தெருக்குரல் அறிவு காதல் திருமணம்.. இளையராஜா, திருமாவளவன் தலைமையில் எங்கே நடந்தது தெரியுமா?
சென்னை: மாஸ்டர் படத்தில் இடம்பெற்ற 'வாத்தி ரெய்டு', சந்தோஷ் நாராயணன் தயாரிப்பில் வெளியான என்ஜாய் எஞ்சாமி உள்ளிட்ட பாடல்கள் மூலம் உலகளவில் பிரபலமான பாடலாசிரியரும் பாடகருமான தெருக்குரல் அறிவு என அழைக்கப்படும் அறிவரசு கலைநேசன் இன்று தனது நீண்டநாள் காதலி கல்பனா அம்பேத்கரை சென்னையில் திருமணம் செய்துக் கொண்டார்.
இசைஞானி இளையராஜா தலைமையில் நடைபெற்ற இந்த திருமணத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று மணமக்களை வாழ்த்தினார். அவருடன் இணைந்து அம்பேத்கர் பற்றிய ராப் பாடலையும் தெருக்குரல் அறிவு தனது மனைவியுடன் இணைந்து பாடிய காட்சிகள் வெளியாகி உள்ளன.

பா. ரஞ்சித் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியான காலா படத்தில் இடம்பெற்ற "உரிமையை மீட்போம்" பாடல் மூலமாகத்தான் தமிழ் சினிமாவில் தெருக்குரல் அறிவு அறிமுகமானார் என்பது அனைவரும் அறிந்த ஒன்றுதான்.
காதலியுடன் திருமணம்: கல்பனா அம்பேத்கர் என்பவரை தான் காதலித்து வருவதாக சில ஆண்டுகளுக்கு முன்பே தெருக்குரல் அறிவு தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் காதலியை அறிமுகப்படுத்தியிருந்தார். சீக்கிரமே இருவரும் திருமணம் செய்துக் கொள்ள வேண்டும் என ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வந்த நிலையில், 2025ம் ஆண்டுஜனவரி மாதமே தனது காதலியுடன் திருமணத்தை தெருக்குரல் அறிவு ஜனவரி 11ம் தேதியான இன்று நடத்தியிருக்கிறார்.
அம்பேத்கர் மணி மண்டபத்தில் திருமணம்: சென்னையில் உள்ள அம்பேத்கர் மணி மண்டபத்தில் தெருக்குரல் அறிவு மற்றும் கல்பனா அம்பேத்கரின் திருமணம் நடைபெற்றது. இந்த திருமணத்தில் இளையராஜா மற்றும் திருமாவளவன் கலந்துக் கொண்டு மணமக்களை வாழ்த்தினர். எளிமையான முறையில் கருத்தியல் ரீதியாக நடைபெற்ற திருமணத்தில் இருவரும் இணையர்களாக இணைந்துள்ளது ரசிகர்கள் மற்றும் சினிமா பிரபலங்களை சந்தோஷத்தில் ஆழ்த்தியுள்ளது.

திருமாவளவன் உடன் ராப் பாடல்: அம்பேத்கர் பற்றிய ராப் பாடலை திருமணம் முடிந்த கையோடு தெருக்குரல் அறிவு பாட ஆரம்பிக்க அவருடன் இணைந்து திருமாவளவனும் அந்த ராப் பாடலை பாடிய காட்சிகள் ரசிகர்களை வியக்க வைத்துள்ளது. இளையராஜாவின் ஆசியுடன் இந்த திருமணம் நடைபெற்றது பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது. காலா, வடசென்னை, வந்தா ராஜாவாதான் வருவேன், நட்பே துணை, இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு, பட்டாஸ், நான் சிரித்தால், ஜிப்ஸி, சூரரைப் போற்று, மாஸ்டர், மண்டேலா, ஜகமே தந்திரம், சார்பட்டா பரம்பரை, ஜெய்பீம், அண்ணாத்த, மாமன்னன், வாத்தி, இந்தியன் 2, ராயன், தங்கலான், வேட்டையன், அமரன் உள்ளிட்ட பல படங்களில் இவர் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications











