twitter
    For Quick Alerts
    ALLOW NOTIFICATIONS  
    For Daily Alerts

    நினைவில் நில்லாத மழைத்தூறல் - தூறல் நின்னு போச்சு!

    By Shankar
    |

    Recommended Video

    நினைவில் நில்லாத மழைத்தூறல் - தூறல் நின்னு போச்சு!- வீடியோ

    - கவிஞர் மகுடேசுவரன்

    முந்திய தலைமுறை இயக்குநர்களில் என் மண்ணுக்கும் மனத்துக்கும் பண்பாட்டுக்கும் மொழிக்கும் மிகவும் நெருக்கமான ஒருவர் இருக்கிறார் என்றால் அவர் பாக்கியராஜ்தான். பாரதிராஜாவின் தலைமைச் சீடரான பாக்கியராஜ் இயக்கிய திரைப்படங்கள் நிலைபிறழாத நேர்கோட்டுக் கதைப் படங்களுக்கு வகைச்சான்றுகள். அவர் இயக்கிய படங்களில் பத்துத் திரைப்படங்களையேனும் பாடமாகப் பயிலத்தக்க திரைக்கதைகள் என்று துணிந்து கூறலாம்.

    கோபிச்செட்டிப்பாளையத்தின் சிறுவலூர், வெள்ளாங்கோட்டுப் பகுதியில் தம் முதற்பத்து அகவை வரை வளர்ந்தவர் அவர். என்னூரானது நொய்யற் படுகையில் அமைந்திருக்கிறது என்றால் இங்கிருந்து வடக்காக முப்பதாம் கிலோமீட்டரில் அவ்வூர்கள் இருக்கின்றன. இம்மண்ணின் கதைகளையும் ஊர்ப்புறத்து மக்களையும் அவர் நானுணர்ந்தவாறே தம் படங்களில் உருவாக்கி உலவவிட்டார் என்பேன்.

    Thooral Ninnu Pochu, a nostalgia

    தமிழ்த் திரைப்படங்களில் கிராமியப் படங்கள் எவ்வூரை முன்வைத்தும் எழுதப்பட்டிருக்கலாம், அக்கதைகள் எங்கும் நிகழ்ந்திருக்கலாம். ஆனால் அவற்றை வயலும் வாய்க்காலுமாய்ப் படம்பிடிப்பதற்குக் கோபி பொள்ளாச்சி மேட்டுப்பாளையம் உடுமலை ஆகிய பகுதிகளை நோக்கித்தான் வந்தாக வேண்டும். அதனால் தமிழ்த் திரைப்புலத்தில் எடுக்கப்பட்ட பெரும்பான்மையான கிராமியப் படங்கள் கொங்கு நாட்டு ஊர்ப்புறத்து அழகுகளையே புறக்கூறுகளாகக் காட்டின. அதனால்தானோ என்னவோ கிராமியப் படங்கள் எல்லாமே மனத்துக்கு நெருக்கமானவையாக இருக்கின்றன.

    Thooral Ninnu Pochu, a nostalgia

    பாக்கியராஜ் இயக்கிய படங்களை நிலக்களன்கள் அடிப்படையில் மூன்று வகைகளாகப் பிரிக்கலாம். ஊர்ப்புறம், நகர்ப்புறம், உதகைப்புறம் என்பவையே அவை. சுவர் இல்லாத சித்திரங்கள், இன்றுபோய் நாளை வா, தூறல் நின்னு போச்சு, முந்தானை முடிச்சு, எங்க சின்ன ராசா ஆகியன ஊர்ப்புறத்தை மையமாகக் கொண்டவை. அந்த ஏழு நாட்கள், சின்ன வீடு போன்ற படங்கள் நகர்ப்புறத்தை மையப்படுத்தின.

    Thooral Ninnu Pochu, a nostalgia

    உதக மண்டலத்தைக் கதைக்களமாகக் கொண்டு எண்பது தொண்ணூறுகளில் எண்ணற்ற திரைப்படங்கள் வெளியாயின. பாக்கியராஜின் டார்லிங் டார்லிங் டார்லிங், சுந்தர காண்டம், வீட்ல விசேசங்க போன்ற படங்கள் உதகைப் படங்கள். உதகையை மையமாகக்கொண்டு கதைகளை உருவாக்கியதற்கான காரணத்தை பாக்கியராஜே கூறியிருக்கிறார். புகழ்பெற்ற ஒளிப்பதிவாளரான அசோக்குமாரைத் தம் படத்திற்கு ஒளிப்பதிவுப்பணியாற்ற ஒப்பந்தம் செய்துவிட்டாராம். காட்சியழகு மிகுந்த வெளிப்புறக் காட்சிகளை அவர்க்கு அமைத்துத் தரவேண்டும். அதற்கேற்ற இடம் உதகை. அதனால்தான் உதகையை மையமாகக்கொண்டு டார்லிங் டார்லிங் டார்லிங் கதையை எழுதியதாகக் கூறுகிறார்.

    Thooral Ninnu Pochu, a nostalgia

    பாக்கியராஜ் எடுத்தவற்றில் ஒவ்வொரு வகைச்சான்றுக்கும் எனக்குப் பிடித்தமான படங்கள் இருக்கின்றன என்றாலும் அவற்றில் 'தூறல் நின்னு போச்சு' தனிச்சிறப்புடையது. முப்பதாண்டுகளுக்கு முந்திய கொங்குப் பண்பாட்டுக் கூறுகளின் காலச்சித்திரத்தை அதில் பெறலாம். பவானியாறும் கொடிவேரி அணையும் காளிங்கராயன் கால்வாயும் மஞ்சள் விளைந்த பச்சைப்பசேல் வயல்களுமாய்க் காட்டிய தூறல் நின்னு போச்சு படத்தை அன்று பார்த்தவர்கள் யாருமே மறந்திருக்க மாட்டார்கள்.

