Aishwarya Rai - 200 கிலோ தங்கம்.. ஐஸ்வர்யா ராயை சுற்றி 50 பாதுகாவலர்கள்.. பட்டத்து ராணிக்கூட தோத்துருவாங்க போல
மும்பை: Aishwarya Rai (ஐஸ்வர்யா ராய்) 200 கிலோ தங்கம் அணிந்திருந்த ஐஸ்வர்யா ராயை சுற்றி 50 பாதுகாவலர்கள் எப்போதும் இருந்ததாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.
இந்திய அளவில் பிரபலமானவராக இருப்பவர் ஐஸ்வர்யா ராய். கடந்த 1994ஆம் ஆண்டு நடந்த உலக அழகி போட்டியில் கலந்துகொண்டு வென்றதன் மூலம் வெகு பிரபலமானார். மிஸ் யுனிவெர்ஸ் பட்டம் வென்ற சுஷ்மிதா சென்னை விட மிஸ் வேர்ல்டு பட்டம் வென்ற ஐஸ்வர்யா ராய் ரொம்பவே பிரபலமாகிவிட்டார். இந்தியாவிலிருந்து எத்தனை பேர் உலக அழகி பட்டம் வென்றாலும் இந்தியர்கள் மனதில் உலக அழகி என்றவுடன் முதலில் நியாபகத்துக்கு வருபவர் ஐஸ்வர்யா ராய்தான்.

சினிமாவில் என்ட்ரி: உலக அழகி பட்டம் வென்ற ஐஸ்வர்யா ராய் மணிரத்னம் இயக்கத்தில் தமிழில் இருவர் படம் மூலம் திரையுலகில் அறிமுகமானார். அந்தப் படம் சரியாக போகாவிட்டாலும் அடுத்தடுத்து அவருக்கு ஹிந்தியில் வாய்ப்புகள் குவிந்தன. இதன் காரணமாக டாப் நடிகையாக உயர்ந்தார் அவர். அந்த சமயத்தில் சல்மான் கானுடன் காதலில் விழுந்த ஐஸ்வர்யா சில காரணங்களால் மூன்று வருடங்களுக்கு பிறகு அந்தக் காதலிலிருந்து வெளியே வந்தார்.
தமிழில் ஐஸ்வர்யா: தமிழில் அறிமுகமானாலும் பாலிவுட்டில் புகழடைந்ததை அடுத்து கோலிவுட்டில் செலக்ட்டிவ்வான படங்களை தேர்ந்தெடுத்து நடிப்பதை அவர் வழக்கமாக வைத்திருக்கிறார். அதன்படி ஷங்கர் இயக்கத்தில் ஜீன்ஸ், எந்திரன், ராஜீவ் மேனன் இயக்கத்தில் கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன், மணிரத்னம் இயக்கத்தில் ராவணன் உள்ளிட்ட படங்களில் நடித்தார். கடைசியாக அவர் பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டு பாகங்களிலும் நந்தினி கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.
நந்தினி: பொன்னியின் செல்வன் இரண்டு பாகங்களிலும் அவர் ஏற்றிருந்த நந்தினி கதாபாத்திரத்தில் அட்டகாசமான நடிப்பை வெளிப்படுத்தியிருந்தார். படம் கலவையான விமர்சனத்தை பெற்றிருந்தாலும் ஐஸ்வர்யாவின் நடிப்புக்கு பலத்த வரவேற்பு கிடைத்தது. குறிப்பாக கல்கி உருவாக்கியிருந்த கற்பனையான நந்தினி கதாபாத்திரத்திற்கு ஐஸ்வர்யா ராய் உயிர் கொடுத்துவிட்டார் என ரசிகர்கள் புகழ்ந்தனர்.
புதிய தகவல்: இந்தச் சூழலில் அவர் ஜோதா அக்பர் படத்தில் நடித்தபோது நடந்த சம்பவம் குறித்த தகவல் வெளியாகியிருக்கிறது. அதன்படி, அந்தப் படத்தில் ஐஸ்வர்யா ராய் ராணி கதாபாத்திரம் ஏற்றிருந்தார். அதற்காக அவர் உண்மையான தங்க நகைகள் மற்றும் விலையுயர்ந்த ஆடைகளைத்தான் அணிந்திருந்தாராம். தங்கம் மட்டுமின்றி பிற விலை உயர்ந்த பொருட்களால் ஆன நகைகளையும் அவர் அணிந்திருக்கிறார்.
200 கிலோ தங்கம்: அந்தப் படம் முழுவதும் கிட்டத்தட்ட 200 கிலோ தங்க நகைகளை ஐஸ்வர்யா ராய் தனது உடலில் அணிந்திருக்கிறார். போலியாக எதுவுமே இருக்கக்கூடாது என்பதற்காக நகைகளை தயாரிக்க படத்தின் இயக்குநர் அஷுதோஷ் கௌவாரிகர் 70 பேரை நியமித்திருக்கிறார். அதுமட்டுமின்றி விலையுயர்ந்த நகைகள், ஆடைகள் ஆகியவைகளின் பாதுகாப்பை கருத்தில்கொண்டு ஐஸ்வர்யா ராய்க்கென்று 50 பாதுகாவலர்களும் நியமிக்கப்பட்டிருக்கின்றனர்.
அந்த பாதுகாவலர்களின் புடைசூழத்தான் ஐஸ்வர்யா ராய் படத்தின் செட்டுக்கு வந்து நடித்துக்கொடுத்திருக்கிறார். தற்போது இந்தத் தகவல் இணையத்தில் ட்ரெண்டாகியுள்ளது. ஜோதா அக்பர் படம் கடந்த 2008ஆம் ஆண்டு வெளியாகி மெகா ஹிட்டானது. ஐஸ்வர்யா ராய்க்கு ஜோடியாக கிருத்திக் ரோஷன் நடித்திருந்தார். படத்துக்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். இந்தப் படம் தமிழிலும் டப் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











