ரசிகர்களுக்கு சலாம்.. கோட்டைவிட்ட கோலிவுட்.. காரணங்களைத் தேடாமல்.. கதைகளைத் தேடுங்க
சென்னை: கோலிவுட்டில் இருக்கும் பிரபலங்கள் பலரும் ரசிகர்கள் மீது வைக்கும் குற்றச்சாட்டு, ரசிகர்கள் தமிழ் படங்களை கொண்டாடுவதில் சுணக்கம் காட்டுகிறார்கள். வெளிமாநில படங்கள் என்றால் அது டப்பிங்கில் வந்தாலும் அந்த படத்தை, சிவப்பு கம்பளம் போட்டு வரவேற்று, தலையில் தூக்கி வைத்து கொண்டாடி, பாக்ஸ் ஆபீஸ் ஹிட் கொடுத்து வழி அனுப்பி வைக்கிறார்கள் என்று எல்லாம் கருத்து தெரிவித்தவர்களை கடந்த காலத்தில் பார்த்து இருக்கிறோம்.
அவர்கள் சொன்ன கருத்தில் ஒரு பாதி ஏற்றுக் கொள்ளக் கூடியது, ஒரு பாதி, ' இந்த கதையெல்லாம் இங்க வேண்டாம்' என்ற பதிலடிக்கு தகுதியானது என்பதை கோலிவுட் வட்டாரம் ஏற்றுக் கொள்ள வேண்டும். கடந்த ஆண்டில் தெலுங்கு படமான புஷ்பா 2 இந்தியா முழுவதும் சக்கை போடு போட்டது. அதேபோல் தமிழ்நாட்டிலும் படத்திற்கு அதிரிபுதிரியான வசூலும் வெற்றியும் கிடைத்தது. ஆனால் புஷ்பா 2 படத்திற்கு மூன்று வாரங்களுக்கு முன்னர் வெளியான சூர்யாவின் கங்குவா படம் படுதோல்வி அடைந்தது.
இதற்கு சூர்யாவுக்கு ஆதரவாக கருத்து தெரிவித்த சில பிரபலங்கள், தமிழ் சினிமாவில் மற்ற நடிகர்களின் ரசிகர்கள் இணைந்து கங்குவா படத்திற்கு எதிராக பொய் பிரச்சாரத்தை மேற்கொண்டு விட்டார்கள். அரசியல் சூழ்ச்சிகள் நடைபெற்றுள்ளது என்று எல்லாம் கருத்து தெரிவித்தார்கள். இந்த குற்றச்சாட்டுகள் ஏற்புடையதுதான் என்றாலும், தரமான படம் இவை அனைத்தையும் ஓவர் டேக் செய்து மக்களிடம் வரவேற்பைப் பெறும் என்பதில் சந்தேகம் வேண்டாம். மேலும் இது சூர்யாவுக்கு மட்டும் நடைபெறவில்லை, தமிழ் சினிமாவில் மற்ற நடிகர்களின் படங்கள் வரும்போது, படம் தியேட்டரில் முதல் காட்சி திரையிடுவதற்கு முன்னரே, எக்ஸ் பக்கத்தில் ஹேஷ்டேக் போட்டு, டிசாஸ்டர் என்று டிரெண்ட் செய்யப்படுகிறது.

முட்டுக்கட்டை: ஆனால் அவற்றை எல்லாம் அசால்ட்டாக தட்டித் தூக்கி எறிந்துவிட்டு வெற்றியை எட்டிய படங்கள் இங்கு ஏராளம். சரி, கன்னட சினிமா, தெலுங்கு சினிமா, மலையாள சினிமா படங்கள் பலவும் தமிழ் நாட்டில் வசூல்களை அள்ளுகிறது. ஆனால் தமிழ் சினிமா ரசிகர்களின் இந்த வெறுப்பு மற்றும் மோதல் போக்கு மனநிலையால் படங்கள் தோல்வியைத் தழுவுவது மட்டும் இல்லாமல் கோலிவுட்டின் வளர்ச்சிக்கும் முட்டுக்கட்டை போடுகிறது என்கிறனர்.
சப்பை காரணங்கள்: ஆனால் இந்த ஆண்டில் மிகப்பெரிய தெலுங்கு படமோ, கன்னட படமோ வெளியாகி அதிரிபுரியான வசூலை தமிழ்நாட்டில் குவித்து விடவில்லை. ஏன் அந்தந்த மாநிலங்களிலும் குவிக்கவில்லை. அப்படி இருக்கும்போது, இந்த ஆண்டு வெளியான பெரிய பட்ஜெட் படங்கள், மிகவும் எதிர்பார்க்கப்பட்ட உச்ச நட்சத்திரங்களின் படங்களுக்கு, முதல் வாரத்தின் பாதியிலேயே தியேட்டர்களில் ஆட்கள் இல்லாமல் போனதை ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும்.
கவனம்: இந்த ஆண்டில் தமிழ் சினிமா தரப்பில் இருந்து சுட்டிக் காட்ட மாற்று மொழிப் படங்கள் இல்லை. ஆனால் மீண்டும் மீண்டும் கதைக்கு முக்கியத்துவம் கொடுக்காமல், சில காட்சிகளுக்கும், நடிகர்களின் ரசிகர்கள் பட்டாளத்தை மட்டும் நம்பி படம் எடுப்பது என்பது, தமிழ் சினிமாவின் நிலையை மோசம் ஆக்குவதற்கான வழி என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும். கதைக்கு முக்கியத்தும், கதாபாத்திரத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கும் படங்கள் தான் காலத்திற்கும் கொண்டாடப்படும் படங்கள். கமர்ஷியல் படங்கள் தான் கொடுப்போம் என்றாலும் அதற்கு நியாயம் கற்பிக்கும் திரைக்கதையிலாவது படத்தை எடுக்க வேண்டும் என்ற ரசிகர்களின் குரல்களை கோலிவுட் என்றைக்குத்தான் காது கொடுத்து கேட்குமோ. விதிவிலக்காக இருக்கும் சில இயக்குநர்களால் இந்த ஆண்டில் பெயர் சொல்லும் அளவுக்கான படங்களாவது வெளியாகி உள்ளது என்று ஆறுதல் பட்டுக் கொள்ள வேண்டியுள்ளது.


Click it and Unblock the Notifications