    அப்படத்தை எடுத்தபோது அவரிடம் துடிப்பான இளைஞர்கள் உதவியாளர்களாக இருந்திருக்கிறார்கள். ஜிஎம் குமார், பாண்டியராஜன், இலிவிங்ஸ்டன் ஆகியோரைத் தலைப்பெழுத்துகளில் பார்க்க முடிகிறது. ஒரு கதையை எடுத்துக்கொண்டு அதன் அடிமுதல் நுனிவரை இழையிழையாய்க் காட்சியமைத்துச் செல்லல் என்பதுதான் பாக்கியராஜின் திரைக்கதைத் துல்லியம். பாக்கியராஜ் படங்களில் ஒரேயொரு சுடுவுகூட தேவைக்கு மாறாக இராது. ஒரேயொரு சுடுவின் கோணம்கூட கதைப்போக்குக்கு எதிராக இராது. அவருடைய சுடுவுகளில் நிகழ்வதை நேரில் காண்பதைப்போலவே உணர்வோமே தவிர, ஒரு திரைப்படத்திற்காகத் திட்டமிட்டு எடுக்கப்பட்ட சுடுவு இஃது என்ற உணர்ச்சியை அடைவது கடினம். அந்தத் துல்லியம் சுந்தரகாண்டம் என்னும் திரைப்படம் வரை அவரிடம் தொடர்ந்தது. என் இரத்தத்தின் இரத்தமே என்ற திரைப்படத்தில்தான் ஓர் இயக்குநராக அவருடைய முதற்கோணலைக் காண முடியும்.

    Thooral Ninnu Pochu, a nostalgia

    தூறல் நின்னு போச்சு திரைப்படம் தன்னளவில் இரண்டு வலிமையான உட்கூறுகளைக் கொண்டிருக்கிறது. ஏற்பாட்டுத் திருமணங்களில் ஓர் ஆடவன் தனக்கு மனைவியாக வரப் போகிறவளின் காதலை எவ்வாறு அடைகின்றான் என்பதை இயல்பாகவும் நுணுக்கமாகவும் சொல்கின்றது அப்படம். முன்பின் அறிந்திராத ஆணும் பெண்ணும் பெரியவர்கள் பார்த்து வைக்கும் திருமணத்தில் இணைந்து ஒப்பில்லாத இணையராய் வாழ்ந்து சிறக்கிறார்கள். அந்தத் திறப்பு அவர்களுக்குள் நிகழும் பொழுதைத் தூறல் நின்னு போச்சில் உணரலாம். கட்டுக்கோப்பான பெண்மையை அன்பினால் நெகிழ்த்தி நெகிழ்த்தி ஓர் ஆண் அடையும் அரும்பரிசு அது. முதன்முதலாகத் தன்னைப் பெண்பார்க்க வரும் மாப்பிள்ளையே தன்னை மணமுடிக்க வேண்டும் என்ற வேண்டுதலோடு இருந்தாலும் அது காதலாக மாறுவதும் அவனுக்காகப் படிதாண்டத் துணிவதுமாய் உருத்திரளும் கதையை பாக்கியராஜ் அருமையாகச் சொல்லியிருப்பார். அடுத்த கூறு, செந்தாமரை என்னும் நிகரற்ற கலைஞனின் நடிப்பு. பொன்னம்பலம் என்னும் அந்தக் கதாபாத்திரத்திற்கு அவரைவிடவும் பொருத்தமான நடிகர் யாருமில்லை. மெட்டி, தூறல் நின்னு போச்சு ஆகிய இவ்விரண்டு படங்களில்தான் செந்தாமரையை உணர முடியும்.

    Thooral Ninnu Pochu, a nostalgia

    தூறல் நின்னு போச்சு திரைப்படத்தின் படப்பிடிப்பை நேரில் கண்ட என் தாய்மாமனார் ஒருவர் இருக்கிறார். நம்பியார் உண்டி வில்லால் கள்ளுப்பானையைத் துளையிட்டுக் குடிப்பது, ஆட்டுப்பால் கறந்து குடிப்பது, காளிங்கராயன் கால்வாயில் சுலக்சணாவுடன் பரிசலில் செல்வது என்று படத்தில் இடம்பெற்ற பல காட்சிகளின் படப்பிடிப்பைக் கண்டவர். 'தங்கச் சங்கிலி மின்னும் பைங்கிளி...' பாடலில் பாக்கியராஜும் சுலக்சணாவும் பரிசலில் செல்கையில் கரையில் வேடிக்கை பார்ப்பவர்கள் வரிசையாக நின்றிருக்குமாறு ஒரு சுடுவு இடம்பெற்றிருக்கும். அவ்வரிசையில் தானும் நின்றதாகக் கூறுவார். தூறல் நின்னு போச்சு பற்றிப் பேசினாலோ அப்படத்தின் பாடல்களைக் கேட்டாலோ தந்நிலை மறந்தவராய்க் கடந்த காலத்திற்குச் சென்றுவிடுவார். சுலக்சணாவைப் பேரழகி என்று இன்றும் கூறுகிறார். படப்பிடிப்பின்போது சுலக்சணாவை முழுமையான ஒப்பனையில் கண்டு மயங்கியிருக்கிறார். அவர் தம்மை மறக்கும் கடந்த காலத்தின் அரசியாய் சுலக்சணாவே இருப்பார் என்று எண்ணுகிறேன்.

    Read more about: k bagyaraj screenplay
    English summary
    A nostalgia on K Bagyaraj's classic Thooral Ninnu Pochu movie
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X
    X