கைமாறு.. கமல்ஹாசனுக்காக நடுரோட்டில் நின்ற அசோக் செல்வன்.. அசோக் செல்வனுக்காக கட்சி ஆரம்பித்த கமல்ஹாசன்!
சென்னை: உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் உருவாகியுள்ள தக் லைஃப் படம் அவரது 234 வது படம். இந்த படத்தை அவரது ராஜ் கமல் நிறுவனம் இயக்குநர் மணிரத்னத்தின் மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனத்துடன் இணைந்து தயாரித்துள்ளது. படம் வரும் ஜூன் 5ஆம் தேதி உலகம் முழுவதும், தமிழ், மலையாளம், கன்னடம், தெலுங்கு மற்றும் ஹிந்தி என ஐந்து மொழிகளில் வெளியாக உள்ளது. படத்தின் இசை வெளியீட்டு விழா நேற்று அதாவது மே 24ஆம் தேதி நடைபெற்றது. இதில் படக்குழுவினர் கலந்து கொண்டு பல்வேறு விஷயங்களை பகிர்ந்து கொண்டனர்.
இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள படமான தக் லைஃப் படம் வரும் ஜூன் மாதம், 5ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. கமல்ஹாசன், சிம்பு, த்ரிஷா, அபிராமி, நாசர், ஐஸ்வர்யா லட்சுமி, அசோக் செல்வன், ஜோஜு ஜார்ஜ், வடிவுக்கரசி உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். படத்திற்கு ஏ.ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார்.
நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நடிகர் அசோக் செல்வன் பேசுகையில், " கமல் சார் தன்னை சினிமாவின் மாணவன் என்று கூறுகிறார். நானும் அவரைப்போல சினிமாவின் மாணவன் தான். ஆனால் என்னுடைய சினிமா கமல் சார் தான். விஸ்வரூபம் படத்தின் பிரச்னை நடந்த போது கமல் சாரின் வீட்டின் முன்னால் திரண்டவர்களில் நானும் ஒருவன். அப்படி இருந்த நான் இன்றைக்கு அவரது படத்தில் அவருடன் நடித்திருக்கிறேன் என்பது மகிழ்ச்சியாக உள்ளது.

உதவி இயக்குநர்: மணிரத்னம் சாரின் கடல் படத்தில் நடிக்க ஆடிஷன் நடைபெற்றது. அப்போது நானும் ஆடிஷனில் கலந்து கொள்ளலாம் என்று போனேன். ஆனால் அந்த கதாபாத்திரத்திற்கு ஆள் எடுத்துவிட்டார்கள். அதன் பின்னர், நன்கு தமிழ் தெரிந்த உதவி இயக்குநர்கள் தேவை என்று அறிவிப்பு வந்தது. நான் மணி சாரிடம் உதவி இயக்குநராக சேரலாம் என்று அவரது அலுவலகத்திற்குச் சென்றேன். அங்கு சென்றதும், ஒரு பாடலைச் சொல்லி, அது எந்த இலக்கியத்தில் உள்ளது என்று கேட்டார்கள். எனக்குத் தெரியாது என்று கூறினேன். உடனே, நீ கிளம்பு தம்பி, இங்கு இருப்பவர்களுக்கு நன்றாகவே தமிழ் பேசத் தெரியும் என்று கூறி அனுப்பிவிட்டார்கள்" என்று பேசினார். அவரது பேச்சு பலரது கவனத்தை ஈர்த்தது.
அசோக் செல்வனுக்கு நன்றி: இப்படி இருக்கும்போது, அதன் பின்னர் பேசிய உலக நாயகன் கமல்ஹாசன், " அசோக் செல்வன் பேசும்போது குறிப்பிட்டார், விஸ்வரூபம் படத்தின் பிரச்னையின் போது எனது வீட்டின் முன்னால் நின்றார் என்று. அவருக்கும் அவரைப் போன்றவர்களுக்கும் நான் எப்படி நன்றி சொல்வது? அவருக்கும் அவரைப் போன்றவர்களுக்கும் நன்றி சொல்லத்தான் கட்சி ஆரம்பித்தேன். நான் இப்போது சினிமாவில் சம்பாதிக்கும் பணத்தை பாதியை சினிமாவுக்கும் பாதியை எனது கட்சிக்கும் செலவு செய்கிறேன்.

அரசியல்: எனது கட்சி என்னைப் போன்றவர்களால் ஆனது. நாங்கள் வேலை செய்து, அதன் மூலம் பணம் சம்பாதித்து, அதை மக்கள் சேவைக்காக பயன்படுத்துகிறோம். எனக்கு எம்.எல்.ஏ., எம்.பி போன்ற பதவிகள் மீது விருப்பம் இல்லை. ஆனால் நாங்கள் ஒரு எம்.எல். ஏ ஒரு தொகுதியில் செய்ய வேண்டிய விஷயங்களை படிப்படியாக செய்து வருகிறோம்" என்று பேசினார். இவரது பேச்சு பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.


Click it and Unblock the Notifications











