கந்துவட்டிக்கு எதிரான 'பொதுநலன் கருதி' பட இயக்குனருக்கு மிரட்டல்!
கந்துவட்டி கொடுமைக்கு எதிராக படம் எடுத்த இயக்குனர் சீயோனுக்கு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை: கந்துவட்டி கொடுமைக்கு எதிராக 'பொதுநலன் கருதி' என்ற படத்தை எடுத்த இயக்குனர் சீயோனுக்கு மர்ம நபர்கள் மிரட்டல் விடுத்துள்ளனர்.
ஏ.வி.ஆர். ப்ரொடக்ஷன்ஸ் சார்பில் அன்புவேல்ராஜ் தயாரித்துள்ள படம் 'பொதுநலன் கருதி'. கந்துவட்டி கொடுமைக்கு எதிராக பேசும் இந்த படத்தை அறிமுக இயக்குனர் சீயோன் இயக்கியுள்ளார்.

இதில் சந்தோஷ், ஆதித், சுபிக்ஷா, கருணாகரன், இமான் அண்ணாச்சி உள்ளிட்டோர் நடித்துள்ளனர். படத்தை ஜூலை மாதம் இறுதியில் வெளியிட திட்டமிட்டுள்ளனர்.
இந்நிலையில், படக்குழுவினர் சென்னையில் செய்தியாளர்களை சந்தித்தனர். அப்போது பேசிய இயக்குனர் சீயோன், படத்தை வெளியிடக் கூடாது என மர்ம நபர்கள் மிரட்டல் விடுப்பதாகக் கூறினார்.
இதுதொடர்பாக அவர் கூறியதாவது, " கந்துவட்டி கொடுமையால் திருநெல்வேலி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இசக்கிமுத்து என்பவர் குடும்பத்துடன் தற்கொலை செய்துகொண்ட சம்பவம் என்னை மிகவும் பாதித்தது. இதேபோல ஏற்கனவே இரண்டு சம்பவங்களை நான் நேரில் பார்த்து பாதிப்படைந்தேன்.
அதன் பிறகு தான் இதை பற்றி படம் எடுக்க வேண்டும் என தீர்மானித்து, சுமார் ஆறு மாதங்கள் ஆய்வு செய்தேன். அப்போது தான் கந்துவட்டி மாஃபியா பற்றி தெரியவந்தது. இதையடுத்து, தயாரிப்பாளர் அன்புவேல்ராஜன் ஒத்துழைப்புடன், இந்த படத்தை எடுத்துள்ளேன்.
கந்துவட்டிக்கு எதிரான ஒரு பதிவாக இந்த படம் இருக்கும். இதனால் இப்போதே எனக்கு மிரட்டல் வர தொடங்கிவிட்டது. என்ன மிரட்டல் விடுத்தாலும் நான் இதுபோன்ற படங்களை தான் எடுப்பேன். அதற்காக என்னை சமூகவிரோதி என சொன்னாலும் பரவாயில்லை.
தமிழ் சினிமா இன்று கார்ப்பரேட்களின் கையில் சென்றுவிட்டது. தமிழர்களுக்காக படம் எடுக்க யாருமில்லை. பொதுநலன் கருதி கார்ப்பரேட்டுக்கு எதிரான படம்" இவ்வாறு அவர் தெரிவித்தார்.


Click it and Unblock the Notifications











