Thug Life: டைட்டில் டீசருடன் சைலண்டான கமலின் தக் லைஃப்... ஷூட்டிங் இப்போதைக்கு இல்லையா..?
சென்னை: உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் மணிரத்னம் இயக்கவுள்ள திரைப்படம் தக் லைஃப். கமலுடன் த்ரிஷா, ஜெயம் ரவி, துல்கர் சல்மான், கெளதம் கார்த்திக் நடிக்கவுள்ள இந்தப் படத்தின் ஷூட்டிங் குறித்து தகவல் வெளியாகியுள்ளது.

கமலின் தக் லைஃப் ஷூட்டிங் அப்டேட்
உலக நாயகன் கமல்ஹாசன் தற்போது இந்தியன் 2, கல்கி படங்களில் பிஸியாக நடித்து வருகிறார். இதில் இந்தியன் 2 இரண்டு பாகங்களாக வெளியாகவுள்ளது குறிப்பிடத்தக்கது. இதனிடையே மணிரத்னம் உடன் கூட்டணி வைத்தார் கமல். நாயகன் படம் வெளியாகி 36 ஆண்டுகளுக்குப் பின்னர் கமல், மணிரத்னம் கூட்டணி இணைந்தது எதிர்பார்ப்பை எகிறச் செய்துள்ளது.
தமிழ் சினிமாவின் காட்ஃபாதர் என நாயகன் படத்தை ரசிகர்கள் கொண்டாடினர். அதனால் கமல் - மணிரத்னம் கூட்டணியில் உருவாகும் தக் லைஃப், இன்னொரு மேஜிக் மூவியாக இருக்கும் என ரசிகர்கள் கூறி வருகின்றனர். கமலுடன் த்ரிஷா, ஜெயம் ரவி, துல்கர் சல்மான், கெளதம் கார்த்திக் ஆகியோர் தக் லைஃப் படத்தில் கமிட்டாகியுள்ளார். இசைப்புயல் ஏஆர் ரஹ்மான் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார்.
KH 234 என தொடங்கப்பட்ட இந்தப் படத்தின் டைட்டில், தக் லைஃப் என கமல் பிறந்தநாளில் டீசருடன் அறிவிக்கப்பட்டது. அதில், "என் பேரு ரங்கராய சக்திவேல் நாயக்கன், நான் ஒரு கேங்ஸ்டர்" என செம்ம மிரட்டலாக மாஸ் காட்டினார் கமல்ஹாசன். இதன்மூலம் தக் லைஃப் கேங்ஸ்டர் ஜானர் படம் என்பது உறுதியாகியுள்ளது. அதேநேரம் இந்த டீசரில் ஜாதியை அடையாளப்படுத்தி வரும் வசனம் சர்ச்சையை ஏற்படுத்தியது.
KH 234 படம் பற்றிய முதல் அறிவிப்பு 2022 கமல் பிறந்தநாள் ஸ்பெஷலாக வெளியானது. அதன்பின்னர் இந்தாண்டு கமல் பிறந்தநாளில் KH 234 டைட்டில் தக் லைஃப் என அறிவிக்கப்பட்டது. அதோடு கமலுடன் நடிப்பவர்கள் பற்றிய தகவல்களையும் படக்குழு அபிஸியலாக அறித்தது. இதனால் தக் லைஃப் படத்தின் ஷூட்டிங் உடனடியாக தொடங்கும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால், இந்தியன் 2, கல்கி படப்பிடிப்பு முடிந்ததும் தான் தக் லைஃப் ஷூட்டிங் தொடங்கும் என சொல்லப்படுகிறது. இந்த இரண்டு படங்களின் ஷூட்டிங் முடியவே 2024 மார்ச் மாதம் ஆகிவிடும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அதன் பின்னர் கமல் மக்களவை தேர்தலில் பிஸியாகிவிடுவார் என்பதால், ஜூலை மாதம் தான் தக் லைஃப் ஷூட்டிங் தொடங்கும் என சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன. மேலும், இந்தப் படம் 2025 பொங்கலுக்கு வெளியாகலாம் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications











