»   »  ஜோக்கர்.. ராஜு முருகனின் துணிச்சலும் புத்திசாலித்தனமும்!- திருமாவளவன் பாராட்டு

ஜோக்கர்.. ராஜு முருகனின் துணிச்சலும் புத்திசாலித்தனமும்!- திருமாவளவன் பாராட்டு

Posted By:
Subscribe to Oneindia Tamil

ஜோக்கர் படத்துக்கும் அதன் இயக்குநர் ராஜு முருகனுக்கும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமாவளவன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

ஜோக்கர் பட சிறப்புக் காட்சியை இன்று பிரசாத் லேபில் பார்த்தார் திருமாவளவன். படம் முடிந்ததும் அவர் பேசியது :

ஜோக்கர் என்னும் இந்த சிறந்த படைப்பை இளம் இயக்குநர் ராஜு முருகன் இயக்கியுள்ளார்.

Thirumavalavan praises Joker

இப்படத்தில் நாயகியை காதலிக்கும் நாயகனின் வீட்டில் கழிப்பறை வசதி இருக்கிறதா என்று அந்த நாயகி ஆய்வு செய்கிறாள் அதன் அடிப்படையில் தான் திருமணம் செய்துகொள்வேன் என்றும் ஒரு நிபந்தனை விதிக்கிறாள்.

இந்தியாவில் எத்தனை கோடி மக்கள் கிராம புறங்களில் கழிப்பறை வசதி இல்லாமல் கஷ்ட படுகிறார்கள் என்று நாம் இதில் பார்க்கிறோம். ஆண்கள் இதை எப்படியோ சமாளித்து கொள்கிறார்கள் பெண்கள் இதை வேதனையாகவே வலியாகவே ஏற்றுகொண்டு இருக்கிறார்கள். இப்படிப்பட்ட ஒரு அவலத்தை உடைத்தெறிய வேண்டும் என்ற நோக்கிலும் இதற்காக அரசு ஒரு திட்டத்தை கொண்டு வந்தாலும் அதிலும் ஊழல் நடைபெறுகிறது என்று அதை சுட்டிக்காட்டி அந்த ஊழலையும் உடைத்தெறிய வேண்டும் என்றும் இப்படத்தை இயக்குநர் ராஜு முருகன் இயக்கி இருக்கிறார்.

இதிலே கதாநாயகனாக வருகிற குரு சோம சுந்தரம் சராசரி மனிதனாக இல்லாமல் மனநலம் பாத்திக்கப்பட்ட மனிதன் போல் நடந்து கொள்கிறார் இது தான் இப்படத்தின் மிக முக்கிய அம்சமாகும். மனநலம் பாதிக்கப்படவனாக அல்லது பிறரால் இவன் ஒரு ஜோக்கர் என்று பார்க்ககூடிய வகையில் அந்த கதாபாத்திரத்தை படைத்திருப்பதுதான் இயக்குநர் ராஜு முருகன் அவர்களின் செயல் தந்திரம் அல்லது ஒரு தொழில் நுட்பம்.

Thirumavalavan praises Joker

அப்படி ஒரு கதாபாத்திரத்தை அமைத்ததால்தான் அவரால் இப்படி ஒரு செய்தியைப் பேச முடிந்தது. அரசாங்கத்தை, அரசாங்க செயல்பாடுகளையும் அதனால் விளைகிற ஊழல் போன்ற தீங்குகளையும் மிகத் துணிச்சலாக இதிலே பேசி இருக்கிறார். ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு போராட்டம் ஒவ்வொரு போராட்டமும் ஒவ்வொரு வகை. ஒவ்வொரு போராட்டத்தையும் ஒரு கோணத்தில் பார்க்கின்றபோது கேலிக்குரியதாக இருக்கிறது என்றாலும் இதை எப்படியாவது சொல்லித்தான் தீரவேண்டும், இந்த பிரச்சனைகளை பேசித்தான் தீர வேண்டும் என்பதற்கு இந்த ஜோக்கர் இயக்குநருக்கு தேவைப்படுகிறார். இந்த ஜோக்கர் அவருக்கு கை கொடுத்திருக்கிறார்.

