Kamal X Nani: போதும் சார் போதும்.. பழசை மனதில் வைத்து பேசிய கமல்ஹாசன்.. ரிப்ளை கொடுத்த நானி..
சென்னை: நடிகர் கமல்ஹாசன் நடிப்பில் அடுத்த வாரம் அதாவது ஜூன் 5ஆம் தேதி ரிலீஸ் ஆக உள்ள படம் தக் லைஃப். இந்த படத்தின் புரோமோசன் வேலைகள் மிகச் சிறப்பாக நடைபெற்று வருகிறது. கமல்ஹாசன் மட்டுமில்லாமல் மொத்த படக்குழுவும் புரோமோசன் வேலைகளில் செம பிஸியாக ஈடுபட்டு வருகிறார்கள். ஒரு நாளைக்கு பல புரோமோசன் வீடியோக்கள் வெளியாகிக் கொண்டே உள்ளது. இந்நிலையில் கமல்ஹாசன் அளித்த சமீபத்திய பேட்டியில் நடிகர் நானியின் பழைய பேட்டி ஒன்றினைக் குறிப்பிட்டு பேசினார். அதற்கு நானி தனது எக்ஸ் பக்கத்தில் பதிலும் கொடுத்துள்ளார்.
கமல்ஹாசனின் 234 வது படம் தக் லைஃப். இந்த படத்தை மணிரத்னம் இயக்கி உள்ளார். ஏ.ஆர். ரகுமான் இசையமைத்துள்ளார். படத்தில் கமல்ஹாசனுடன் சிம்பு, அபிராமி, த்ரிஷா, நாசர், அசோக் செல்வன் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள தக் லைஃப் படம் இன்னும் 8 நாட்களில் ரிலீஸ் ஆகவுள்ளது.

கமல்ஹாசன் ஓர் ஆச்சரியம்: இந்நிலையில் கமல்ஹாசன் அளித்துள்ள பேட்டியில் நடிகர் நானி ஒரு முறை அளித்த பேட்டியில் கமல்ஹாசனின் விருமாண்டி படம் குறித்து சிலாகித்து பேசியிருந்தார். நானி பேசியதை குறிப்பிட்டு பேசிய கமல்ஹாசன், நான் நானியின் பெயரைச் சொன்னால் போதும் நன்றி சொல்லத் தேவையில்லை என்று நினைக்கிறேன் என்று தெரிவித்துள்ளார். அதாவது நானி தனது பழைய பேட்டியில், " தனக்கு இப்போதும், ஆச்சரியமாக உள்ள விஷயம் விருமாண்டி படத்தில் கோர்ட் காட்சியில் கமல்ஹாசன் தூங்கிக் கொண்டு இருப்பார். தூக்கத்தில் இருந்து அவர் எழும்போது, தனது மீசையை சரி செய்து கொண்டு, வறண்டு போன வாயை சரி செய்வார். சினிமாவில் பலரும் தூக்கத்தில் இருந்து எழுந்து உள்ளார்கள். ஆனால் யாரும் அவரைப் போன்று நடித்ததில்லை. அவர் நடிக்கிறாரா என்று கூட என்னால் சொல்ல முடியவில்லை" என்று தெரிவித்திருந்தார்.
நானிக்கு நன்றி தேவையில்லை: இந்நிலையில், கமல்ஹாசன் அண்மையில் அளித்துள்ள பேட்டியில் நடிகர் நானி, விருமாண்டி குறித்து பேசியதை குறிப்பிட்டு பேசியுள்ளார். இது தொடர்பாக தொகுப்பாளர் நானியின் பெயரைக் குறிப்பிடாமல் கேள்வி எழுப்பியதும், உடனே கமல்ஹாசன் ' நானி' என்று நடிகர் நானியின் பெயரைக் குறிப்பிட்டார். மேலும் நானியின் பெயரை நான் சொன்னதற்கு காரணம் நன்றிகள் நானி என்று சொல்வதை விட பெரியது, நானி என்று அவரது பெயரைச் சொன்னாலே போதும் அவருக்கு. அதுபோலத்தான் இருக்க வேண்டும் நடிப்பும் சினிமாவும். நான் மனதில் என்ன நினைக்கிறேன் என்பதை ரசிகர்கள் புரிந்து கொள்வார்கள்" என்று தெரிவித்துள்ளார்.

போதும் சார் போதும்: கமல்ஹாசனின் இந்த பேட்டியை பார்த்த நடிகர் நானி, தனது எக்ஸ் பக்கத்தில் கமல்ஹாசனை டேக் செய்து "போதும் சார். போதும்" என்று பதிவிட்டு அதனுடன் சிவப்பு நிற இதயக் குறியையும் பதிவிட்டுள்ளார். அவரது இந்த பதிவு தற்போது இணையத்தில் வேகமாக பரவி வருகிறது. உலகநாயகன் கமல்ஹாசன் எப்போதுமே தமிழ் சினிமாவிற்கு மட்டுமில்லாமல் இந்திய சினிமாவுக்கு ஒரு முன் உதாரணமாக மொத்த சினிமாவின் இலக்கணமாக இருந்து வருகிறார். இவரது தக் லைஃப் படத்திற்காக ரசிகர்கள் ஆவலுடன் காத்துக் கொண்டு உள்ளார்கள். புரோமோசன்களில் கமல்ஹாசன் மிகவும் உற்சாகமாக உள்ளதால், படம் தரமாக இருக்கும் என ரசிகர்கள் நம்பிக்கையுடன் இருக்கிறார்கள்.


Click it and Unblock the Notifications











