Leo - லியோ படத்துக்கு நேரமே சரியில்லை போல.. எவ்வளவு பிரச்னைகள்.. இதோ இப்போ ஒரு விபத்து..
சென்னை: Leo Release (லியோ ரிலீஸ்) லியோ படத்தை சுற்றி ஏகப்பட்ட பிரச்னைகள் வந்திருக்கின்றன. இதனால் ரசிகர்களும் அப்செட் ஆக தொடங்கியிருக்கின்றனர்.
விஜய் நடித்திருக்கும் லியோ திரைப்படம் நாளை மறுநாள் வெளியாகவிருக்கிறது. லோகேஷ் கனகராஜ் படத்தை இயக்கியிருக்கிறார். லலித் குமார் படத்தை தயாரிக்க அனிருத் இசையமைத்திருக்கிறார். டிக்கெட் புக்கிங் தொடங்கி ரசிகர்களும் டிக்கெட்டை புக் செய்து 19ஆம் தேதியை திருவிழா போல் கொண்டாடுவதற்கு தயார் நிலையில் இருக்கின்றனர். ஆனால் படத்தின் முதல் சிங்கிள் வெளியானதிலிருந்து இன்றுவரை படத்தை சுற்றி பிரச்னைகள் வந்துகொண்டே இருக்கின்றனர்.

நா ரெடிதான்: லியோ படத்திலிருந்து வெளியான முதல் அப்டேட் என்றால் அது நா ரெடிதான் பாடல்தான். அதுதான் படத்தின் முதல் சிங்கிள். விஜய் பிறந்தநாளுக்கு வெளியான அந்தப் பாடல் அவரது ரசிகர்களால் கொண்டாடப்பட்டாலும். சமூக ஆர்வலர்களால் விளாசப்பட்டது. விஜய் சிகரெட் பிடித்தபடி ஆடியிருக்கக்கூடாது; பாடலின் வரிகளில் போதை தொடர்பான வரிகள் அதிகம் இருக்கின்றன என்ற விமர்சனம் எழுந்தது. ஒருவழியாக அந்தப் பாடலில் புகைப்படித்தல் புற்றுநோயை உண்டாக்கும் மற்றும் உயிரை கொள்ளும் என்ற வாசகம் இணைக்கப்பட்டது. மேலும் வரிகளை மாற்றவும் தணிக்கை குழு உத்தரவிட்டது. இதனால் இந்தப் பிரச்னை முடிவுக்கு வந்தது.
உச்சக்கட்ட ட்ரெய்லர் பஞ்சாயத்து: இந்தப் பாடலுக்கு பிறகு வந்த அப்டேட்டுகளில் பெரும் பஞ்சாயத்தை சந்தித்தது என்றால் லியோ படத்தின் ட்ரெய்லர். அந்த ட்ரெய்லரில் விஜய் பேசிய கெட்ட வார்த்தை பலரையும் கொதிப்படைய செய்தது. அரசியலுக்கு வர ஆசைப்படும் விஜய் இப்படி பேசலாமா என்ற கண்டனங்களும் வாதங்களும் அதிகமாகவே எழுந்தன. ஆனால் அந்த வசனம் படத்தில் மியூட் செய்யப்பட்டது என்று கூறப்பட்டாலும் ட்ரெய்லரில் எபப்டி வைக்கலாம் என்று அடுத்த அம்பு ஏவப்பட்டது. இதனையடுத்து அதற்கும் விஜய்க்கும் எந்த சம்பந்தமுமில்லை. நாந்தான் அவரை வற்புறுத்தி பேச வைத்தேன் என லோகேஷ் தெரிவித்தார்.
ரோகிணி தியேட்டர்: இந்தப் பிரச்னைக்கு இடையே ட்ரெய்லர் வெளியானபோது அதனை ரோகிணி தியேட்டரில் பார்த்த ரசிகர்கள் தியேட்டரி இருக்கைகளை துவம்சம் செய்தனர். இதனால் அந்த தியேட்டருக்கு 10 லட்சம் ரூபாய்வரை நஷ்டம் ஏற்பட்டது. இதுவும் பலரையும் கொதிப்படைய செய்தது. மேலும் விஜய் தனது ரசிகர்களை உடனடியாக கண்டிக்க வேண்டும் என்றும் கோரிக்கைகள் வலுத்தன.
