மைனாவுக்கு பின் இதுதான் படம்.. உதவி இயக்குநரை மெச்சிய சுசீந்திரன்!
சென்னை: மைனாவுக்கு அடுத்தப்படியாக தோழர் வெங்கடேசன் படம்தான் படம் என இயக்குநர் சுசீந்திரன் தெரிவித்துள்ளார்.
இயக்குநர் சுசீந்திரன் வெண்ணிலா கபடி குழு படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமானார். தொடர்ந்து நான் மகான் அல்ல, அழகர்சாமியின் குதிரை, ராஜபாட்டை, ஆதலால் காதல் செய்வீர், பாண்டிய நாடு உள்ளிட்ட படங்களை இயக்கியுள்ளார்.

இவரிடம் உதவி இயக்குநராக பணியாற்றியவர் மகாசிவன். இவர் இயக்கியுள்ள படம் தோழர் வெங்கடேசன். இந்த படத்தை பார்த்த சுசீந்திரன் தானே ரிலீஸ் செய்ய உள்ளதாக கூறியுள்ளார்.
இந்நிலையில் படத்தை பார்த்த சுசீந்திரன், இந்த படம் தமிழ் சினிமாவில் ஒரு முக்கியமான இடத்தைப் பிடிக்கும் என தெரிவித்துள்ளார். மேலும் மைனாவுக்குப் பிறகு புதுமுக ஹீரோ நடித்து வெற்றிப் பெற போவதும் இந்தப் படம் தான் என்றும் சுசீந்திரன் கூறியுள்ளார்.
நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த இளைஞர் ஒருவருடைய வாழ்வில்,ஏற்படும் விபத்து, அதோடு தொடர்புடைய சட்ட சிக்கல்கள், அதனால் ஏற்படும் பிரச்சனைகள் உள்ளிட்டவற்றை கூறும் வகையில் இந்த படம் உருவாகியுள்ளது.
அரசு போக்குவரத்துத்துறையில் உள்ள அவலங்களையும் இந்த படம் எடுத்துக்கூறும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. மயானக்கொள்ளை உள்ளிட்ட உண்மை நிகழ்வுகளும் இப்படத்தில் காட்சியாக்கப்பட்டுள்ளது.
தோழர் வெங்கடேசன் படத்திற்கு வேதா செல்வம் ஒளிப்பதிவு செய்துள்ளார். சகிஷ்னா இப்படத்தின் மூலம் இசையமைப்பாளராக அறிமுகமாகியுள்ளார். இத்திரைப்படத்திற்கு கதை, திரைக்கதை, வசனம், பாடல்கள் எழுதி இயக்கியதோடு ராஜேஷ் கண்ணாவோடு இணைந்து எடிட்டிங் வேலையிலும் ஈடுபட்டிருக்கிறார் இயக்குனர் மகாசிவன்.


Click it and Unblock the Notifications











