அந்தப் பெண்தான் டார்ச்சர் செய்தார்.. பாலியல் புகார் பற்றி மனம் திறந்த ஜானி மாஸ்டர்?
ஹைதராபாத்: பிரபலமான நடன அமைப்பாளராக இருப்பவர் ஜானி மாஸ்டர். திருச்சிற்றம்பலம் படத்துக்காக தேசிய விருதையும் பெற்றிருக்கிறார். ஏராளமான தமிழ் படங்கள், தெலுங்கு படங்களில் பணியாற்றியிருக்கும் அவர் மீது பெண் நடன கலைஞர் ஒருவர் பாலியல் புகார் கொடுத்ததை அடுத்து ஜானி மாஸ்டர் அதிரடியாக கைது செய்யப்பட்டார். இந்தச் சூழலில் தன் மீது சுமத்தப்பட்ட பாலியல் புகார் குறித்து ஜானி மாஸ்டர் விளக்கமளித்திருப்பதாக ஒரு தகவல் உலாவிக்கொண்டிருக்கிறது.
கோலிவுட், டோலிவுட் உள்ளிட்ட திரைத்துறையில் ஃபேமஸான நடன அமைப்பாளராக வலம் வந்துகொண்டிருப்பவர் ஜானி மாஸ்டர். எந்தப் படமாக இருந்தாலும் கூப்பிடுங்கள் ஜானி மாஸ்டரை என்ற நிலையில் இருக்கிறார் அவர். தமிழில் வாரிசு, பீஸ்ட், திருச்சிற்றம்பலம் உள்ளிட்ட ஏராளமான படங்களின் பாடல்களுக்கு நடனம் அமைத்திருக்கும் அவர்; மேகம் கருக்காதா பெண்ணே பாடலுக்கு கடந்த வருடம் தேசிய விருதையும் பெற்று அசத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

விமர்சனம்: அவரது நடன அமைப்புகள் பல பாடல்களில் இருந்தாலும் விமர்சனங்களையும் அதிக அளவு சந்தித்திருக்கிறார் அவர். முக்கியமாக பீஸ்ட், வாரிசு படங்களின் பாடல்களுக்கு அவர் அமைத்த நடன அசைவுகள் பெரும் ட்ரோலுக்கு உள்ளாகின. மேலும் விஜய் என்ற அசால்ட் டான்ஸரையே இப்படி வேஸ்ட் ஆக்கிவிட்டாரே ஜானி என்று பலர் ஓபனாகவே பேச ஆரம்பித்தார்கள். இருந்தாலும் ஜானியின் நடனத்துக்கென்று பலரும் ரசிகர்களாக இருக்கிறார்கள் என்பது எதார்த்தம்.
பாலியல் புகார்: சூழல் இப்படி இருக்க ஜானி மாஸ்டர் மீது பெண் நடன கலைஞர் ஒருவர் பாலியல் புகார் கொடுத்தார். அதாவது, ஜானி மாஸ்டர் தன்னை பாலியல் வன்கொடுமை செய்துவிட்டார் என்று தெரிவித்திருந்தார். புகார் அளித்த பெண் ஜானியிடம் உதவி நடன இயக்குநராக வேலை செய்தவர். இந்த விவகாரம் விஸ்வரூபம் எடுத்ததை அடுத்து ஜானி மாஸ்டர் தலைமறைவானார். ஆனால் அவர் கோவாவில் வைத்து கைது செய்யப்பட்டார். அதனையடுத்து தனது கணவர் மீது சுமத்தப்பட்ட பாலியல் புகார் உண்மை என்றால் கணவரை பிரிய தயார் என்று ஓபனாகவே பேசினார் ஜானியின் மனைவி.
ஜானி மாஸ்டர் வாக்குமூலம்:இந்நிலையில் ஜானியிடம் மேற்கொண்ட விசாரணையின்போது அவர் வாக்குமூலம் அளித்ததாக சில தகவல்கள் வெளியாகின்றன. அவர் அளித்த வாக்குமூலத்தில், "பாலியல் ரீதியாக என் மீது பெண் சுமத்திய குற்றச்சாட்டுக்கள் அனைத்தும் ஆதாரமற்றவை. அவர் ஒரு நிகழ்ச்சியில்தான் எனக்கு பழக்கமானார். அவர் மைனராக இருந்தபோது நான் அவரை பாலியல் வன்கொடுமை செய்ததாக பொய் சொல்கிறார்.
திறமையை கண்டுபிடித்தேன்: அவரிடம் திறமை இருந்தது. அதனை அடையாளம் கண்டுகொண்டு என்னிடம் உதவி நடன இயக்குநராக சேர்த்துக்கொண்டேன். அதற்கு பிறகு அவர் என்னை திருமணம் செய்துகொள்ளும்படி மனரீதியாக டார்ச்சர் செய்துகொண்டே இருந்தார். பலமுறை மிரட்டவும் செய்தார். எனக்கு எதிராக சதி நடந்துகொண்டிருக்கிறது. அந்தப் பெண்ணின் பின் யாரோ இருக்கிறார்கள். எனது வளர்ச்சியை சிலரால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. அவர்கள்தான் என்னை இதில் சிக்க வைத்திருக்கிறார்கள்" என கூறியதாக தெலுங்கு மீடியாக்களில் தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.


Click it and Unblock the Notifications