Gay மேரேஜ் முதல் Fake மேரேஜ் வரை.. இந்த ஆண்டு தமிழ் சினிமாவில் வந்த வித்தியாசமான உறவுமுறை படங்கள்!
சென்னை: ஜென் Z தலைமுறைகளை திருப்திப்படுத்தும் நோக்கில் இந்த ஆண்டு தமிழ் சினிமாவில் ஏகப்பட்ட உறவுமுறை படங்கள் வெளியாகின. வழக்கமான திருமண உறவுமுறை படங்களும் வெளியாகி வெற்றிப் பெற்றன. ஆனால், புதுமையான உறவுமுறை சிக்கலுடன் கூடிய புரட்சிப் படங்கள் வெளியான நிலையில், அவரை பெரிதாக ரசிகர்களை கவரவில்லை. ஆனால், பிரதீப் ரங்கநாதனின் டியூட் திரைப்படம் மட்டுமே படத்தில் அவரது என்டர்டெயின்மென்ட் இருந்த நிலையில், தீபாவளி வார வசூலை அள்ளியது.

இந்த ஆண்டு பொங்கல் தொடங்கி தீபாவளி வரை வித்தியாசமான உறவுமுறை படங்கள் வெளியான நிலையில், எந்த எந்த படங்களில் என்ன மாதிரியான உறவுமுறை குறித்த கதைகள் இருந்தன என்பது குறித்தும் அவற்றை ரசிகர்கள் எந்தளவிற்கு வரவேற்றனர் என்பது குறித்தும் இங்கே பார்க்கலாம் வாங்க..

Gay மேரேஜ்: கிருத்திகா உதயநிதி ஸ்டாலின் இயக்கத்தில் ரவி மோகன், நித்யா மேனன், வினய், யோகி பாபு உள்ளிட்ட பலர் நடிக்க பொங்கலுக்கு வெளியான காதலிக்க நேரமில்லை திரைப்படம் திரையரங்குகளில் வரவேற்பை பெறவில்லை. ஏ.ஆர். ரஹ்மான் இசையில் வெளியான "என்னை இழு இழுவென இழுக்குதடி" பாடல் மட்டுமே டிரெண்டானது. அந்த படத்தில் ரவி மோகனின் குழந்தை IVF முறையில் நித்யா மேனன் வயிற்றில் செலுத்தப்படுவது, வினய் ஓரினச்சேர்க்கை திருமணம் செய்து கொள்வது போன்ற பல உறவுமுறை சிக்கல்கள் குறித்த கதை சொல்லப்பட்ட நிலையிலும், தமிழ் சினிமா ரசிகர்கள் பொங்கலுக்கு அந்த படத்தை தியேட்டருக்குச் சென்று பெரிதாக பார்க்கவில்லை. ஓடிடியில் வெளியான பிறகு அந்த படத்தை பலரும் விரும்பி பார்த்தனர்.

இன்னொருவருடன் காதல்: மகிழ் திருமேனி இயக்கத்தில் அஜித் குமார், த்ரிஷா, அர்ஜுன், ரெஜினா கசாண்ட்ரா, ஆரவ் நடிப்பில் வெளியான விடாமுயற்சி திரைப்படம் இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் வெளியானது. அந்த படத்தில் அஜித் குமாரை காதலித்து திருமணம் செய்துக் கொண்டாலும், த்ரிஷாவுக்கு இன்னொருவர் மேல் காதல் ஏற்பட அதை புரிந்துக் கொண்டு தனது மனைவிக்கு பிடித்தவருடன் அவரை சேர்த்து வைக்க காரில் கிளம்பும் போது மனைவி கடத்தப்பட அவரை அஜித் காப்பாற்ற, மீண்டும் அஜித்துடனே த்ரிஷா சேர்வது போல கதை அமைந்து இருந்தது. ஆனால், அந்த படத்தையும் தமிழ் சினிமா ரசிகர்கள் பெரிதாக கொண்டாடவில்லை. அஜித்தின் ஸ்டார்டம் காரணமாக 135 கோடி வரை வசூல் செய்தது.

அப்பாவுக்கும் வளர்ப்பு மகனுக்கும் ஒரே பெண் மீது ஆசை: மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், த்ரிஷா, சிம்பு நடிப்பில் வெளியான தக் லைஃப் திரைப்படத்தில் கமல்ஹாசன் சிறு வயதிலேயே சிம்புவை தத்தெடுத்து வளர்த்து வருவார். அபிராமி மனைவியாக இருந்தாலும் த்ரிஷாவுடன் கள்ளத் தொடர்பில் இருப்பார் கமல். சிம்புவுக்கும் த்ரிஷா மீது காதல் ஏற்பட அவரை வலுக்கட்டாயமாக கடத்திக் கொண்டு சென்றிருப்பார். இப்படியொரு கதையில் கேங்ஸ்டர் கதையை கொஞ்சம் சேர்த்து படம் எடுத்த நிலையில், தக் லைஃப் திரைப்படம் டிசாஸ்டர் ஆனது.

ஃபேக் மேரேஜ்: கடைசியாக இந்த தீபாவளிக்கு பிரதீப் ரங்கநாதன், மமிதா பைஜு, சரத்குமார் நடிப்பில் வெளியான டியூட் திரைப்படம் 100 கோடி பாக்ஸ் ஆபீஸ் வெற்றியை பெற்றுள்ளது. மமிதா காதலை சொல்லும் போது பிட்டு பட போஸ் என கலாய்த்து அனுப்பும் பிரதீப், அவர் மமிதாவை காதலிக்கும் போது நான் ஏற்கனவே ஒருத்தரோட வாரிசை சுமக்கிறேன் என பல்பு கொடுக்க, தனது காதலியை அவரோட அப்பா கொன்று விடக் கூடாது என்பதற்காக ஃபேக் மேரேஜ் செய்து காதலியை அவருடைய காதலனுடன் சேர்க்க போராடுவதே ட்யூட். இந்த படத்துக்கு எதிராகவும் மக்கள் மத்தியில் அதிருப்தி நிலவியது. ஆனால், பிரதீப் ரங்கநாதனின் நடிப்புக்காக படம் தீபாவளி விடுமுறையில் சக்கைப் போடு போட்டது. ஆனால், இந்த வாரம் சனி, ஞாயிறு பெரிதாக பிக்கப் ஆனால், தான் டிராகன் வசூலை முறியடிக்கும் என்கின்றனர். அடுத்த ஆண்டு இன்னும் இயக்குநர்கள் சீரியலை மிஞ்சும் பல உறவுமுறை கதைகளுடன் களத்தில் குதிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











