தமிழ் சினிமாவை காப்பாற்றிய 3 படங்கள்.. 2024ன் முதல் பாதிதான் இப்படி.. 2ஆம் பாதியாவது தப்பிக்குமா?
சென்னை: தமிழ் சினிமாவில் கடந்த சில வருடங்களாகவே வரும் படங்கள் ரசிகர்களை கவரவே இல்லை; வசூல் ரீதியாகவும் சரியாக போகவில்லை என்ற பேச்சு பலமாகவே எழுந்திருக்கிறது. அதேசமயம் மலையாளத்தில் வரும் சினிமாக்கள் தமிழ்நாட்டில் சக்கைப்போடு போடுகின்றன. அதற்கு காரணம் அவர்கள் கதைக்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள்; இங்கு கொடுக்கப்படுவதில்லை என்று தான் பெரும்பாலானோர் கூறுகின்றனர். ஆனால் இந்த வருடத்தின் முதல் பாதியில் தமிழ் சினிமா தப்பித்தது என்றே சொல்லலாம்.
தென் மாநிலங்களின் சினிமா தலைநகரமாக விளங்கியது ஒரு காலத்தில் சென்னைதான். கேரளா, கர்நாடகா, ஆந்திரா உள்ளிட்ட பக்கத்து மாநிலங்களிலிருந்து எல்லாம் இங்கு வந்து ஷூட்டிங் நடத்திவிட்டு செல்வார்கள். வெறும் ஷூட்டிங் மட்டுமின்றி இங்கு எடுக்கப்பட்ட படங்களை அங்கு ரீமேக் செய்து (பெரும்பாலும் தெலுங்கு, கன்னட திரையுலகில் ஹிட் பார்த்த வரலாறும் உண்டு. வாலி, சூர்யவம்சம், களவாணி, சேது உள்ளிட்ட ஏராளமான படங்கள் டோலிவுட், சாண்டல்வுட்டில் ரீமேக் செய்யப்பட்டு தங்கள் மூச்சை இழக்காமல் பார்த்துக்கொண்டனர்.

திணறிய தமிழ் சினிமா: ஆனால் காலம் செல்ல செல்ல நிலைமை தலைகீழாக மாறியது. கடந்த சில வருடங்களாகவே வேற்று மொழி படங்கள் தமிழ் சினிமாவை ஆக்கிரமித்துக்கொண்டிருக்கின்றன. குறிப்பாக 2022, 2023ஆம் ஆண்டுகளில் சொல்லிக்கொள்ளும்படி தமிழில் படங்கள் பெரிதாக வெல்லவில்லை. விக்ரம், ஜெயிலர், துணிவு உள்ளிட்ட படங்கள் வெற்றி படங்கள் என்ற லிஸ்ட்டில் வைக்கப்பட்டாலும் விமர்சன ரீதியாக கொண்டாடப்படவில்லை. அதேசமயம் மலையாளம், தெலுங்கு, கன்னட படங்கள் விமர்சன ரீதியாகவும் கொண்டாடப்பட்டு வசூல் ரீதியாகவும் சக்கைப்போடு போட்டன.
2024ஆம் ஆண்டு முதல் பாதி: சூழல் இப்படி இருக்க தமிழ் சினிமா எப்போது மீண்டும் எழுந்து நிற்கும் என்று ரசிகர்களும், திரை ஆர்வலர்களும் எதிர்பார்த்தனர். அவர்களின் எதிர்பார்ப்பை 2024ஆம் ஆண்டின் முதல் பாதி பூர்த்தி செய்திருக்கிறது. இந்த வருடத்தின் தொடக்கத்தில் வெளியான அயலான், கேப்டன் மில்லர் ஆகிய இரண்டு படங்களுமே கிட்டத்தட்ட 100 கோடி ரூபாய்வரை வசூல் செய்திருக்கின்றன.அதேசமயம் விமர்சன ரீதியாக கொண்டாடப்படவில்லை என்பதுதான் உண்மை. சினிமா ஆரோக்கியமாக இருப்பதற்கு வசூலை விடவும் கதைகள் முக்கியம் என்பது மறுக்க முடியாத ஒன்று ஆகும்.
அரண்மனை 4 டூ மகாராஜா: ஆரம்பம் சறுக்கினாலும் கடந்த சில மாதங்களில் வெளியான அரண்மனை 4, கருடன், மகாராஜா ஆகிய மூன்று படங்களுமே விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் பாசிட்டிவ் ரிசல்ட்டை பெற்றன. இந்த மூன்று படங்களுமே கிட்டத்தட்ட 50 கோடி ரூபாய் வசூலை தாண்டியிருக்கின்றன. முக்கியமாக சூரி கதாநாயகனாக நடித்த கருடன், விஜய் சேதுபதி கதாநாயகனாக நடித்த மகாராஜா ஆகிய இரண்டு படங்களுமே தமிழ் சினிமாவை உயிர்ப்பித்தது என்று சொல்லலாம். அதற்கு காரணம் ஸ்டார் வேல்யூ மட்டுமில்லை; படக்குழு தேர்ந்தெடுத்த கதைக்களமும், செய்த மேக்கிங்கும்.
