இமான் அண்ணாச்சி வீட்டில் திருட்டு.. 41 சவரன் நகை, ரூ. 10 ஆயிரம் மாயமானதாக போலீசில் புகார்
இமான் அண்ணாச்சி வீட்டில் 41 சவரன் நகை கொள்ளை போனதாக போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை: காமெடி நடிகர் இமான் அண்ணாச்சி வீட்டில் நகை கொள்ளை போன சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சின்னத்திரையில் இருந்து வெள்ளித்திரைக்கு காமெடி நடிகராக அறிமுகமானவர் நடிகர் இமான் அண்ணாச்சி. சென்னை காதல், தலைநகரம், கோ, ஜில்லா, சாமி 2 என பல படங்களில் நடித்துள்ளார். நடிப்பிற்கு இடையே தொலைக்காட்சியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராகவும் இருந்து வருகிறார்.

இவரது, சொல்லுங்கண்ணே சொல்லுங்க மற்றும் குட்டீஸ் சுட்டீஸ் நிகழ்ச்சிகள் மக்களிடையே மிகவும் பிரபலம். இவர் சென்னை அரும்பாக்கம் ராஜீவ்காந்தி நகர் பகுதியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார்.
இந்நிலையில், இமான் அண்ணாச்சி அரும்பாக்கம் காவல் நிலையத்தில் புகார் ஒன்று அளித்துள்ளார். அதில் அவர், தனது வீட்டில் பீரோவில் இருந்த 41 சவரன் நகைகளும், பத்தாயிரம் ரூபாய் ரொக்கமும் கொள்ளையடிக்கப்பட்டிருப்பதாக தெரிவித்துள்ளார். வீட்டில் ஆட்கள் இருந்த போதே, நகைகள் காணாமல் போனதாக அந்தப் புகாரில் கூறப்பட்டுள்ளது.
இந்தப் புகாரின் அடிப்படையில் அரும்பாக்கம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இமான் அண்ணாச்சி வீட்டில் நடந்த இந்த திருட்டு சம்பவம் அப்பகுதி மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சமீபத்தில், தியாகராயநகரில் உள்ள நடிகை வடிவுக்கரசி வீட்டிலும் இதே போல், நகை கொள்ளை போனது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