டிக்கெட் ரேட்: இந்தப் பஞ்சாயத்து முடிந்த பிறகு ஒருவழியாக படத்தின் டிக்கெட் புக்கிங் தொடங்கியது. சரி இதிலாவது எந்த பஞ்சாயத்தும் வராது என்று ரசிகர்கள் எதிர்பார்த்தனர். ஆனால் பல திரையரங்குகளில் லியோ படத்தின் டிக்கெட் விலை அளவுக்கதிகமாக இருப்பதாக புகார் எழுந்தது. 2,500 ரூபாய்வரைக்கும் கூட டிக்கெட் ரேட் சென்றது. இதனை கவனித்த ரசிகர்கள் லியோ படத்துக்கு முதல் நாள் போகணும்னா சொத்தை விக்கணும் போலயே என நொந்துகொண்டனர்.
தியேட்டர்களுக்கு செக்: லியோ படத்தை செவன் ஸ்க்ரீன் ஸ்டூடியோஸே நேரடியாக வெளியிடுகிறது. இதன் காரணமாக திரையரங்குகளிடம் 80 சதவீதம்வரை பங்கு தொகை கேட்பதாக கூறப்படுகிறது. இதனால் திரையரங்கத்தினர் கடும் அதிருப்தியடைந்திருக்கின்றனர். அதுமட்டுமின்றி திரையரங்க உரிமையாளர் சங்கத்தின் தலைவர் திருப்பூர் சுப்ரமணியம் 80 சதவீதம்வரை பங்கு கேட்பதால் படத்தை திரையிடுவதில் சிக்கல் நிலவுவதாக கூறியிருந்தார். எனவே இந்தப் பிரச்னையும் தலைதூக்க ஆரம்பித்திருக்கிறது.
சிறப்பு காட்சி: இதற்கிடையே தமிழ்நாடு அரசு லியோ திரைப்படத்துக்கு சிறப்பு காட்சி அனுமதி கொடுத்தது. ஆனால் 9 மணிக்குத்தான் திரையிட வேண்டும் என கூறியிருந்தது. இதனை எதிர்த்து நீதிமன்றத்துக்கு சென்றது படத்தயாரிப்பு நிறுவனம். ஆனால் நீதிமன்றமும் அதிகாலை காட்சிக்கு அனுமதி கொடுக்க மறுத்துவிட்டது. மேலும் 7 மணி காட்சி வேண்டுமென்றால் தமிழ்நாடு அரசிடம் பேச்சுவார்த்தை நடத்துங்கள் என்று கூறிவிட்டது. சூழல் இப்படி இருக்க திரையரங்க உரிமையாளர் சங்கத்தினர் தமிழ்நாடு உள்துறை செயலாளரை சந்தித்த பிறகு செய்தியாளர்களிடம் பேசுகையில், 'தமிழ்நாடு அரசு அனுமதி அளித்தாலும் காலை 7 மணி காட்சிக்கு சாத்தியமில்லை' என்று கூறி ஷாக் கொடுத்தனர். இதனால் 7 மணி காட்சிக்கும் தற்போது செக் வைக்கப்பட்டிருக்கிறது.
விபத்து: இந்தப் பஞ்சாயத்தெல்லாம் முடித்துவிட்டு காலை 7 மணி காட்சிக்கு அனுமதி கோரி தமிழ்நாடு உள்துறை செயலாளரை சந்திக்க பட தயாரிப்பு நிறுவனத்தின் வழக்கறிஞர்கள் குழு சென்றனர். சந்திப்பை முடித்துவிட்டு திரும்பிய பின் ஓட்டுநர் காரை எடுத்து வந்தார்.அ ப்போது இரு சக்கர வாகனத்தில் வந்த பெண் மீது அந்த கார் மோதி விபத்து ஏற்பட்டது. இதனால் தலைமை செயலக வளாகத்தில் பரபரப்பு ஏற்பட்டது. இப்படி பல பிரச்னைகளை லியோ சந்தித்திருக்கிறது. இன்னும் ஒரு நாளுக்குள் என்னென்ன பிரச்னையை சந்திக்கவிருக்கிறதோ..நினைத்தாலே தலை சுற்றுகிறது..


Click it and Unblock the Notifications











