என்னா மனுஷன்யா.. மணிகண்டனின் தேசிய விருதை திருப்பிக் கொடுத்த திருடர்கள்.. ரசிகர்கள் கமெண்ட்ஸ்!
சென்னை: காக்கா முட்டை படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான மணிகண்டன் தொடர்ந்து நல்ல படங்களை இயக்கி தேசிய விருதுகளை குவித்து வந்த நிலையில், சமீபத்தில் அவரது வீட்டுக்குள் புகுந்து நகைகளையும், பணங்களையும் திருடிய திருடர்கள் கூடவே தேசிய விருதுகளுக்காக கொடுத்த வெள்ளிப் பதக்கங்களையும் திருடிச் சென்றனர்.
இயக்குநர் மணிகண்டன் வீட்டில் நடந்த இந்த திருட்டுச் சம்பவம் மிகப்பெரிய அதிர்ச்சியை ஆழ்த்தியது. இதுகுறித்து போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வரும் நிலையில், மணிகண்டன் வாங்கிய தேசிய விருதுகளை திருடியவர்கள் மன்னிப்பு கடிதத்துடன் மீண்டும் வீட்டில் விட்டுச் சென்றுள்ள சம்பவம் பலரையும் வியப்பில் ஆழ்த்தி உள்ளது.

காக்கா முட்டை முதல் கடைசி விவசாயி வரை: 2010ம் ஆண்டு காற்று (Wind) எனும் குறும்படத்தை இயக்கி பிரபலமான மணிகண்டன் 2015ம் ஆண்டு காக்கா முட்டை படத்தை இயக்கி முதல் படத்திலேயே சிறந்த இயக்குநராக முத்திரை பதித்தார். அந்த படத்திற்காக சிறந்த இயக்குநருக்கான விருதையும் வென்றார். அந்த படத்தைத் தொடர்ந்து குற்றமே தண்டனை, ஆண்டவன் கட்டளை படங்களை இயக்கினார். கடைசியாக கடந்த 2022ம் ஆண்டு வெளியான கடைசி விவசாயி படத்திற்காக சிறந்த படத்துக்கான தேசிய விருதை மீண்டும் பெற்றார்.
மணிகண்டன் வீட்டில் திருட்டு: இயக்குநர் மணிகண்டனுக்கு சொந்தமாக உசிலம்பட்டியில் உள்ள வீட்டில் கடந்த சில நாட்களுக்கு முன்னதாக கொள்ளை சம்பவம் நடைபெற்றது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. வீட்டில் உள்ள 5 பவுன் தங்க நகைகள், ஒரு லட்சம் ரூபாய் ரொக்கப் பணம் உள்ளிட்டவற்றுடன் அவர் கஷ்டப்பட்டு வாங்கிய தேசிய விருதுகளையும் திருடர்கள் திருடிக் கொண்டு சென்று விட்டனர்.

மன்னிச்சிடுங்க அய்யா: இதுகுறித்து உசிலம்பட்டி காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டு விசாரணை நடைபெற்றது. தேசிய விருது இயக்குநர் மணிகண்டனின் தேசிய விருதுகளையும் திருடி சென்று விட்டார்கள் திருடர்கள் என செய்திகள் வெளியானது. அதை பார்த்த திருடர்கள் "அய்யா எங்களை மன்னிச்சிடுங்க.. இது உங்கள் உழைப்பு" என மன்னிப்புக் கடிதம் ஒன்றை எழுதி வைத்து தேசிய விருதுகளை மட்டும் திருப்பி ஒரு பிளாஸ்டிக் கவரில் வைத்து வீட்டுக்கு வெளியே மாட்டி விட்டுச் சென்று இருக்கின்றனர்.
என்ன மனுஷன்யா: இது பற்றி அறிந்த ரசிகர்கள் சோஷியல் மீடியாவில் திருடியவனுக்குள்ளும் ஒரு மனசாட்சி இருந்திருக்கு பாரேன் என்றும் என்ன மனுஷன்யா என ஏகப்பட்ட மீம்களையும், கமெண்ட்டுகளையும் போட்டு இயக்குநர் மணிகண்டனின் தேசிய விருதை திருப்பிக் கொடுத்த திருடனை பாராட்டி வருகின்றனர்.

ஏசி ஜெயில் கன்ஃபார்ம்: கண்டிப்பாக போலீஸார் திருடனை பிடித்து நகைகளையும் பணத்தையும் விரைவில் மீட்பார்கள். தேசிய விருதுகளை திருப்பிக் கொடுத்த நல்ல மனசுக்காக வேணாம் ஏசி ஜெயிலில் போட சொல்லலாம் என நெட்டிசன்கள் ஏகப்பட்ட கமெண்ட்டுகளை போட்டு வருகின்றனர்.
உசிலம்பட்டியில தான் இப்படி நடக்கும்: உசிலம்பட்டி கொள்ளையர்களுக்கு மட்டுமே உரித்தான நேர்மை இது என்றும் மற்ற ஏரியாவில் இருந்தால் அந்த தேசிய விருது வாங்குனதே நான் தான்னு திருடன் சொல்லிட்டு திரிஞ்சிருப்பான் என ஏகப்பட்ட கமெண்ட்டுகள் குவிந்து வருகின்றன. திருடிய வீட்டுக்கு மீண்டும் வந்து இப்படி செய்து விட்டு போயிருக்கிறான் என்றால் நிச்சயம் அருகில் இருப்பவனாகத்தான் இருக்க வேண்டும் சீக்கிரம் போலீஸார் அரெஸ்ட் பண்ண வேண்டும் என நெட்டிசன்கள் கோரிக்கை வைத்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