ராஜு முருகனின் தந்திரத்தை நாம் நெஞ்சார பாராட்ட வேண்டும். அவருடைய அந்த யுக்தி பாராட்டுதலுக்குரியது. ஒரு ஜோக்கரின் மூலம் பல செய்திகளை இயக்குநர் கூறுகிறார். அவர் தன்னை தானே ஜனாதிபதி என்று கூறுவதும், அவர் இராணுவ ஆட்சியை இங்கே அமல்படுத்துவதாக அறிவித்துக் கொள்வதும், அதன் அடிப்படையில் அவர் செய்கிற வேலைகள் எல்லாம் இந்த சமூகத்தில் தேவையாக உள்ளன. இப்படி பட்ட போராட்டம் தேவையாக உள்ளது. ஆனால் அவர்கள் ஒரு தனிக் கட்சியாக ஒரு மாபெரும் அமைப்பாக இருந்து போராடாமல் உதிரியாக இருந்து ஓரிருவர் போராடுவதாக இந்த படம் விரிகிறது.

ஆகவே தனி நபராக இருந்து எவ்வளவு பெரிய விஷயத்துக்காக போராடினாலும் அது நகைப்புக்குரியதாகப் பார்க்கப்படும் என்று இப்படம் சொல்லுகிறது. எனவே மக்கள் போர் குணத்தோடு இருந்தால் போதாது. ஒரு அமைப்பாகத் திரள வேண்டும் அமைப்பாகத் திரண்டால்தான் சமூகத்தில் நடைபெறுகின்ற அனைத்து சீர்கேடுகளையும் சரி செய்வதற்கு, மக்களை நல்வழிபடுத்துவதற்கு நெறிபடுத்துவதற்கு தேவையானதாக இருக்கிறது. அமைப்பால் மட்டும்தான் மாற்றங்களை கொண்டு வர முடியும். மக்கள் அமைப்பாக வேண்டும் என்பதையும் அவர் படத்தின் இறுதி நொடிகளில் பேசுகிறார். அமைப்பாக இருந்து போராட வேண்டும் என்கிற வகையில் அவர் படத்தை முடிக்கிறார்.

நாயகனின் உதவியாளராக உள்ள இசை என்கிற பெண் நாயகனின் இறப்புக்கு பின்னர் அவருடைய மனைவியும் இறந்த பிறகு மறுபடியும் அவர்கள் போராட்டத்துக்கு தயாராக வேண்டும் என்பதை நாளை ஒரு போராட்டம் வீதிக்கு வா தோழா என்று கூறுவது போல் இப்படம் நிறைவடைகிறது.

ஆதலால் நாம் எப்போதும் போராடிக்கொண்டே இருக்க வேண்டும். அரசியல் சக்தியாக இருந்து போராட வேண்டும் என்பதை நமக்கு படம் நினைவுபடுத்துகிறது. இயக்குநருக்கு மிகச் சிறந்த அரசியல் புரிதலும், தொலைநோக்குப் பார்வையும், சமூக சிந்தனையும், மக்கள் நலனும் இருக்கிறது என்பதை இந்தப் படத்தின் ஊடாக அவர் பதிவுசெய்துள்ளார்.

இந்த இளம் இயக்குநர் இன்னும் பல மகத்தான சாதனைகளைப் படைக்க வேண்டும். இந்த படம் மிகப்பெரிய செய்திகளைப் பேசும் ஒரு படம், இந்தப் படம் ஒரு மௌனப் புரட்சியை செய்து கொண்டு இருக்கிறது. மக்களிடையே மிகுந்த வரவேற்பைப் பெற்று வருகிறது. இந்த படம் சமூக தளத்தில் அரசியல் தளத்தில் மகத்தான தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற நம்பிக்கை எனக்குள்ளது.

வாழ்க இளம் இயக்குநர் ராஜு முருகன் மற்றும் அவரோடு கைகோர்த்து களமாடிய அனைத்து கலைஞர்களும்," என்றார்.

English summary
VCK President Thol Thirumavalavan has praised Joker movie and its maker Raju Murugan.

சினிமா செய்திகள், விமர்சனங்களை உடனுக்குடன் தெரிந்து கொள்கಿ - Filmibeat Tamil