Kamal Real Thug: மிரட்டலுக்கு அடிபணிபவரா கமல்? மொழி சர்ச்சையில் உடன் நிற்கும் அவரது வசனங்கள்!
சென்னை: நடிகர் கமல்ஹாசன் என்ற பெயர்தான் தற்போது டாக் ஆஃப் தி சிட்டியாக உள்ளது. அதுவும் அவரது தைரியம் ஒரு மாநிலத்தின் உயர் நீதிமன்றத்தையே கோபமடையச் செய்துள்ளது. உயர்நீதிமன்றம் மிரட்டும் தொணியில் கமல் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று சொல்லியும் கமல்ஹாசன் மன்னிப்பு கேட்காமல் அசராமல் நிற்கிறார். கமலின் இந்த தைரியத்தை பலரும் விமர்சிக்கிறார்கள், எதிர் கொட்டகையில் இருக்கும் பலரும் விமர்சிப்பதை காட்டிலும் தமிழ்நாடு பாஜகவைச் சேர்ந்த தமிழிசையும் கமல் ஹாசனை மன்னிப்பு கேட்கச் சொல்லுகிறார்.
கமல்ஹாசன் ஏன் மன்னிப்பு கேட்க வேண்டும், அவர் மன்னிப்பு கேட்காமல் இருப்பது தான் சரி என்று பலரும் கூறி வருகிறார்கள்.கமல்ஹாசனின் இந்த தைரியம், மன உறுதி, தக் லைஃப் படம் கர்நாடகாவில் ரிலீஸ் ஆகவில்லை என்றால் என்ன? படத்தின் தயாரிப்பாளர் நாம்தான், போனால் நமது பணம் தான் போகும். நஷ்டம் வந்தாலும் பார்த்துக் கொள்ளலாம், ஆனால் இந்த விஷயத்தில் மன்னிப்பு கேட்க கூடாது என்கிற அவரது மன உறுதி எத்தனை கதாநாயகர்களுக்கு வரும் என்று தெரியவில்லை.
தக் லைஃப் கர்நாடகாவில் ரிலீஸ் ஆகவில்லை என்றால், கர்நாடகாவின் கே.வி. என் நிறுவனம் தயாரித்து வரும் விஜய்யின் ஜனநாயகன் தமிழ்நாட்டில் ரிலீஸ் ஆகாது என்று பலரும் இணையத்தில் பேசி வருகிறார்கள். தன்னை சினிமா விவசாயி என்று அடையாளப்படுத்திக் கொள்ளும் கமல்ஹாசன் இந்த கருத்துடன் ஒத்துப் போக மாட்டார்.

தக் மொமெண்ட்ஸ்: இந்த சூழலில் கமல்ஹாசனின் சினிமா வசனங்களும் பாடல்களும் அவருக்கு நன்றாகவே ஒத்துப் போகின்றன. இன்னும் சொல்லப்போனால் அவை அவருக்கு உறுதுணையாக இருக்கிறது என்று கூட கூறலாம். அதாவது விருமாண்டி படத்தில் வரக்கூடிய, " மன்னிக்க தெரிந்தவன் மனிதன்.. மன்னிப்பு கேட்க தெரிந்தவன் பெரிய மனிதன் என்று ஒரு இடத்திலும் மன்னிக்க தெரிந்தவன் மனிதன் மன்னிப்பு கேட்க தெரிந்தவன் வீரன்.. நான் வீரன்.. நீ மனுசனா.." என்று கேட்பார். இந்த வசனத்தைப் போல் தன்னை பெரிய மனிதனாகவும், வீரனாகவும் காட்டிக் கொள்ள மன்னிப்பு கேட்கலாமே என்று பலரும் நினைக்கலாம். தவறு செய்திருந்தால் கமல்ஹாசன் மன்னிப்பு கேட்டிருப்பார். அவர் வரலாற்று உண்மையை பேசியுள்ளதால், மன்னிப்பு கேட்க முடியாது என்று பளிச்சென்று சொல்லிவிட்டார்.
பயம்னா என்னனு தெரியுமா?: அதேபோல், இந்த நெருக்கடியான சூழலுக்கு ஏற்றதைப் போல் குருதிப்புனல் படத்தில் கமல்ஹாசன் பேசும் மற்றொரு வசனத்தை கூறலாம். அதாவது, " வீரம்னா என்னனு தெரியுமா? பயம் இல்லாத மாதிரி நடிக்கிறது. உன்னோட பயத்தை உன் கண்ணுல பார்த்துட்டேன்" என இருக்கும். அதேபோல் விருமாண்டி படத்தில் இடம்பெற்றுள்ள மற்றொரு டயலாக், " பயம்னா என்னனு உங்க எல்லாருக்கும் தெரியும்.. எனக்கு அது என்னனு தெரியாது" என்று கமல்ஹாசன் பேசுவார்.

சுத்த தமிழ் வீரம்: அதேபோல் விக்ரம் படத்தில் கமல்ஹாசன் பேசக்கூடிய ஒரு வசனம், " இந்த மாதிரி நேரத்துல எல்லாம் வீரங்க எல்லாம் என்ன சொல்லுவாங்க தெரியுமா?... பாத்துக்கலாம்" என்று வரும். அதேபோல் தேவர் மகன் படத்தில் இடம்பெற்றுள்ள சாந்து பொட்டு ஒரு சந்தன பொட்டு" பாடலில் இடம்பெற்றுள்ள வரிகளான, " சுத்தத் தமிழ் வீரம்.. ரத்தத்துல ஊறும் சிங்கத் தமிழன்.. தங்கத் தமிழன்" என்று வரக்கூடிய வரிகளும் கமல்ஹாசன் எதிர்கொண்டு வரும் இந்த பிரச்னையில் அவரது எண்ண ஓட்டத்தை வெளிக்காட்டி வரும் வசனங்களாகவும் பாடல் வரிகளாவும் உள்ளது. இது போல் நீங்கள் நினைக்கும் கமல்ஹாசன் வசனங்கள் மற்றும் பாடல் வரிகளை பிலிமி பீட் சமூக வலைதளப் பக்கங்களில் கமெண்ட் செய்யலாம்.


Click it and Unblock the Notifications











