ஏஐ எனும் ஆபத்து.. அடுத்தவன் உழைப்பை ஈஸியா திருடும் திருடன்.. எந்தளவுக்கு வந்துடுச்சு பாருங்க!
லாஸ் ஏஞ்சல்ஸ்: ஓவியர், புகைப்படக் கலைஞர், கணினியில் கோடிங் செய்பவர்கள், சினிமா என அனைத்து இடங்களிலும் ஏஐ ஆதிக்கம் கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்து வரும் நிலையில், கூடிய சீக்கிரமே பல கோடி மக்களின் வேலை வாய்ப்புகள் பாதிக்கப்படும் என்கின்றனர். ஏற்கனவே ஒவ்வொரு பெரிய நிறுவனங்களும் ஆயிரக் கணக்கில் ஆட்குறைப்பில் ஈடுபட்டு வரக் காரணமே ஏஐ தான் என்கின்றனர்.
ஒவ்வொரு புதிய தொழில்நுட்பம் வரும் போதெல்லாம் இதே பழைய பஞ்சாங்கத்தை தான் பேசி வந்தனர். ஆனால், அந்த தொழில்நுட்ப வளர்ச்சியால் தான் மக்கள் அதிகம் சம்பாதித்து வாழ்க்கையில் உயர்கின்றனர் என்றும் புதிய கண்டுபிடிப்புகள் கண்டிப்பாக தேவை என்றும் ஏஐ வளர்ச்சி கட்டுப்படுத்த முடியாத காலத்தின் கட்டாயம் என்றும் கூறுகின்றனர்.

தொழில்நுட்ப வளர்ச்சியால் கோடிக்கணக்கான மக்களுக்கு தொல்லை ஒரு புறம் என்றால், ஏஐ வளர்ச்சி அப்படியே அடுத்தவரிடம் ஆட்டையைப் போடும் வேலையை அழகாக பார்த்து வருகிறது என்றும் இதனால் ஹாலிவுட் சீக்கிரமே அழிந்துவிடும் என்றும் ஏஐ வளர்ச்சியின் அபாயத்தை குறிக்கும் வகையில் வெளியாகி இருக்கும் இந்த போஸ்ட் உணர்த்துகிறது.
1917 படத்தில் பிராட் பிட்டா?: கடந்த 2019ம் ஆண்டு வெளியான 1917 படம் சிங்கிள் ஷாட் படம் என கொண்டாடபட்டது. மேலும், ஆஸ்கர் விருதுகளையும் அள்ளியது. அந்த படத்தில் தற்போது ஜார்ஜ் மெக்காய்க்கு பதிலாக பிராட் பிட் நடித்ததை போல ஏஐ மூலம் எடிட் செய்யப்பட்ட வீடியோ வெளியாகி ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. மேலும், ஜேம்ஸ் பாண்ட் நடிகர் டேனியல் கிரெய்க் உள்ளிட்ட பிரபலங்களை வைத்தும் ஏஐ மூலம் எந்த நடிகர் வேண்டுமானாலும், இன்னொரு படத்தில் அப்படியே பொருந்தி நடிப்பது போன்ற உணர்வை கொடுக்கும் அளவுக்கு ஏஐ தொழில்நுட்பம் வளர்ந்துவிட்டது.
முழு உடல் அசைவையும்: ஏஐ எடிட் செய்யப்பட்டு ஒரு விடியோ வெளியானால், அது ஏஐ என எளிதில் கண்டு பிடித்து முடியும் என மக்கள் நினைத்துக் கொண்டிருக்கும் நிலையில், அவர்கள் கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு முழு உடல் அசைவையும் தத்ரூபமாக க்ளோனிங் செய்து இன்னொருவர் செய்வது போன்று தற்போது ஏஐ மூலம் உருவாக்கலாம் என நிரூபித்துள்ளனர். Higgsfield AIன் புதிய டூல் வசதி கொண்டு அதை எப்படி செய்யலாம் என்கிற பிராம்ப்ட்டையும் ஷேர் செய்துள்ளனர்.
ஆபாச வீடியோக்கள்: சமீபத்தில், அனுபமா பரமேஸ்வரனை ஏஐ மூலமாக ஆபாசமாக சித்தரித்த சர்ச்சை வெடித்தது. இந்நிலையில், இது போல ஒரு படத்தில் இன்னொரு நடிகர் அல்லது நடிகையை தத்ரூபமாக கொண்டு வர முடியுமென்றால், ஆபாச வீடியோக்களில் பிரபல நடிகர்கள், நடிகைகள் மட்டுமின்றி உறவினர்கள், பக்கத்து வீட்டுக்காரர்கள் வரை மோசமாக எடிட் செய்து பெரிய பெரிய பிரச்சனைகளை உருவாக்கப் போகிறது இந்த ஏஐ என எச்சரிக்கின்றனர்.


Click it and Unblock the Notifications











