Yuvan on Bhavatharini: எனக்கு மியூசிக் தெரியாது.. அக்காதான் சொல்லிக் கொடுத்தாங்க.. யுவன் நெகிழ்ச்சி!
சென்னை: பிரபல பின்னணி பாடகி பவதாரிணியின் மரணம் கோலிவுட்டில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தன்னுடைய தனித்தன்மையான வாய்சால் ரசிகர்களை கட்டிப் போட்ட பவதாரிணி, இசையமைப்பாளராகவும் மாஸ் காட்டினார். தன்னுடைய அப்பாவின் வழியில் தன்னுடைய அண்ணன்களை போலவே இவரும் இசையமைப்பாளராகவும் சிறப்பான பயணத்தை மேற்கொண்டார். தேசிய விருது பாடகியாகவும் இசையமைப்பாளராகவும் குடும்பத் தலைவியாகவும் பன்முகம் காட்டிவந்த பவதாரிணி இன்று நம்மிடையே இல்லை. இந்த உண்மையை ஏற்றுக் கொள்ள முடியாமல் அவரது ரசிகர்கள் தவித்து வருகின்றனர்.
நடிகை ரேவதியில் இயக்கத்தில் மித்ர மை பிரண்ட் என்ற படத்தின்மூலம் இசையமைப்பாளராக அறிமுகம் ஆன பவதாரிணி, தொடர்ந்து 10 படங்களில் இசையமைப்பாளராக பணியாற்றியுள்ளார். இறக்கும் தருவாயிலும் 3 படங்களுக்கு இசையமைத்து வந்தார். அவருக்கு ஏற்பட்ட உடல்நலக்குறைவு காரணமாக அவருக்கு அடுத்தடுத்த சிகிச்சைகளை கொடுத்து தேற்றிவிடலாம் என்றுதான் அவரது குடும்பத்தினர் அவரை இலங்கைக்கு அழைத்து சென்றனர். ஆனால் அவருக்கு சிகிச்சை பலனளிக்கவில்லை. அவரது இழப்பை ஈடு செய்ய முடியாது என்று பலரும் வருத்தம் தெரிவித்து வருகின்றனர். அவரது குடும்பத்தினர் இடிந்து போயுள்ளனர்.

பின்னணி பாடகி பவதாரிணி: தன்னுடைய தேனினும் இனிய குரலால் ஏராளமான ரசிகர்களை கட்டிப் போட்டவர் பவதாரிணி. சிறப்பான குரலுக்கு சொந்தக்காரராக இருந்தாலும் அதிகமான பாடல்களை பாடாமல் தேர்ந்தெடுத்த பாடல்களை தன்னுடைய தந்தை மற்றும் சகோதரர்கள் இசையில் பாடியுள்ளார் பவதாரிணி. மேலும் தேவா, சிற்பி இசையிலும் சில பாடல்களை பாடியுள்ளார். மிகப்பெரிய இசை ஆளுமையின் மகளாக பிறந்ததால் இவரை அணுக இசையமைப்பாளர்களிடையே தயக்கம் இருந்தது தான் பவதாரிணி அதிகமான பாடல்களை பாடாததற்கு காரணம் என்று கூறப்படுகிறது. இருந்தாலும் தன்னுடைய பாடல்களால் இவர் ஏராளமான ரசிகர்களை கவர்ந்துள்ளார்.
இசையமைப்பாளராக சிறப்பு: மேலும் இசையமைப்பாளராகவும் சில படங்களில் பணியாற்றி தன்னை சிறப்பான இசையமைப்பாளராக நிலைநிறுத்தியவர் பவதாரிணி. தமிழில் மட்டுமில்லாமல் தெலுங்கு, கன்னடம் மற்றும் இந்தியிலும் இவர் படங்களுக்கு இசையமைத்துள்ளார். தற்போது இந்த இசைக்குயில் நம்மிடையே இல்லை என்றபோதிலும் அவரது குரலில் வெளியான பாடல்கள் மட்டுமே ரசிகர்களுக்கு ஆறுதல். அவரது பழைய இன்டர்வியூக்கள், வீடியோக்கள் உள்ளிட்டவற்றை சமூக வலைதளங்களில் வெளியிட்டும் ரசிகர்கள் ஆறுதல் தேடி வருகின்றனர். அந்த வகையில் பவதாரிணி குறித்த யுவன் சங்கர் ராஜாவின் பழைய இன்டர்வியூவும் வைரலாகி வருகிறது.

இசை கற்றுத்தந்த பவதாரிணி: இளையராஜா மிகப்பெரிய இசையமைப்பாளராக இருந்தபோதிலும் கார்த்திக் ராஜா மற்றும் பவதாரிணி மட்டுமே முறைப்படி இசை பயின்றவர்கள். யுவன் சங்கர் ராஜா முறைப்படி இசை கற்கவில்லை என்று அவர் தனது பேட்டியொன்றில் கூறியுள்ளார். இதையடுத்து தன்னுடைய கைபிடித்து பியானோவில் வைத்து சொல்லிக் கொடுத்தவர் தன்னுடைய அக்கா பவதாரிணிதான் என்றும் அவர் தெரிவித்துள்ளார். நீ வாசி என்று தனக்கு தன்னம்பிக்கை கொடுத்ததும் பவதாரிணிதான் என்றும் அவர் நெகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இந்த அளவிற்கு தன்னுடைய தம்பிமீது பவதாரிணி பாசத்தை பொழிந்தநிலையில் தற்போது அவரின் இழப்பு யுவன் சங்கர் ராஜாவையும் நிலை குலைய செய்துள்ளது.
இசையின் துவக்கம்: இளையராஜாவை தொடர்ந்து யுவன் சங்கர் ராஜா முன்னணி இசையமைப்பாளராக இருந்து வருகிறார். அவருக்கு பவதாரிணிதான் இசையின் துவக்கத்தை ஏற்படுத்தியுள்ளார் என்ற யுவனின் பேட்டி ரசிகர்களையும் நெகிழ்ச்சிக்குள்ளாக்கியுள்ளது. பவதாரிணியின் இழப்பு ஒட்டுமொத்த குடும்பத்தினரையும் பரிதவிக்க வைத்துள்ளது. குடும்பத்தினர் மட்டுமில்லாமல் கோலிவுட்டின் பல பிரபலங்கள் பவதாரிணியின் இழப்பை ஜீரணிக்க முடியாமல் உள்ளனர். அதிர்ந்துகூட பேசாதவர் பவதாரிணி என்று பேசி வருகின்றனர். இளையராஜா மற்றும் அவரது குடும்பத்தினருக்கு ஆறுதல் சொல்லும் வழி தெரியாமல் உள்ளனர். காலம் ஒன்றே அனைத்து காயங்களுக்கும் மருந்தாக அமையும் என்றும் கூறி வருகின்றனர்.


Click it and Unblock the Notifications











