»   »  சென்சாரில் சிக்கி சின்னாபின்னமாகின்றன படங்கள்! - ஒரு இயக்குநரின் குமுறல்

சென்சாரில் சிக்கி சின்னாபின்னமாகின்றன படங்கள்! - ஒரு இயக்குநரின் குமுறல்

Posted By:
Subscribe to Oneindia Tamil

தமிழ் சினிமாக்கள் சென்சாரில் சிக்கி சின்னா பின்னமாகின்றன என்று குமுறியுள்ளார் ஒரு புதிய இயக்குநர்.

அவர் பெயர் பெருமாள் பிள்ளை. எடுத்துள்ள படம் திலகர். பிங்கர் பிரிண்ட் பிக்சர்ஸ் என்கிற புதிய நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்தை கலைப்புலி இண்டர் நேஷனல் வெளியிடுகிறது என்றதும் படம் பற்றிய எதிர்பார்ப்பு கூடியுள்ளது.

படம்பற்றிய அனுபவங்களை இயக்குநர் பெருமாள்பிள்ளை நம்மிடம் பகிர்ந்து கொள்கிறார்...

Thilakar director blasts regional censor board

திலகர் எதைப் பற்றிய படம்?

இது 1990ல் திருநெல்வேலி மாவட்டத்தில் வாழ்ந்த ஒருவர் பற்றிய கதைதான். அவருடைய கதையில் கொஞ்சம் கற்பனையும் கலந்து உருவாகியுள்ள படம். இப்படக்கதை தனியொருவரின் கதை என்றில்லாமல் கிராமம், மண், மக்கள், கலாச்சாரம் பற்றி யதார்த்தமாக கூறும் படமாகவும் இருக்கும்.

புதுமுகங்களை வைத்து இயக்கியது ஏன்?

இதில் பிரபலங்களை வைத்து எடுத்தால் அவர்களது முகம்தான் தெரியும். அந்தப் பாத்திரம் தெரியாது. எனவே நிறையபேரை புதுமுகங்களையே வைத்து எடுத்தேன். அறிமுகம் துருவாதான் நாயகன். பிரபல நடிகர் என்றால் கிஷோர் இருக்கிறார். பணத்துக்காக படங்கள் பண்ணாத நடிகர் அவர். இந்தக் கதையைக் கேட்டு பிடித்துப் போய் உடனே சம்மதித்தார். மிருதுளா பாஸ்கர், அனுமோல் நாயகிகளாக நடிக்கின்றனர்.

Thilakar director blasts regional censor board

படத்தில் குறிப்பிட்டுச் சொல்லும்படி உள்ள விஷயங்கள்...

நெல்லை மாவட்டத்தில் மைசூரைப்போலவே குலசேகரப் பட்டினத்தில் நடக்கும் தசராவிழா மிகவும் பிரபலம். இருபது லட்சம் பேர் கூடுகிற திருவிழா அது. அதை இந்தப் படத்தில் முழுமையாகக் காட்டியிருக்கிறோம்.

படத்தில் ஒரு வாழைத்தோப்பு வரவேண்டும் அதில்தான் பிரச்சினை ஆரம்பமாகும். அந்தத் தகராறில் அந்த வாழைத் தோப்பையே வெட்டி நாசம் செய்து அழிக்க வேண்டும். ஆனால் யாரும் அப்படி எடுக்க தோப்பு தர தயாராக இல்லை. காய்த்த பிறகு வேண்டுமானால் முழு தோப்பாக தருகிறோம். இப்படி நாசம் செய்ய நாங்க எந்த விலை கொடுத்தாலும் தர மாட்டோம். வெட்டி அழிக்க விடமாட்டோம்
என்றார்கள். அதனால் நாங்களே ஒரு ஏக்கரில் ஒரு தோப்பு போட்டு, வளர்த்து அதில்தான் இந்தப் படக் காட்சிகளை எடுத்தோம்.

படத்தை 63 நாட்களில் எடுத்து முடித்து விட்டோம். ஆனால் அதற்கான முன் தயாரிப்புக்குப் பல மாதங்கள் எடுத்துக் கொண்டோம்

Thilakar director blasts regional censor board

படக்குழுவினர் பற்றி..?

'தமிழ்ப் படம்' கண்ணன்தான் இசை. இனி அவர் 'திலகர்' கண்ணன் என்று பேசப்படுவார். அந்த அளவுக்கு உழைத்திருக்கிறார். இப்படத்தை அவர் பெரிதும் எதிர்பார்த்துள்ளார். ஒளிப்பதிவு ராஜேஷ் யாதவ். இவர் 'பொக்கிஷம்' ,'மழை', 'ராமன்தேடிய சீதை' படங்களின் ஒளிப்பதிவாளர். அவருக்கும் இது முக்கியமான படமாக இருக்கும். எடிட்டர் கோலா பாஸ்கர், இவர் செய்த உதவியும் கொடுத்த ஒத்துழைப்பும் மறக்க முடியாதது.

உண்மைச் சம்பவம் என்றால் பிரச்சினை வர வாய்ப்பு உள்ளதே..?

எல்லாமே உண்மையான நிகழ்வுகள் அல்ல.. கற்பனைக் காட்சிகளும் கலந்துதான் இருக்கின்றன. பிரச்சினை ஏதுமில்லை. தங்கள் ஊர் சம்பந்தப்பட்ட கதை என்றதும் மகிழ்ச்சி அடைந்த நெல்லை மக்கள் எங்களுக்கு நல்ல ஒத்துழைப்பு கொடுத்தார்கள்.

