காலை வாரிய வாரிசு.. எழுந்துவிடுவாரா தயாரிப்பாளர் தில்ராஜு?.. வசூல் நிலவரம் என்ன?
சென்னை: விஜய் நடிப்பில் உருவான வாரிசு படத்தால் அந்தப் படத்தின் தயாரிப்பாளர் தில்ராஜுவுக்கு நஷ்டம் ஏற்பட்டுவிட்டதாக திரையுலகில் பேச்சு ஓடிக்கொண்டிருக்கிறது.
பீஸ்ட் படம் சந்தித்த தோல்விக்கு பிறகு வம்சி பைடிபள்ளி இயக்கத்தில் வாரிசு படத்தில் நடித்தார் விஜய். சரத்குமார், ஷாம், பிரபு, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்டோரும் நடிக்க தில்ராஜு தயாரித்திருந்தார். கடந்த ஜனவரி 11 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியான வாரிசு கலவையான விமர்சனங்களையே பெற்றது.

பிரச்னையில் சிக்கிய வாரிசு திரைப்படம்
வாரிசு படம் ஆரம்பித்து ஷூட்டிங் போய்க்கொண்டிருக்கும்போதே ஷூட்டிங் ஸ்பாட்டில் எடுக்கப்பட்ட புகைப்படங்கள், வீடியோக்கள் வெளியாகி படக்குழுவுக்கு தலைவலியை ஏற்படுத்தியது. மேலும், பிற மொழி படங்களுக்கு ஆந்திரா, தெலங்கானாவில் குறைந்த அளவிலான திரையரங்குகளே ஒதுக்க வேண்டுமென தில்ராஜு ஏற்கனவே பேசியது அவருக்கு எதிராகவே திரும்பியது. அவரது பேச்சுப்படி, வாரிசு படத்துக்கு குறைந்த அளவிலான திரையரங்குகளே ஒதுக்கப்படும் என ஆந்திராவின் முடிவெடுக்கப்பட்டது.

யார் நம்பர் 1
நிலைமை இப்படி இருக்க துணிவு படத்தை தமிழ்நாட்டில் ரெட் ஜெயண்ட் நிறுவனம் வெளியிடும் என அறிவிக்கப்பட்டது. இதனையடுத்து தமிழ்நாட்டில் விஜய்தான் நம்பர் 1. எனவே வாரிசு படத்துக்குத்தான் அதிக திரையரங்குகளை ஒதுக்க வேண்டும் என ஒரு பேட்டியில் தெரிவித்தார் தில்ராஜு. அவரது இந்தப் பேச்சு பெரும் விவாதத்தை ஏற்படுத்தியது. சமூக வலைதளங்களில் விஜய் ரசிகர்களும் அஜித் ரசிகர்களும் மோதிக்கொண்டனர். அதுமட்டுமின்றி தமிழ்நாடு திரையுலகை சேர்ந்த சிலரும் கண்டனம் தெரிவித்தனர்.

ட்ரோலுக்கு ஆளான தயாரிப்பாளர் தில்ராஜு
இந்தச் சூழலில் வாரிசு படத்தின் ஆடியோ ரிலீஸ் நடந்தது. அந்த நிகழ்ச்சியிலும் தில்ராஜு விஜய் நம்பர் 1 என்றார். மேலும், இந்தப் படத்தில் ஃபைட் வேண்டுமா ஃபைட் இருக்கு, விஜய் சார் பாடி லாங்குவேஜ் வேண்டுமா அது இருக்கு, டான்ஸ் வேண்டுமா அது இருக்கு" என பேசியது சமூக வலைதளங்களில் ட்ரோலுக்கு உள்ளானது. அதுமட்டுமின்றி அவரது அந்தப் பேச்சை வைத்து சிலர் பாடலாகவும் பாடிக்கொண்டிருக்கின்றனர்.

வாரிசு வசூல் நிலவரம்
இப்படி பல பிரச்னைகளை சந்தித்தாலும் வாரிசு படம் குடும்பங்கள் கொண்டாடும் வெற்றி என அறிவிக்கப்பட்டது. மேலும் படம் 300 கோடி ரூபாயை உலக அளவில் வசூலித்துவிட்டதாக தயாரிப்பு நிறுவனம் சார்பில் அறிவிக்கப்பட்டது. ஆனால் இது உண்மை இல்லை என ஒரு பக்கம் அஜித் ரசிகர்கள் வாள் சுழற்றினர்.

வாரிசால் அடி வாங்கிய தில்ராஜு?
இந்நிலையில் படம் வெளியாகி ஒரு மாதம் நிறைவடைந்திருக்கும் சூழலில் படத்தின் வசூல் குறித்த புதிய தகவல்கள் வெளியாகியிருக்கின்றன. அதன்படி, வாரிசு படம் ஆந்திரா மற்றும் தெலங்கானாவில் 25 கோடி ரூபாய் மட்டும்தான் வசூல் செய்திருக்கிறதாம்.
அங்கு 100 கோடி ரூபாய் வசூல் செய்யும் அதில் 50 கோடி ரூபாய் ஷேர் எடுத்துவிடலாம் என கணித்திருந்த தில்ராஜுவுக்கு தற்போது 13 கோடி ரூபாய் மட்டும்தான் வந்திருக்கிறதாம். இதனால் தில்ராஜு பெரும் அப்செட்டில் இருப்பதாக கூறப்படுகிறது.

தமிழ்நாட்டில் நிலவரம் என்ன?
அதேபோல் தமிழ்நாட்டைப் பொறுத்தவரை படத்தை வெளியிட்ட லலித்துக்கு 67 கோடி ரூபாய் ஷேர் கிடைத்ததாக கூறப்படுகிறது. ஆனால் வாரிசு படத்தை 60 கோடி ரூபாய்க்கு அவர் வாங்கியிருந்ததால் மீதம் இருக்கும் 7 கோடியில் விளம்பரம் உள்ளிட்டவைகளுக்காக் 5 கோடி ரூபாய் செலவு செய்திருக்கிறார். இதனால் அவருக்கு கிடைத்த லாபம் வெறும் இரண்டு கோடி ரூபாய்தான் என பேசப்படுகிறது.


Click it and Unblock the Notifications











