வாத்திதான் நம்பர் 1.. தெறிக்கவிடும் வியூஸ்.. உற்சாகத்தில் தனுஷ்
சென்னை: வாத்தி படத்தின் ட்ரெய்லர் மூன்று மில்லியன் பார்வைகளை கடந்து யூட்யூப் ட்ரெண்டில் முதலிடத்தில் இருக்கிறது. இதனால் தனுஷும், அவரது ரசிகர்களும் உற்சாகத்தில் இருக்கின்றனர்.
துள்ளுவதோ இளமை படம் மூலம் அறிமுகமான தனுஷ் காதல் கொண்டேன் படத்தின் மூலம் சிறந்த நடிகர் என்ற பெயரைப் பெற்றார். இதனையடுத்து அவர் நடித்த பல படங்கள் ஹிட்டாக கோலிவுட்டிலிருந்து பாலிவுட் சென்று தற்போது ஹாலிவுட்வரை சென்றிருக்கிறார்.

ஆடுகளத்தில் புகுந்து விளையாடிய தனுஷ்
தமிழில் சிறந்த நடிகர் என்ற பெயரைப் பெற்றாலும் ஆடுகளம் படம் மூலம் அவர் தேசிய அளவில் அங்கீகாரத்தை பெற்றார். அந்தப் படத்தில் நடித்ததற்காக அவருக்கு சிறந்த நடிகருக்கான தேசிய விருது வழங்கப்பட்டது. அங்கிருந்து அவரது கிராஃப் உச்சம் சென்றது.

எதுவாக இருந்தாலும் அதுவாகவே மாறும் தனுஷ்
பக்கத்து வீட்டு பையன் போல் இருந்த தனுஷ் ஆடுகளம் படத்துக்கு பிறகு தனது நடிப்பை மேலும் மெருகேற்றிக்கொண்டார். எந்தக் கதாபாத்திரத்தை கொடுத்தாலும் அந்தக் கதாபாத்திரமாகவே எளிதில் மாறும் தன்மையை வளர்த்தார். இதனால் அவர் நடித்த பெரும்பாலான படங்கள் ரசிகர்களை கவர்ந்தன.

சறுக்கலில் இருந்து மீண்ட தனுஷ்
கோலிவுட், பாலிவுட் என தொடர்ந்து ஹிட் கொடுத்துவந்த தனுஷுக்கு கடந்த சில வருடங்கள் சிறப்பானதாக அமையவில்லை. இப்படிப்பட்ட சூழலில் கடந்த ஆண்டு வெளியான திருச்சிற்றம்பலம் படம் பெரும் வரவேற்பைப் பெற்று தனுஷுக்கு கம்பேக்காக அமைந்தது.

வாத்தி தனுஷ்
இந்த ஹிட்டை தக்கவைத்துக்கொள்ள முடிவெடுத்த தனுஷ் பார்த்து பார்த்து கதைகளை தேர்ந்தெடுத்துவருகிறார். அந்தவகையில் அவர் தற்போது வெங்கி அட்லூரி இயக்கத்தில் வாத்தி படத்தில் நடித்திருக்கிறார். இந்தப் படம் கல்வியை மையப்படுத்தி சமூக நோக்கோடு எடுக்கப்பட்டிருப்பதாக தெரிகிறது. இதற்கிடையே அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் கேப்டன் மில்லர் என்ற பீரியட் படத்திலும் நடித்துவருகிறார்.

மாஸ் காட்டும் வாத்தி ட்ரெய்லர்
வாத்தி படத்தின் படப்பிடிப்பு முடிந்து இறுதிக்கட்ட பணிகள் மும்முரமாக நடந்துவருகின்றன. படம் பிப்ரவரி 17ஆம் தேதி வெளியாகவுள்ளது. இப்படத்தின் ட்ரெய்லர் நேற்று முன் தினம் வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது. ட்ரெய்லரை பார்த்த ரசிகர்கள் தனுஷுக்கு வயதே ஆகாதா என்றும் சமூக வலைதளங்களில் பேசிவருகின்றனர்.

யூட்யூபில் வாத்திதான் நம்பர் 1
இந்நிலையில் வாத்தி படத்தின் ட்ரெய்லரை இதுவரை 3 மில்லியனுக்கும் அதிகமானோர் பார்த்திருக்கின்றனர். மேலும், யூட்யூப் ட்ரெண்டில் வாத்தி பட ட்ரெய்லர் முதலிடத்தில் இருந்துவருகிறது. வாத்தி படம் மீது தனுஷ் ரசிகர்கள் மட்டுமின்றி தனுஷே மிகப்பெரிய எதிர்பார்ப்பை வைத்திருப்பதாக கூறப்படுகிறது.
திருச்சிற்றம்பலம் கொடுத்த ஹிட்டை வாத்தியிலும் தொடர முடிவெடுத்திருக்கும் தனுஷுக்கு இப்படத்தின் ட்ரெய்லர் பெற்றிருக்கும் ரெஸ்பான்ஸ் மிகப்பெரிய நம்பிக்கையை கொடுத்திருக்கும்.


Click it and Unblock the Notifications