Thilakar director blasts regional censor board

சென்சார் முடிந்ததா?

அதை ஏன் கேட்கிறீர்கள்... படத்தில் ஒரு ஆபாசம் இல்லை. தொப்புள் தெரியும் காட்சி இல்லை. ஆபாச வசனம் இல்லை. ஆனால் 'ஏ' சான்றிதழ் கொடுத்திருக்கிறார்கள். கேட்டால் வன்முறை என்கிறார்கள்.

இதில் அப்படி ஒன்றும் வன்முறைக் காட்சி இல்லை. பல படங்களில் வருவதைப்போல ரத்தம் சொட்ட சொட்ட வன்முறைக் காட்சி கூட நான் வைக்கவில்லை.

இவர்கள் 'யூ' சான்றிதழ் கொடுத்து இருக்கிற படங்களை ஒப்பிட்டால் இதில் ஒன்றுமே இல்லை. வன்முறை கூடாது என்று பேசுகிற படம் இது.

பருத்திவீரனுக்கே யு கொடுத்தார்களே...

வன்முறை, குழுவாக கற்பழித்த கொடூரக் காட்சிகள் கொண்ட 'பருத்திவீரன்' படத்துக்கே அனுமதி கொடுத்திருக்கிறார்கள்.

நிறைய படங்கள் ஆபாசம், வன்முறை, அருவருப்பு.. கொலைசெய்து கழுத்தை அறுத்து ரத்தம் வருவதைப் பார்த்து ஆனந்தம் அடைவது போல் காட்சிகள்.. அதற்கெல்லாம் 'யூ' சான்றிதழ் கிடைக்கிறது . நாலைந்து தலைகளை துண்டாக்கிப் போடுகிற படங்களுக்குக்கூட' ஏ' இல்லை. இதற்கு மட்டும் பிடிவாதமாக அடம் பிடித்தார்கள்.

சிக்கன் பிரியாணி சாப்பிட்ட பிறகுதானே தணிக்கை...

தெருவெங்கும். சிக்கன் கடைகள், மட்டன் கடைகள் இருக்கின்றன. தினமும் ஆயிரக்கணக்கான கோழிகள், ஆடுகள் வெட்டிக் கொல்லப் படுகின்றன.

ஆனால் படங்களில் ஆடு, கோழி, காட்டக் கூடாது. காட்டினால் துன்புறுத்தப் படுகிறதாம். ஏன்.. சென்சார் போர்டில் படம் பார்க்கிற போதே சிக்கன் பிரியாணி சாப்பிட்டு விட்டுதான் வந்து உட்கார்கிறார்கள்.

வந்து உட்கார்ந்ததும் ஆடு கோழி, காட்சி இருக்கிறதா என்றுதான் பார்க்கிறார்கள். ஆனால் படங்களில் ஆடு, கோழி, காட்டக் கூடாது. வந்தால் விலங்குகள் துன்புறுத்தப் படுகிறதாம். ஏனிந்த முரண்பாடு?

முரண்பாடுகள்

நம் சென்சார் போர்டில் நிறைய சிக்கல்கள், பாகுபாடுகள் முரண்பாடுகள் உள்ளன. நம் தணிக்கை துறை இந்திய அரசின் தணிக்கை துறைதான். மத்திய அரசின் தணிக்கை துறைதான். ஆனால் மாநிலத்துக்கு மாநிலம் வெவ்வேறு அளவுகோல் உள்ளது. வெவ்வேறு பார்வை உள்ளது. இது தமிழ்நாட்டுக்கு மட்டும் உள்ள தணிக்கைத் துறை அல்ல. கேரளாவில், ஆந்திரவில், கர்நாடகத்தில் அனுமதிப்பதை இங்கு விடுவதில்லை. இங்கே கூட ஒருவர் எடுக்கும் படத்தில் உள்ளதை விடுவார்கள். மற்றொருவர் படத்தில் வெட்டுவார்கள்.

நான் இவர்களுடன் போராடி சோர்வு அடைந்து விட்டேன். சென்சார் போர்டில் இங்கு படம் பார்ப்பவர்களுக்கு வட்டார மொழி தெரிவதில்லை. நல்ல வார்த்தைகள் எவை என்று தெரிவதில்லை.கெட்ட வார்த்தைகள் எவை என்று புரிவதில்லை.

ஒரு படைப்பாளி இவர்களிடம் படும்பாடு பெரிய போராட்டம். அவர்களுக்கு சினிமாவும் தெரியவில்லை. மக்கள் வாழ்க்கையும் தெரிய வில்லை. யதார்த்தமும் தெரிவதில்லை. படாதபாடு படுத்துகிறார்கள்.

ஒரு படத்துக்கு ' யூ' சான்றிதழ் என்பது வரி விலக்கிற்கு உதவி செய்வது. எங்கள் படத்துக்கு ' ஏ' சான்றிதழ் கொடுத்துள்ளார்கள். போராடி பார்த்துவிட்டு வேறுவழி இல்லாமல் வாங்கிவிட்டோம். இவர்களிடம் சிக்கி சின்னா பின்னமாகிக் கொண்டிருக்கிறது தமிழ் சினிமா.

-இவ்வாறு பெருமாள் பிள்ளை கூறினார்.

English summary
Perumal Pillai, the debutante director who directs Thilakar has criticised the regional censor board severely due to its policies.
Please Wait while comments are loading...

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil