்வாகிகளையும் சந்தித்து, தனது மதகஜராஜாவுக்கு ஏற்பட்ட நிலைமையைக் கருத்தில் கொண்டு, பாண்டிய நாட்டை அதிக அரங்குகளில் வெளியிட்டு முதலீட்டை எடுக்க உதவுமாறு கோரியுள்ளார்.

180 புக் ஆகிடுச்சி
குறிப்பாக தயாரிப்பாளர் சங்க நிர்வாகிகள், விஷாலுக்காக கொஞ்சம் விட்டுக்கொடுங்க என மற்ற தரப்பினரை வெளிப்படையாகவே வற்புறுத்துகின்றனர். இதுவரை விஷாலுக்கு 180 அரங்குகள் கிடைத்திருக்கின்றன. இன்னும் 100 அரங்குகள் கேட்டுக் கொண்டிருக்கிறார் அவர்.

அப்படின்னா அஜீத் படம்....
இப்போதுள்ள நடிகர்களில் பெரிய ஓப்பனிங் உள்ள நடிகர் என அனைவராலும் ஒப்புக் கொள்ளப்படுபவர் அஜீத். பில்லா 2 வெளியாகு கிட்டத்தட்ட 2 ஆண்டுகள் ஆகிவிட்ட நிலையில், ஆரம்பம் படத்தை பெரிய அளவில் எதிர்ப்பார்த்துள்ளனர். எனவே குறைந்தது 500 தியேட்டர்களிலாவது இந்தப் படத்தை வெளியிட வேண்டும் என தயாரிப்பாளர் தரப்பில் விரும்புகிறார்கள்.

பெரும் விலைக்கு...
ஆரம்பம் படத்தை பெரிய விலைக்கு விற்றுள்ளனர். என்எஸ்சி ஏரியாவை ஐங்கரனே நேரடியாக வெளியிடுகிறது. மற்ற ஏரியாக்களிலும் விநியோகஸ்தர்கள் வெளியீட்டுக்குக் காத்திருக்கின்றனர். ஆனால் இந்தப் படத்துக்கு 150 தியேட்டர்கள்தான் கிடைக்கும் என்ற நிலை. கொஞ்சம் நெருக்கிப் பிடித்தால் 200 தியேட்டர்கள்.

இரண்டு வாரங்கள் தள்ளிப் போகப் போவது யார்?
பெரிய ஓபனிங் உள்ள ஹீரோவான அஜீத் படத்துக்கு 500 தியேட்டர்கள் வரை தேவைப்படுவதால், படத்தை இரண்டு வாரம் கழித்து வெளியிடுவதா அல்லது கிடைத்தவரை போதும் என தீபாவளிக்கே வெளியிடுவதா என்ற குழப்பத்தில் தவிக்கிறது தயாரிப்புத் தரப்பும் விநியோகஸ்தர்கள் தரப்பும்.


Click it and Unblock the Notifications











