தவறான செய்தியை பரப்பாதீங்க..இடம் பொருள் ஏவல் ரிலீஸ் பற்றி தயாரிப்பாளர் சுபாஷ் சந்திரபோஸ் விளக்கம்
சென்னை: இடம் பொருள் ஏவல் ரிலீஸ் தேதி பற்றி, தயாரிப்பாளர் சுபாஷ் சந்திரபோஸ் விளக்கம் அளித்துள்ளார்.
Recommended Video
விஜய் சேதுபதி, விஷ்ணு விஷால், நந்திதா ஸ்வேதா, ஐஸ்வர்யா ராஜேஷ் உட்பட பல நடித்துள்ள படம், 'இடம் பொருள் ஏவல்'.
எஸ்.ராமகிருஷ்ணன் எழுதிய கதையை மையமாக வைத்து உருவாகின இந்தப் படத்தை இயக்குனர் லிங்குசாமியின் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ளது.

தியேட்டர்கள்
யுவன் சங்கர் ராஜா இசை அமைத்திருந்த இந்தப் படத்தின் ஷூட்டிங் எப்போதோ முடிந்துவிட்டாலும் பொருளாதாரச் சிக்கல்கள் காரணமாக படம் ரிலீஸ் ஆகவில்லை. இந்நிலையில் இந்தப் படம் விரைவில் வெளியாகப் போவதாக தகவல் வெளியாகி உள்ளது. லாக்டவுன் முடிந்து தியேட்டர்கள் திறக்கப்பட்டதும் 'இடம் பொருள் ஏவல் ரிலீஸ் ஆகும் என சமூக வலைத்தளங்களில் செய்திகள் வெளியாயின.

சீனு ராமசாமி
அதை உறுதி செய்யும் விதத்தில் இயக்குனர் சீனு ராமசாமி ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். "சூதர்மனைதனில் உருவப்படும் சேலையை பற்றாமல் தன் இரண்டு கைகளையும் உயர்த்திக் 'கிருஷ்ணா கிருஷ்ணா' எனப் பதறிய திரவுபதியின் மனநிலையில் சிக்குண்ட எமக்கு ஆறுதல். இது திரைப்படந்தான், ஆனால் எனக்கு பிள்ளை, இயக்குநர் லிங்குசாமிக்கு நன்றி #இடம் பொருள் ஏவல் வெளியீடு" என்று சீனு ராமசாமி குறிப்பிட்டு இருந்தார்.

திருப்பதி பிரதர்ஸ்
இதையடுத்து, அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களைத் தெரிவித்து வந்தனர். படம் ஜூலை மாதம் வெளியாக இருப்பதாகவும் சிலர் கூறி வந்தனர். இந்நிலையில், படத்தைத் தயாரித்துள்ள திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் விளக்கம் அளித்துள்ளது. இது தொடர்பாக தயாரிப்பாளர் என்.சுபாஷ் சந்திரபோஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:

முடிவு எடுக்கவில்லை
எங்கள் திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் தயாரித்து, சீனு ராமசாமி இயக்கிய 'இடம் பொருள் ஏவல்' திரைப்படம் ஜூலை மாதம் வெளியாகிறது என்று சிலர் டிவிட்டரில் செய்தி பரப்பி வருவதாகத் தெரிகிறது. திருப்பதி பிரதர்ஸ் நிறுவனம் படத்தின் ரீலீஸ் தேதி குறித்து எந்த முடிவும் எடுக்கவில்லை என்று தெரிவித்து கொள்கிறோம்.

தவறான செய்திகள்
கொரோனா ஊரடங்கு முடிந்த பின்பு, எங்கள் விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்களுடன் கலந்து பேசி, திரைப்படத்திற்கு நல்ல ரிலீஸ் தேதியை அறிவிப்போம். அதுவரை தவறான செய்திகளை பகிர வேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம். நன்றி' என்று தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications











