Thug Life: மிரட்டுவது இங்க வேண்டாம்.. பணத்தை விட மானம் பெருசு.. மொழி குறித்து கமல் சொன்னதுக்கு இதோ ஆதாரம்!
சென்னை: கமல்ஹாசன் நடிப்பில் இன்று அதாவது ஜூன் 5ஆம் தேதி வெளியாகியுள்ள படம் தக் லைஃப். மணிரத்னம் இயக்க கமல்ஹாசனுடன் சேர்ந்து சிம்பு, த்ரிஷா, அபிராமி, நாசர், அசோக் செல்வன், வையாபுரி, ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள இந்த படத்தை கமல்ஹாசன் மற்றும் மணிரத்னம் இணைந்து தயாரிக்கவும் செய்துள்ளனர். ஏ.ஆர். ரகுமான் இசையில் உருவாகியுள்ள இந்த படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு இருந்தது.
இந்நிலையில் படம் கர்நாடகாவில் மட்டும் ரிலீஸ் செய்யப்படவில்லை. காரணம் தமிழ் மொழியில் இருந்து கன்னடம் பிறந்தது என்று கூறியதற்கு கன்னட அமைப்பினர் தொடங்கி கர்நாடக உயர்நீதிமன்றம் வரை கமல்ஹாசனை மிரட்டி பார்த்துவிட்டார்கள். ஆனால் கமல்ஹாசன் அசராமல் நிற்கிறார், அவர் அப்படித்தான் நிற்கவும் வேண்டும் என பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். இந்நிலையில் கமல்ஹாசன் கன்னட மொழி குறித்து பேசியதற்கு ஆதாரமாக தமிழ்நாடு அரசு பாடநூல் கழகத்தால் 7ஆம் வகுப்பு மாணவ - மாணவிகளுக்கு வழங்கப்படும் புத்தகத்தில் இடம் பெற்றுள்ளது.
கமல்ஹாசன் இசை வெளியீட்டு விழாவில் பேசும்போது, தமிழில் இருந்து தான் கன்னடம் பிறந்தது என பேசினார். இவரது இந்த பேச்சுதான் சர்ச்சையாக மாறி தற்போது பெரும் பிரச்னையாக வந்து நிற்கிறது. இவரது பேச்சுக்கு கன்னட அமைப்பினர், கர்நாடக முதலமைச்சர், துணை முதலமைச்சர், அமைச்சர்கள் உள்ளிட்ட பலரும் எதிர்ப்பு தெரிவித்தனர். மேலும் கமல்ஹாசன் மன்னிப்பு கேட்க வேண்டும் இல்லையென்றால் தக் லைஃப் படம் கன்னடத்தில் வெளியாக விட மாட்டோம் என்றனர். ஆனால், கமல்ஹாசன் மன்னிப்பு எல்லாம் கேட்க முடியாது என்று உறுதியாக சொல்லிவிட்டார்.

கமல்ஹாசனுக்கு மிரட்டல்: கர்நாடக உயர்நீதிமன்றம் கமல்ஹாசனை மிரட்டும் தொனியில் மன்னிப்பு கேட்கச் சொன்னது. ஆனால் கமல்ஹாசன் உறுதியாக முடியாது என்று கூறிவிட்டார். தமிழ்நாடு பாஜவைச் சேர்ந்த தமிழிசை சௌந்தரராஜன் கூட ஒரு மன்னிப்பு தானே கேட்க சொல்கிறார்கள். கமல் கேட்டால் என்ன என கன்னட அமைப்பினர் போல பேசினார். ஆனால் கமல்ஹாசன் பேசியது சரிதான் என பலரும் கருத்து தெரிவித்தார்கள்.
பாடப்புத்தகத்தில் உண்மை: தற்போது இணையத்தில் இணையவாசிகள் தமிழ்நாடு அரசு பாடநூல் கழகம் 7ஆம் வகுப்பு மாணவர்களுக்கு வழங்கிய புத்தகத்தில் இருந்து கமல் பேசியதற்கான ஆதாரத்தை பகிர்ந்து வருகிறார்கள். அதாவது, 7 ஆம் வகுப்பு தமிழ் புத்தகத்தில், " கன்னடம், தெலுங்கு மற்றும் மலையாளம் உள்ளிட்ட திராவிட மொழிகள் தமிழில் இருந்து பிரிந்து சென்ற கிளை மொழிகள் ஆகும்" என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

வரலாறு: தமிழ்நாடு அரசு மாணவர்களுக்கு வழங்கும் தமிழ் புத்தகத்தில் வரலாற்று ஆய்வாளர்கள், மொழியியல் வல்லுநர்கள், தொல்பொருள் ஆராய்ச்சியாளர்களின் ஆய்வு முடிவுகளின் அடிப்படையில்தான் மொழி குறித்த பாடம் உருவாக்கப்பட்டுள்ளது. எனவே இணையவாசிகள் கமல்ஹாசன் பேசியது சரி, அவர் மன்னிப்பு கேட்டு தனது தமிழ் மொழியை விட்டுக் கொடுக்காதது பாராட்டுக்குரியது என்று கூறி வருகிறார்கள். இயக்குநர் அமீர் போன்றவர்கள் கர்நாடகாவில் சில அமைப்புகள் இதனை வேண்டுமென்றே பிரச்னையாக மாற்றி வருகிறார்கள். ஐபிஎல் கொண்டாட்டத்தில் 11 பேரை கர்நாடகா இழந்துள்ளது, அவர்களுக்கு இது அஞ்சலி செலுத்தவேண்டிய நேரம் எனத் தெரிவித்துள்ளார்கள்.


Click it and Unblock the Notifications