திருப்பூர் சுப்ரமணியம்: 2024ஆம் ஆண்டின் முதல் பாதியில் தமிழ் சினிமாவின் நிலவரம் குறித்து பேசிய விநியோகஸ்தர் திருப்பூர் சுப்ரமணியம், "கடந்த ஆறு மாதங்களகவே தமிழ் சினிமா ஆரோக்கியமாக இல்லை. அரண்மனை 4, கருடன், மகாராஜா ஆகிய மூன்று படங்களை தவிர்த்து வேறு எந்தப் படத்தை ஹிட் என்று கூறிவிட முடியாது. பாக்ஸ் ஆபிஸ் நிலவரம் நன்றாக இருக்க வேண்டுமென்றால் நல்ல படஙக்ள் வெளியாக வேண்டும். முக்கியமாக படத்தின் கதை நன்றாக இருந்தால்தான் ஒவ்வொருவரும் படம் பார்க்க வருவார்கள். இப்படியே சென்றால் அடுத்த வருடத்தில் திரையரங்குகளை இழுத்து மூட வேண்டியதுதான்" என்கிறார் அதிர்ச்சியாக.
ஆறு மாதங்களில் மூன்று படங்கள்தான்: அதேபோல் வெற்றி திரையரங்குகளின் உரிமையாளர் ராகேஷ் கௌதமன் கூறுகையில், "கடந்த ஆறு மாதங்களில் அரண்மனை 4 படம்தான் தயாரிப்பாளரிலிருந்து விநியோகஸ்தர்வரை அனைவருக்கும் நல்ல லாபத்தை கொடுத்தது. அதேபோல் கருடன், மகாராஜாவும் அப்படித்தான் இருந்தது. இந்த மூன்று படங்களின் பட்ஜெட்டையும், வசூலையும் ஒப்பிடும்போது வசூல் அதிகமாக இருந்தது. தமிழ்நாடு மட்டுமின்றி வேறு தமிழ்நாட்டை தாண்டியும் இந்தப் படங்கள் நன்றாகவே ஓடின. முக்கியமாக அயலான், கேப்டன் மில்லருக்கு பிறகு மஞ்சும்மல் பாய்ஸும், கில்லி படத்தின் ரீ ரிலீஸும்தான் உதவின" என்றார்.
மகாராஜா தயரிப்பாளர்: இந்த விவகாரம் குறித்து மகாராஜா படத்தின் தயாரிப்பாளர் இதுகுறித்து பகிர்ந்துகொள்கையில், "நல்ல கதையோடு, குடும்பங்களை கவரும்வகையில் எந்த படம் வந்தாலும் அது ஒர்க் அவுட் ஆகும். இதற்கு முன்னதாக நல்ல கதை உள்ள படங்களை பார்க்க தமிழ் ரசிகர்கள் வருவார்களா என்ற சந்தேகம் கொஞ்சம் இருந்தது. ஆனால் நல்ல கதை இருந்தால் கண்டிப்பாக படத்தை ரசிகர்கள் கைவிட மாட்டார்கள் என்பது சமீபகாலத்தில் உணர்த்தப்பட்டுள்ளது . முக்கியமாக வேற்று மொழி படமாக இருந்தாலும் நல்ல கதை இருந்தால் அதனை தியேட்டருக்கு வந்து பார்க்கிறார்கள். நமது வேலை எல்லாம் மக்களுக்கு நல்ல கதையுள்ள படங்களை கொடுக்க வேண்டும். அப்படி கொடுத்தால் பாக்ஸ் ஆபிஸை அவர்கள் நன்றாக வைத்துக்கொள்வார்கள்" என்று பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.
ஒரு வருடத்துக்கு 200 படங்கள்: இவர்களைத் தொடர்ந்து பேசியிருந்த கருடன் படத்தின் இயக்குநர் துரை செந்தில்குமார், "ஒவ்வொரு வருடமும் தமிழில் சுமார் 200 படங்கள் ரிலீஸாகின்றன. அவற்றில் 50 படங்கள்தான் ஹிட்டாகின்றன. இந்த வருடத்தின் முதல் ஆறு மாதங்களில் நிறைய படங்கள் வெளியாகவில்லை என்பதை ஒத்துக்கொள்கிறேன். ஆனால் அடுத்த ஆறு மாதங்களுக்கு நிறைய படங்கள் ரிலீஸாகவிருக்கின்றன. பெரிய படங்களும் வருகின்றன. எனவே அடுத்த பாதியில் தமிழ் சினிமா இன்னும் வளரும் என்று நினைக்கிறேன்" என்றார்.
2024ஆம் ஆண்டின் முதல் பாதியில் மூன்று படங்கள் மட்டுமே தேறியிருக்கின்றன. அடுத்த பாதியில் இந்தியன் 2, வேட்டையன், GOAT,விடாமுயற்சி, கங்குவா என பெரிய ஹீரோக்கள் நடித்த படங்களும், மற்ற படங்களும் வெளியாகவிருக்கின்றன. எனவே முதல் பாதி போல் இல்லாமல் அடுத்த பாதியிலாவது ரிலீஸாகும் படங்கள் கதைகளை மையப்படுத்தி வந்து கொண்டாடப்படுமா? இல்லை ஹீரோக்களின் துதி மட்டும் பாடி காணாமல் போய்விடுமா என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


Click it and Unblock the Notifications











