Thug Life Audio Launch: நானே ஒரு பிட்டு.. தன்னைத் தானே விமர்சித்துக் கொண்ட கமல்ஹாசன்.. ஏன் இப்படி சொல்றாரு?
சென்னை: இயக்குநர் மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள படமான தக் லைஃப் படம் வரும் ஜூன் மாதம், 5ஆம் தேதி ரிலீஸ் ஆகவுள்ளது. கமல்ஹாசன், சிம்பு, த்ரிஷா, அபிராமி, நாசர், ஐஸ்வர்யா லட்சுமி, அசோக் செல்வன், ஜோஜு ஜார்ஜ் உள்ளிட்ட பலர் நடித்துள்ளார்கள். படத்திற்கு ஏ.ஆர் ரகுமான் இசையமைத்துள்ளார். படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று அதாவது மே 24ஆம் தேதி சென்னை புறநகர் பகுதியில் உள்ள கல்லூரியில் நடைபெற்றது.
இதில் கலந்து கொண்டு பேசிய படத்தின் நாயகன் உலகநாயகன் கமல்ஹாசன் பேசுகையில் பல விஷயங்களைப் பகிர்ந்து கொண்டார். குறிப்பாக தக் லைஃப் படத்தில் பணியாற்றிய நடிகர்கள் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் குறித்து மிகவும் சிலாகித்து பேசினார். ஒவ்வொருவர் குறித்தும் தனித்து குறிப்பிட்டு பேசினார். படத்தில் மொத்தம் 9 பாடல்கள் இடம் பெற்றுள்ளது. இந்த 9 பாடல்களையும் இசை வெளியீட்டு விழாவில் அரங்கேற்றம் செய்தனர். 9 பாடல்களும் அரங்கேற்றம் செய்த பின்னர் கமல்ஹாசன் பேசினார்.
அவர் பேசுகையில், " நான் இந்த இடத்தில் பலருக்கு நன்றி சொல்ல வேண்டியுள்ளது. இந்த படத்தை கடந்து இயக்குநர் கே. பாலச்சந்தர், எனது அண்ணன் சாரு ஹாசன் என இருவருக்கும் நான் நன்றி சொல்ல வேண்டும். தம்பி சிலம்பரசன் இந்த படத்தில் எவ்வளவு சிறப்பாக நடித்து உள்ளார்கள் என்பதை நான் பார்த்ததைப் போல் நீங்களும் பார்க்க வேண்டும். த்ரிஷா எப்போதும் அழகானவர். அவர் உருவத்தில் மட்டும் இல்லாமல், உள்ளேயும் மிகவும் அழகானவர். அவரும் இந்த படத்தில் சிறப்பாக நடித்துள்ளார்.

அரசியலுக்கு வரக் காரணம்: தம்பி அசோக் செல்வன் எனக்கு சிறுவயதில் பார்த்த நாசரை நியாபகப் படுத்துகிறார். அவரும் எதிர்காலத்தில் இந்த சினிமாவில் பல சாதனைகள் புரிய வேண்டும். அசோக் செல்வன் சொன்னார் அல்லவா, விஸ்வரூபம் பட பிரச்னையின் போது எனது வீட்டின் முன்பு திரண்டவர்களில் அவரும் ஒருவர் என்று, அவருக்கு எல்லாம் நான் எப்படி கைமாறு செய்யப் போகிறேன் என்ற எண்ணத்தில்தான் நான் கட்சி தொடங்கினேன்.
அபிராமியே ஒரு அவதாரம்தான்: அபிராமி இப்போது ஜீவா என்ற அவதாரம் எடுத்துள்ளார். ஆனால் அபிராமி என்பதே அவதாரம்தான். குணா படம் பார்த்து ரசிகையாக மாறி, தனது பெயரை மாற்றிக் கொண்டார். அபிராமி இந்த படத்தில் நடித்துள்ள விதத்தைப் பார்த்துவிட்டு, டப்பிங்கின் போது பார்த்து, எனது டயலாக்குகளை விட்டுவிடுகிறேன். நான் பேசுவது எல்லாமே, காப்பி அடித்து தான் பேசுகிறேன்.

நானே பிட்டு தான்: அபிராமியை பிட்டு அடிக்கிறீர்களா என்று மணிரத்னம் கேட்டாரே, ஆனால் நானே பிட்டு தான். பள்ளிக்கூடத்துக்கு போகாத பையன், ஃபிலிம் இன்ஸ்டிடியூட்டுக்கு போகாத பையன், பிட்டு அடிக்காமல் வேறு என்ன செய்வான்? நான் சினிமாவுக்காக பிட்டு அடித்து, பிட்டு அடித்து, டாக்டர் பட்டம் வாங்கி விட்டேன். அந்த டாக்டர் பட்டத்தை எனது அக்காவிடம் நான் காட்டவேயில்லை. காட்டினால், பள்ளிக்கூடத்தில் படிக்கும் போது ஒழுங்காக படித்திருக்கலாம் என்று தலையிலேயே கொட்டுவார்கள். இந்த படம் கட்டாயம் உங்களுக்கு பிடிக்கும் என்று நம்புகிறேன். படத்திற்கு நீங்கள் அனைவரும் கொடுக்கும் ஊக்கம், எனது அடுத்த படம் குறித்த அறிவிப்பை விரைவில் வெளியிட உதவும்" என்று அவர் பேசினார். அவரது பேச்சு பலரது கவனத்தை ஈர்த்தது.


Click it and Unblock the Notifications











