தொப்பையும் தொந்தியுமாக இளம் நடிகர்.. வைரலாகும் தீனி டீசர் !
சென்னை : நடிகர் அசோக்செல்வன் நடித்த உள்ள தீனி படத்தின் டிரைலர் வெளியானது.
நித்யா மேனன் மற்றும் ரிது வர்மா என இரண்டு கதாநாயகிகள் இதில் நடித்திருக்க அசோக்செல்வன் இதுவரை நடித்திராத வித்தியாசமான கதாபாத்திரத்தில் நடித்து அசத்தியுள்ளார்.
தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகி வரும் தீனி படத்தின் டிரைலர் இப்பொழுது வெளியாகி அனைவரையும் கவர்ந்து சக்கைபோடு போட்டு வருகிறது.

வயதான தோற்றத்தில்
தமிழ் சினிமாவில் அனைவரையும் கவர்ந்த இளம் நடிகர்களில் மிக முக்கியமானவராக நடிகர் அசோக்செல்வன். கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் வெளியான பீட்சா படத்தின் தொடர்ச்சியாக பீட்சா 2 உருவாக அதில் கதாநாயகனாக நடித்து தமிழ் சினிமாவிற்கு அறிமுகமானார். நாளைய இயக்குனர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு இப்பொழுது தனித்துவமான இயக்குனராக வெற்றி நடை போட்டு வரும் நலன் குமாரசாமி இயக்கத்தில் வித்தியாசமான கேங்க்ஸ்டர் திரைப்படமாக உருவான சூதுகவ்வும் படத்தில் விஜய் சேதுபதி வயதான தோற்றத்தில் நடித்து இருந்தது பரபரப்பாக பேசப்பட்ட நிலையில் அதில் நண்பர்களில் ஒருவராக அசோக் செல்வன் நடித்திருப்பார்.

திருப்புமுனையாக அமைந்துள்ளது
பல திரைப்படங்களில் நடித்து இருந்தாலும் சொல்லிக்கொள்ளும் அளவிற்கு மிகப்பெரிய வெற்றியை இன்னும் கொடுக்காத அசோக்செல்வன் தெகிடி என்ற வித்தியாசமான திரில்லர் திரைப்படத்தில் நடித்து அனைவரின் பாராட்டுகளையும் பெற்றதோடு, சமீபத்தில் வெளியான ஓ மை கடவுளே இவரின் திரை வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்துள்ளது.

பெரிய தொப்பையுடன்
பிரபல மலையாள திரைப்படம் ஒன்றின் ரீமேக்கில் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கும் அசோக்செல்வன் அதில் இவருக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் உறுதி செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில் தமிழை தொடர்ந்து தெலுங்கிலும் நின்னிலா நின்னிலா என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். இந்த படம் தமிழில் தீனி என்ற பெயரில் ரிலீசாகிறது. இதுவரை ஹேண்ட்சம் பாயாக வந்து இளம் பெண்களின் மனதை கொள்ளை கொண்ட அசோக் செல்வன் இந்த படத்தில் பெரிய தொப்பையுடன் ஆளே அடையாளம் தெரியாத அளவுக்கு மாறிப்போய் சமையல்காரர் கதாபாத்திரத்தில் நடித்துள்ளார்.

தீனி
நடிகைகள் நித்யா மேனன் மற்றும் ரிது வர்மா என இருவர் இதில் நடித்திருக்க நித்யா மேனன் காதலியாகவும், ரிது வர்மா உடன் பணிபுரியும் மற்றுமொரு சமையல்காரர் எனவும் தெரிகிறது. சாதாரணமான தமிழ் படங்களின் சாயலில் இல்லாமல் ஹாலிவுட் தரத்தில் மிகவும் வித்தியாசமாக மென்மையாகவும் உணர்ச்சிப் பூர்வமாகவும் உருவாகியிருக்கும் தீனி படத்தின் டிரைலர் இப்பொழுது வெளியாகியுள்ளது. பிரேமம் படத்திற்கு இசையமைத்த ராஜேஷ் முருகேசன் இந்த படத்திற்கும் இசையமைத்துள்ளார்.

நேரடியாக ஓடிடியில் வெளியாகிறது
காமெடியும்,காதலும், சமையலும் என அனைத்தும் பின்னிப்பிணைந்த மென்மையான உணர்வு தரும் படமாக தீனி உருவாகி இருக்க இப்பொழுதும் இதன் டிரைலர் வெளியாகி அனைவரது கவனத்தையும் பெற்று விரைவில் படமும் அறுசுவையாக அனைவரையும் ரசிக்க வைக்கும் என நம்பப்படுகிறது. மேலும் இந்தப் படம் நேரடியாக ஓடிடியில் வெளியாகிறது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











