இளையராஜாவை காட்டமாக விமர்சிக்கும் ஜேம்ஸ் வசந்தன்... இப்படியொரு ப்ளாஷ்பேக் தான் காரணமா..?
சென்னை: பிரபல தொலைக்காட்சித் தொகுப்பாளரும் இசையமைப்பாளருமான ஜேம்ஸ் வசந்தன் அடிக்கடி இளையராஜாவை விமர்சித்து வருகிறார்.
சசிக்குமாரின் சுப்ரமணியபுரம் திரைப்படம் மூலம் இசையமைப்பளாராக அறிமுகமானார் ஜேம்ஸ் வசந்தன்.
தற்போது ஏராளமான இசை நிகழ்ச்சிகளையும் நடத்தி வருகிறார்.
இந்நிலையில், கடந்த சில தினங்களாகவே இசையமைப்பாளர் இளையராஜாவை கடுமையாக விமர்சித்து வருவதன் காரணம் என்னவென்று தெரியவந்துள்ளது.

ஜேம்ஸ் வசந்தன் அறிமுகம்
விஜய் டிவியில் நிகழ்ச்சித் தொகுப்பாளராக பணியாற்றியதன் மூலம் பிரபலமானவர் ஜேம்ஸ் வசந்தன். இவர் கொடைக்கானலில் உள்ள பிரபல தனியார் பள்ளியில் மியூசிக் டீச்சராகவும் வேலை பார்த்துள்ளார். அப்போது அங்கு படித்த சசிகுமார் தான், பின்னாளில் தனது இயக்கத்தில் வெளியான சுப்ரமணியபுரம் படத்தில் ஜேம்ஸ் வசந்தனை இசையமைப்பாளராக அறிமுகப்படுத்தினார். இந்தப் படத்தின் பாடல்கள் ரசிகர்களிடம் மிகப் பெரிய வரவேற்பைப் பெற்றன.

இளையராஜா மீது விமர்சனம்
சமூக வலைத்தளங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் ஜேம்ஸ் வசந்தன், அடிக்கடி இளையராஜாவை விமர்சித்து பதிவுகள் இடுவது வழக்கம். இளையராஜாவின் இசையை விமர்சிக்காமல் அவரது பண்புகளையும் பேச்சுகளையும் விமர்சித்து வந்தார். இந்நிலையில், சில தினங்களுக்கு முன்னர் இளையராஜாவை மட்டமான மனிதர் என ஒரு பேட்டியில் கூறியிருந்தார். ஜேம்ஸ் வசந்தனின் இந்த பேச்சு கடும் சர்ச்சை ஆனது, மேலும் இளையராஜாவின் ரசிகர்கள் அவருக்கு கண்டனம் தெரிவித்தனர்.

அமெரிக்கா இசை நிகழ்ச்சி
அதாவது, அமெரிக்காவில் நடந்த இசை நிகழ்ச்சியொன்றில் பேசிய இளையராஜா, ஏசு கிறிஸ்து உயிர்த்தெழுந்தது பற்றி கிண்டலாக கருத்து தெரிவித்திருந்தார். மேலும், அவர் ரமண மகரிஷி ஒருவர் தான் இறந்து உயிர்த்தெழுந்தவர் என அங்கு பேசினார். ஆன்மீக புரிதல் இல்லாமல் இளையராஜா இப்படி பேசியது தவறு. ஏசு கிறிஸ்துவை கோடிக்கணக்கான மக்கள் நம்பும் போது அவர்களை காயப்படுத்தும் விதமாக இப்படி பேசலாமா? என கேள்வி எழுப்பியிருந்தார். இதனால் தான் அவரை மட்டமான மனிதர் என சொல்வதாக கூறியிருந்தார்.

இதுதான் காரணமா?
இந்நிலையில், இளையராஜாவை ஜேம்ஸ் வசந்தன் தொடர்ந்து விமர்சித்து வருவதன் காரணம் என்னவென்று தற்போது தெரியவந்துள்ளது. சுப்பிரமணியபுரம் படத்தில் தான் ஜேம்ஸ் வசந்தன் இசையமைப்பாளராக அறிமுகமானார். இந்தப் படத்தில் ஒரு காட்சியில் 'சிறு பொன்மணி அசையும் அதில் தெறிக்கும்' என்ற இளையராஜாவின் பாடலை, அவரது அனுமதி இல்லாமல் பயன்படுத்தியதாக சொல்லப்படுகிறது. இதனால் ஜேம்ஸ் வசந்தனுக்கு இளையராஜா ஒரு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

பிரச்சினை தீரவே தீராது
அதுமட்டும் இல்லாமல், ஜேம்ஸ் வசந்தனை நேரில் வர வைத்தும் திட்டியுள்ளார். எனது அனுமதி இல்லாமல் எப்படி 'சிறு பொன்மணி அசையும் அதில் தெறிக்கும்' பாடலை பயன்படுத்தலாம் என நிற்கவைத்து கேள்வி கேட்டுள்ளார். இதனை கொஞ்சம் தன்மையுடனாவது சொல்லியிருக்கலாமே என ஜேம்ஸ் வசந்தனுக்கு வருத்தம் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாகவே அவர் தொடர்ந்து இளையராஜாவை விமர்சித்து வருவதாக சொல்லப்படுகிறது. மேலும், இந்த விவகாரம் இப்போதைக்கு முடிவுக்கு வராது என்றும் இந்த விவரம் அறிந்தவர்கள் கூறி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











