தீரன் அதிகாரம் ஒன்று விமர்சனம்
Recommended Video

கார்த்தி, ரகுல்ப்ரீத் சிங் நடிப்பில் சதுரங்க வேட்டை எச்.வினோத் இயக்கத்தில் வெளியாகி இருக்கும் படம் தீரன் அதிகாரம் ஒன்று. சிறுத்தை படத்திற்கு பின் கார்த்தி போலீஸ் அதிகாரியாக நடிக்கும் படம், உண்மை சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு எடுக்கப்பட்ட படம் என்ற காரணங்களால் எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருந்தது.
1995 முதல் 2007 வரை இந்தியா முழுக்க கொலை, கொள்ளை சம்பவங்கள் நிகழ்ந்தன. தனியாக இருக்கும் வீடுகளில் கதவை உடைத்தோ, உதவி கேட்பது போலவோ உள்ளே புகுந்து வீட்டில் இருக்கும் அனைவரையுமே கொடூரமாக கொன்று கொள்ளை அடிக்கும் கும்பல் நாடு முழுக்க தங்கள் கைவரிசையை காட்டி மிரட்டியது. அந்த கும்பலை தமிழ்நாட்டு காவல்துறை சுற்றி வளைத்து சாதனை புரிந்ததுதான் தீரன் அதிகாரம் ஒன்று படத்தின் கதை.

இதுவரை பார்த்த சினிமா போலீஸ் கதைகளில் இருந்து இயல்பான ஒரு போலீஸ் கதையாக எடுக்கத் துணிந்து அதில் ஓரளவுக்கு வெற்றியும் பெற்றிருக்கும் வினோத்துக்கு பாராட்டுக்கள்.
குற்றவாளியை டுப் டுப் என்று சுடாமல் வியூகங்கள் அமைத்து சுற்றி வளைப்பதும், தனது கடின முயற்சிகளையும் உழைப்பையும் புரிந்துகொள்ளாமல் அவமானப்படுத்தும் உயர் அதிகாரிகளின் முன்னால் அமைதியாக இருப்பதுமாக இதுவரை நாம் பார்த்திராத தீரனாக கார்த்தி. காதல் காட்சிகளிலும், வியூகம் வகுக்கும்போதும், வியூகங்களில் தோற்கும்போது மருளுவதுமாக செம்மையாக ஸ்கோர் செய்திருக்கிறார். ஆனால் ஆக்ஷன் காட்சிகளில் தீரனை மீறிய அலெக்ஸ் பாண்டியன் வெளியே வருகிறார். அதனைக் கண்ட்ரோல் செய்திருக்கலாம்.

மக்கு காதலியாகவும் கணவனின் நேரத்துக்கு ஏங்கும் மனைவியாகவும் ரகுல்ப்ரீத் சிங், கவர்கிறார். கார்த்திக்கு உதவி செய்யும் அதிகாரியாக போஸ் வெங்கட்டும், உயர் அதிகாரியாக வர்கீஸ் மேத்யூவும் தங்கள் பங்களிப்பை நிறைவாக செய்திருக்கிறார்கள். மனோபாலா, சத்யன் ஆகியோரும் இருக்கிறார்கள்.
வில்லனாக அபிமன்யு சிங் மிரட்டியிருக்கிறார்கள்.
வினோத்தின் சில நக்கல் வசனங்கள் கைதட்டல்களைப் பெறுகின்றன.

சத்யனின் ஒளிப்பதிவு படத்துக்கு பெரிய பலம். ஜிப்ரானின் இசை படத்தின் வேகத்துக்கு ஈடு கொடுக்கிறது.
இயல்பான போலீஸ் வாழ்க்கையுடன் தொடங்கும் படம் கொள்ளையர்கள் போஸ் வெங்கட், கார்த்தி வீடுகளுக்கு புகுந்து கொள்ளையடிக்கும் வரை இயல்பாகவே செல்கிறது. ஆனால் அதன் பின் சினிமாவுக்கே உண்டான கமர்ஷியல் அம்சங்கள் தொடங்குகின்றன. தெலுங்கு படங்களுக்கான டெம்ப்ளேட்களை சேர்த்து சொதப்பியது ஏன்?

அழகாகவே இருந்தாலும் வேகமாக செல்லும் திரைக்கதைக்கு வேகத்தடையாக இருக்கின்றன ரொமான்ஸ் காட்சிகள்.
நமது காவல்துறையைப் பற்றிய படம். ஆந்திராவுக்காக மசாலாவை அதிகமாக்கி இருக்கிறார்கள். நமது காவல்துறையை போலவே சிற்சில குறைகள் இருந்தாலும் பெருமையாக சல்யூட் அடிக்கலாம் இந்த காக்கிக்கு!
- க.ராஜீவ் காந்தி


Click it and Unblock the Notifications











